குற்றம் காணின் சுட்டுவதும், நிறை காணின் ஷொட்டுவதும் மீடியாவின் மரபாமே என்று குட்டி (குட்டாத) கவிதை சொல்கிறது.
குற்றம் காணின் சுட்டுவதும், நிறை காணின் ஷொட்டுவதும் மீடியாவின் மரபாமே என்று குட்டி (குட்டாத) கவிதை சொல்கிறது.


நேற்றைய பதிவு நம்மில் சலனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் இல்லாமல் போனாலும் மழை அதன் பணியை செய்ய, மிகப்பெரும் திண்டாட்டமாகி போய்விட்டது அந்த குடியிருப்பு மக்களுக்கு.. பயந்தது போன்றே கிட்டத்தட்ட முழு குடியிருப்பும் மூழ்கிபோய் விட்டது என்றே சொல்லலாம். ஷாதி மஹாலுக்கு பின்புறமுள்ள கோட்டாறு தற்போது மனை பிரிவு போட்டு விற்கப்பட்டு விட்டதால் அங்கு சமபடுத்தப்பட்ட நிலத்தினால் வேறு வடிகால் இன்றி நீர் முழுதும் இந்த குடியிருப்பு நோக்கி பாய,... ஒரு வழியாக முத்துராஜா அவர்களின் முன்முயற்சியால் வாலிபர்கள் இணைந்து மணலை வெட்டி ஒழுங்கு படுத்தினார்கள். அங்கு வந்த மக்தூம் நானா அவர்கள் களத்தில் இறங்கி நீண்ட நேரம் நின்று வேலை வாங்கினார்கள். ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் நிலைமையை நேரில் வந்திருந்து பார்வையிட்டார். தொகுதி எம் எல் ஏ ஊரில் இருந்தும் வரவில்லை. அங்கிருந்த வாலிபர்களின் உடனடி நிதி திரட்டலில் நவாப்ஜான் நானா, (ஐநூறு) சுமையா ஹாஜா பக்ருதீன் நானா (ஐநூறு), மக்தூம் நானா (ஐநூறு), மற்றும் அய்மன் (இரநூற்றி ஐம்பது) கிடைத்தது. அதை கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அரை லிட்டர் பால் வாங்கி கொடுக்கப்பட்டது. ஏற்கனவே ஜமாஅத், குடியிருப்புவாசிகளில் சிலரை ஷாதி மஹாலில் குடியேற்றியும், தவ்ஹீத் நானா அவர்களின் முன்முயற்சியால் இரவு உணவு (பரோட்டா) ஏற்பாடு செய்யபட்டும் இருந்தது. ஏழைகளும் இந்த மழைக்காலத்தை நல்லபடியாக கழித்திட துஆ செய்வோம்.

தொடர் கனமழையாலும், வீசிக் கொண்டிருக்கும் கடும் காற்றாலும் பரங்கிப்பேட்டை மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
நமது வலைப் பூவில் கடந்த மார்ச் மாதம் பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது பற்றிய செய்தி பதிக்கப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

நம்மால் நடக்க முடியாது - இந்த குடியிருப்பின் நுழைவாயில்





சேரும் சகதியுமான வழிகள் அதையும் கடந்து போகும் சின்னசிறு பாதங்கள், பரிதவிப்பில் பெரியவர்கள், மூதாட்டிகள், வானம் பார்க்கும் கிழிந்த கூரைகள், மூடிவைக்கப்பட்ட அடுப்புகள், இந்த புகைப்படங்களை பார்ப்பவர்களால் உணர முடியாத நாற்றங்கள், இதனால் ஏற்படக்கூடிய வியாதிகளை பற்றி நம் மனதில் தோன்றும் கவலை...இன்னும், விளக்கி புரியாத விஷயங்கள் நிறைய பார்க்க முடிந்தது அங்கே...
சேற்று வழிகளை தாண்டி தாண்டி பள்ளிக்கு செல்லும் பிரயத்தனத்தில் புர்கா அணிந்த மாணவிகள்., தனது ஒழுகும் வீட்டில் சின்சியராக புத்தகத்தை புரட்டியவாறு இருந்த முஹமது பாரூக் எனும் இரண்டாவது படிக்கும் சிறுவர் மட்டுமே அங்கு நம்பிக்கை தரும் ஒரே factor.
இவை வெறும் பார்வைக்கு மட்டுமல்ல. எதனால் இப்படி என்ற சிந்தனைக்கு மட்டுமும் அல்ல. அதையும் தாண்டி .......
என்ன செய்ய போகிறோம்..?
மேட்டு தெருவில், மர்ஹூம் ஒலி முஹம்மது அவர்களின் மகனாரும், ஜெயினுல் கவுஸ், ஜூனைதுல் பக்தாத் ஆகியோர்களின் சிறிய தகப்பனாரும், அக்பர் அலி அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். மர்ஹூம் அவர்களின் ஹக்கில் துஆ செய்வோமாக.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல் : ஹம்துன் அஷ்ரப்
குமுதம் (05-11-08) அரசு பதில்களிலிருந்து.....
நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது? - முகம்மது அன்சாரி, தஞ்சை.
இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். "ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.
பரங்கிப்பேட்டை அகரம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் தங்கராசு (வயது நாற்பது) இவர் மரம்வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று ஊரில் உள்ள பனைமரம் ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தார். மரத்தை வெட்டியதும் அதை 2ஆக உடைத்தார். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. அதையடுத்து இரும்பு ஆப்பைவைத்து பெரிய சுத்தியலால் தங்கரசு அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக ஆப்பு விலகி தங்கராசு தொடையில் விழுந்து. உடன் தங்கராசுவின் தொடையில் உள்ள நரம்பு துண்டானது. இதில் ரத்தம் முழுவதும் வெளியேறியது. அதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே தங்கராசு பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவத்தால் அரசு மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது.
எதிர்பாராமல் உயிரிழந்த சகோதரின் இழப்பால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு வலைப்பூ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
பரங்கிபேட்டை கும்மத் பள்ளி தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். இஸ்மாயில் மரைக்காயர் அவர்களுடைய மகனாரும், கடலூர் ஒ.டி. இஷாக் மரைக்காயர் அவர்களுடைய மருமகனும் கும்மத் பள்ளி தெருவை மர்ஹூம் புஸ்தாமி அவர்களுடைய மைத்துனரும் ஆகிய எம். ஐ. இலியாஸ் அவர்கள் நேற்று இரவு மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில். அன்னாருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்களின் மறுமை நலன்களுக்காகவும் ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பரங்கிப்பேட்டை, கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்தில் கடந்த சிலவருடங்களாக தலைவர் எம். கவுஸ் ஹமீது அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது அவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதால், முன்னாள் நிர்வாகி எம்.கே. அபுல்ஹசன் அவர்கள் முன்னிலையில் 03.10.08 அன்று புதிய தலைவராக ஏ.எல். ஜாபர் சாதிக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக ஹெச்.எம். முஹம்மது காமில், பி. முபாரக் அஹமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக ஏ.ஹெச். இர்ஃபான் அஹமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாரம்பரியம் வாய்ந்த கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகத்திற்கு mypno வலைப்பூ சார்பிலும் கல்விக்குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.
பரங்கிபேட்டை வெள்ளாற்று பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் தேக்க நிலையில் இருப்பதை விரைந்து கட்டி முடிக்க கோரியும் பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை பரங்கிபேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெரு சந்திப்பில் கண்டன கூட்டம் நடந்தது.
கலைகழகம் நடத்திய கிராம அளவிலான போட்டிகளில், பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த நமது பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஹபீபா ஜுலைக்கா ஜமாலுதீன் அவர்கள், சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் முதல் பரிசை வென்றார். பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வு மற்றும் போட்டியிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி\ கட்டுரை போட்டி) பெரும்பாலும் முதலிடம் பிடிக்கும் இந்த மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்விலும் பள்ளி முதல் மாணவியாக வந்து நமது ஜமாஅத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கைகளால் சிறப்பு பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விலும் மாநிலத்திலேயே முதலிடம் பெற முயற்சித்து வருகிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லும் இந்த சகோதரி ஒரு டாக்டர் ஆகி தன் சமூகத்திற்கு சேவை புரிவதை தனது லட்சியக்கனவாக கொண்டுள்ளார். (இன்ஷா அல்லாஹ்).

அடிக்கடி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மீண்டும் அதே நயவஞ்சக முறையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க சதிச்செயல் புரியும் சங்பரிவார தீவிரவாத அமைப்புகளை தடை செய்யக் கோரியும் சங்பரிவார பயங்கரவாதிகளை கைது செய்ய கோரியும் அப்பாவி முஸ்லிம்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் போட்டு குண்டு வைத்த சங்பரிவார தீவிரவாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட தவறிய மீடியாக்களை கண்டித்தும் அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும் சிபிஐ விசாரனைக்கு மாற்றம் செய்ய கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.