ஆசைப்பட்டால்... விண்மீனும் விரல்நுனிக்கு வரும்! - டாக்டர் அப்துல் கலாம்
உங்களுடைய நடத்தை நீங்கள் நடந்து கொள்கிற பாங்கு மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறும் டாக்டர் அப்துல் கலாம், இளைஞர்களுக்காக கவிதைகளுடன் எழுதிய கட்டுரை...
நெஞ்சில் உறுதியும் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற லட்சியமும் இருந்தால், நீங்கள் எல்லோரும் கட்டாயம் வெற்றி அடைவீர்கள். நான் இயற்றிய கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாங்கள் எல்லோரும் இறைவனின் படைப்பாவோம்!
எங்கள் உள்ளம் வைரத்தைக் காட்டிலும் உறுதி வாய்ந்தது! நாங்கள் வெற்றியடைவோம்! வெற்றியடைவோம்!!வெற்றியடைவோம்!!!
எங்கள் மனதிடத்தால் இறைவன் அருள் இருக்கும் போது எங்களுக்கு என்ன பயம்?
வருங்காலத்தைப் பற்றிய பயமே இல்லாமல் இன்றைய இளைஞர்கள் வாழ வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
நான் உங்களைப் போல் சிறுவனாக இருக்கும் போது, என் மனதில் பல பயங்கள் தோன்றியுள்ளன. நான் என் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் இருக்கும்போது, மேல்நிலைப் பள்ளியில் படிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளி சென்ற போது, அங்கு நான் கண்டதென்ன? அங்கு மாணவர்கள் அருமையான உடைகள் அணிந்து, திறமையான ஆங்கிலத்தில் பேசினார்கள். அவர்கள் குழுவில் என்னை சேர்ப்பார்களா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.
நான் 9ம் வகுப்பு சேர்ந்தவுடன் நல்ல மதிப்பெண் கிடைக்குமா இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியுமா என்ற எண்ணங்கள் என்னை வாட்டி எடுத்தன.
நான் 10ம் வகுப்புக்கு சென்றவுடன் இந்த எண்ணங்கள் என்னை விட்டு மறைந்துவிட்டன. அதற்கு காரணம் ஆசிரியர்தான். எனக்கு லட்சியத்தை கற்பிக்கும் ஆசிரியர் கிடைத்தார்.
இளைஞர்களாகிய நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கல்வியினால் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாகவும் நாட்டிற்கு நல்ல குடிமகனாவும் திகழ வேண்டும்.
இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும். வளர்ந்த நாடாக வேண்டும் என்பதே நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால் பொருளாதாரம் வளமிக்க நாடாகவும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நம் நாட்டின் தற்போதுள்ள லட்சியம்.
வேலை இல்லை என்ற நிலைமை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை.
இளைய சமுதாயம்தான் ஓர் அரும் பெரும் செல்வமாகும். நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். பணி செய்து கொண்டிருக்கிறோம். இவற்றை செய்யும் போது, நாம் லட்சிய நோக்கத்தில்தான் செய்ய வேண்டும்.
இதைப்பற்றி பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்...உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - மற்றினும்
தள்ளுவை தள்ளாமை நன்று
பெரிய லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
இந்தியாவை வளர்ந்த நாடாக நாம் எப்படி உருவாக்க முடியும்?
இந்த எண்ணங்களை கவிதையில் இயற்றி இருக்கிறேன். இந்தியாவை வளமான நாடாக ஆக்க வேண்டுமென்றால், நாம் எல்லோரும் நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை ஒரு முக்கியமான நாளாகும். அன்று செய்த ஒவ்வொரு காரியமும் வெற்றி அறுவடை செய்ய வேண்டும். நண்பர்களே உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணிநேரம் தேவை. இதனால் இரவும் பகலும் உருவாகின்றன. ஒரு நாளில் 24 மணிநேரத்தில் அதாவது 1440 நிமிடங்கள், அதாவது 86400 வினாடிகள் உள்ளன.
பூமி சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு ஒரு வருடமாகும். பூமி சூரியனை வலம் வரும்போது, நம் வயதில் ஒரு வயது கூடுகிறது. நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும்.
வினாடிகள் பறக்கும். நிமிடங்கள் பறக்கும். மணித்துளிகள் பறக்கும். நாட்கள் பறக்கும். வாரங்கள் பறக்கும். மாதங்கள் பறக்கும். பறந்து கொண்டிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? முடியாது.
ஆனால், நம் வாழ்வில் உள்ள நேரத்தை நம்மால் பயன்படும்படியான பணிக்கு நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். பறந்து கொண்டிருக்கும் நாட்களை வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகிப்போம்.
விண்ணில் இருக்கும் விண்மீனைப்பார்
நீ அதை அடைய வேண்டுமா?
நீ யாராக இருந்தாலும்
உன் எண்ணங்களிலும் உறுதியும் கடும் உழைப்பும் இருந்தால்
உன் இதயம் நாடியது உன்னிடம்
நிச்சயம் வந்தடையும்
விண்மீனாக இருந்தாலும்...
மீண்டும் சந்திப்போம்
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...