கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை முதலிடத்தை பெறுகின்றது. ஊர் முழுக்க தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் என போக்குவரத்திற்கு பயன்படும் வசதிகள் உள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் சாலை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பக்கீர் மாலிம் தர்கா தெருவையும், பண்டக சாலை தெருவையும் இணைக்கும் பார்க்கான் முடுக்கு வழியாக செல்லும் இணைப்புச் சாலை மண் நிரம்பியதாக இருப்பதால் மழைக்காலங்களிலும், மற்ற நேரங்களிலும் பொதுமக்கள் இந்தச் சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் அல்லாஹ் முஹம்மது (ஸல்) நற்பணி மன்ற நிறுவனர் கா.மு. கவுஸ் அவர்கள், தன்னுடைய முகநூல் பக்கத்தில், "5வது வார்டு பார்க்கான் முடுக்கு முதல் பண்டக சாலை தெரு முடிய சாலை வசதி வேண்டி 1997 ஆண்டு முதல் 2011 ஆண்டு முடிய 15 வருடங்களாக தனி மனிதனாக நான் கோரிக்கை செய்த பட்சத்தில் 16.02.2012 அன்று நகர ஒருங்கிணைப்பு வளர்ச்சி திட்டத்தின் பிரகாரம் நகர பஞ்சாயத்து குழுவின் உத்தரவின் படி சாலை அமைக்க உத்தரவு கிடைக்கப் பெற்றது. தற்போது 29 மாதங்களை கடந்து விட்ட பிறகு மீண்டும் இந்தப் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைப்பதாக நகர பஞ்சாயத்து குழு 09.07.2014 அன்று (கூட்டம் பொருள் எண்: 9) தீர்மானம் ஆகி 140 மீட்டர் நீளம், மதிப்புத் தொகை ரூ. 1,80,000 என்று E.O அவர்களின் குறிப்பு அனுமதிக்கு வைக்கப்பட்டதாக அறிந்தேன். TPTB நிர்வாகத்திற்கு நன்றி. விரைவில் மழைக்காலம் நெருங்கி விட்டதால் பொது போக்குவரத்து நலன் கருதி இந்த சிமெண்ட் சாலை பணியை பூர்த்தி செய்யுமாறு அப்பபகுதி பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரூராட்சி நிர்வாகமும், வார்டு உறுப்பினரும் விரைவாக இப்பணியை செய்து முடிப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.