"வரலாறு காணாத பாதுகாப்பு" என்ற அடைமொழியுடன் ஒவ்வொரு வருடமும், தனது முந்தைய வருடத்தின் வரலாற்று சாதனையை (?!) முறியடித்து கொண்டிருக்கும் சுதந்திர தினம் வந்தது இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்புடன்., அதனையொட்டி பரங்கிப்பேட்டையிலும் இந்த விடுதலை நாள் பல்வேறு அமைப்புகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
"ஏதோ நீங்களா பாத்து செய்ங்க" என்று இளித்து கொண்டே சொல்வதில் தொடங்கி "இந்த வேலைக்கு இவ்வளவு ரூபாய் என்று கட்டணமாகவே (?!) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இலஞ்சம்."
சமுதாயத்தில் நடுத்தர /அடித்தட்டு மக்களுக்கு தனது கடுமையான முகத்தையும் வசதி படைத்தவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இன்முகத்தையும் காட்டும் சட்ட அமுலாக்கத்தின் பாரபட்சம்.
சாதியின் பெயரால் நடந்த "திண்ணியம் சம்பவம்." இப்படி பட்டியல் இட்டால் நீண்டு கொண்டே போகும், தேசத்தை சீரழிக்கும் பல்வேறு அட்டூழியங்களிருந்தும் விடுதலை கிடைக்காத வரை சுதந்திர தினம் என்பது "ஹைய்யா, இன்னைக்கி ஸ்கூலுக்கு போனா சாக்லெட் கெடக்கோம்" என்று மழலையர்களுக்கு (மட்டும்) உற்சாகம் தரும் ஒரு சாதாரண நாளாகவும் ஒரு விடுமுறை நாளாகவும் தான் நீடிக்கும்.