2004-2024
சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் தாக்கியதாக ஒரு தகவல் சொல்லப்பட்டு இருந்தாலும், 2004-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சுனாமி என்பது எவ்வளவு பேரழிவு ஏற்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட பெரிய தாக்கத்தையும் கண்டு அறிந்ததில்லையோ அதுபோல் நமக்கும் அது ஒரு செய்தியாகத் தான் இருந்திருக்கும்.
(ஒரு பிரபல நாளிதழ் கூட பெயர் தெரியாமல் அடுத்த நாள் 'தமிழகத்தை தாக்கிய டி-சுனாமி' என்று செய்தி வெளியிட்டது )
பாவம் அவர்களுக்கே தெரியவில்லை.
ஆனால் 2004 டிசம்பர் 26 அன்று காலை 8 மணிக்கு மேல் தமிழக கடற்கரையைச் சார்ந்த மக்கள் கண்டுக் கொண்டார்கள்.
மழை வெள்ளத்தால் படிப்படியாகத் தண்ணீர் வந்ததைப் பார்த்திருக்கலாம்.
கடல் தண்ணீர் ஊருக்கு வந்ததைக் கூட சிலசமயம் பார்த்திருக்கலாம்.
ஒரே மூச்சில் சுமார் 30 மீட்டர்(100அடி) வெள்ளம் இரண்டு தென்னை மரம் உயரம் அளவு உயர்ந்து பாரிய அலையாக, அழிவுப் பேரலையாக,
ஆழிப்பேரலையாக ஊருக்கு வந்ததையும் சுமத்ராவிற்கு எந்த விதத் தொடர்புமில்லாத மனிதர்கள் மாண்டதையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இந்தோனேசியா சுமத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலத்தட்டுகள் (டெக்டானிக் பிளேட்கள்-Plate tectonics) அதில் இந்தியத் தட்டும் மியான்மர் தட்டும் கடலுக்கு அடியில் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட நிலநடுக்கமே சுனாமியாக உருவெடுத்து இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள தமிழகம் உட்பட சில நாடுகளை 2004 ஆம் ஆண்டு தாக்கியது.
அன்று கடலுக்கடியில் 9.1-9.3 ரிக்டர் அளவு பதிவாகிய நிலநடுக்கம் என்பதை கடல் மேற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலாடிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கரை வந்தபிறகு அந்தப் பெரிய அழிவைக் கண்டனர். உறவுகள் மாண்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடற்பரப்பில் ஏற்பட்ட பெரிய அளவு நிலநடுக்கம், நிலத்தில் ஏற்பட்டிருந்தால்
பல அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
சுனாமி தாக்கிய 14 நாடுகளில் இரண்டே கால் லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து கடலூர் மாவட்டத்தில் மொத்தமாக 600 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் அந்த எண்ணிக்கையில் தேவனாம்பட்டினம், சாமியார் பேட்டையில் தான் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர்.