பரங்கிப்பேட்டை தாலுக்காவாக MYPNOன் மெயில் அனுப்பும் திட்டத்தின் கீழ்
சப்மிட் பட்டனை கிளிக் செய்து முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர்
உள்ளிட்டோருக்கு மெயில் அனுப்புங்கள்.
பரங்கிப்பேட்டை (புவனகிரி தாலுக்கா, சிதம்பரம் சட்டமன்ற & பாராளுமன்ற தொகுதி,) கடலூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்று பெருமைகளை தனக்கு சொந்தமாக்கி கொண்ட ஒருபேரூர். மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை மிக முக்கியமான நகராக திகழ்கிறது. பல்வேறு சிறப்புமிக்க இடங்கள் நகரின் அடையாளங்களாக திகழ்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில் முக்கிய துறைமுக, தொழில், போக்குவரத்து, வரலாற்று நகரமாக திகழ்ந்தது இந் நகரம்.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க பரங்கிப்பேட்டையில் தற்போது சுமார் 30 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ள பரங்கிப்பேட்டை,
நகராட்சிக்கு நிகராக விளங்கி வருகிறது. வரலாற்று பக்கங்களில் மிகப்பெரும் பங்களிப்பை
பெற்ற இவ்வூரைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மக்கள் தினந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், அரசு சார்ந்த
பல்வேறு பணிகளுக்காகவும் பரங்கிப்பேட்டை வந்து செல்கின்றனர்.
இதேபோல் பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், பதிவாளர்
அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை
அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள்- வங்கி - கல்வி நிலையங்கள்
என ஒரு தாலுக்கா தலைநகருக்கு உரிய அனைத்து அம்சங்களுடன் அமைந்துள்ளது. இப்படி அதிகமான
மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், பல
தனியார் நிறுவனங்கள் நிரம்பப் பெற்றிருந்தும் பரங்கிப்பேட்டை இன்னும் தாலுக்காவாக ஆக்காமல்
இருப்பது அந்தோ பரிதாபம்.
எந்த ஒரு தாலுக்கா தலைநகரிலும் இல்லாத வகையில் அமைந்தும், தாலுக்கா
தலைநகராக ஆக்கப்படாமல் தொடர்ந்து "மாநில அரசால் வஞ்சிக்கப்படும் வரலாற்றுப் பேரூர்", அனைத்து
கட்டமைப்பு வசதிகள் கொண்ட பரங்கிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தாலுக்கா அலுவலகம் அமைக்கப்பட
வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை
அமைக்கப்படவில்லை. இதனால் வாரிசு சான்று, பட்டா, சிட்டா
அடங்கல் உள்ளிட்ட நிலவுடமை சான்று, சாதி சான்று, முதியோர்
உதவி தொகை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காகவும், அரசு அலுவல்
தொடர்பாகவும் சிதம்பரம் அல்லது புவனகிரி செல்லும் நிலை உள்ளது. இதனால் சான்றுகளை பெறச்
செல்லும் முதியோர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், தாலுக்கா
அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் அன்றாட கூலி வேலையை விட்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
பல வகைகளில் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் பரங்கிப்பேட்டை தாலுக்கா அமைக்கப்படுவது
கேள்விக்குறியாகவே உள்ளது. அவ்வப்போது புதிய மாவட்டங்களும், தாலுக்காக்களும்
உருவாகும் என அரசு அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால், பரங்கிப்பேட்டை
தாலுக்கா அமைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடாதது மக்களுக்கு ஏமாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பரங்கிப்பேட்டையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள புவனகிரி தனித்
தாலுக்காவாக தொடங்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக பரங்கிப்பேட்டையை தனித் தாலுக்காவாக
மாற்ற கோரிக்கை வைத்து வரும் நிலையில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவது பொதுமக்களிடையே
மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பரங்கிப்பேட்டை
பகுதி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற பரங்கிப்பேட்டை தாலுக்கா அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின்
அறிவிப்பார் என பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.
தமிழக மாவட்டங்களில் இருக்கும்
சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில
வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இது வருவாய் வட்டம் அல்லது
தாலுக்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து
வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வருவாய்
வட்டத்தின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார். வட்டாட்சியர்களை தாசில்தார்
என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மாவட்ட வருவாய் நிர்வாகத்தில் மாவட்ட
ஆட்சியர், ஆர்.டி.ஓவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வட்டாட்சியர்.
இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த
அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக
வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக
உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம்
அல்லது தாலுக்கா அலுவலகம் எனப்படுகிறது.
பரங்கிப்பேட்டைக்கு தாலுக்கா அலுவலகம் வந்தால் சாதிச் சான்றிதழ், வருவாய்ச்
சான்றிதழ், இருப்பிடச்
சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்றவை, ரேசன் அட்டை
தொடர்பான பணிகள்,
பட்டா, சிட்டா
ஆவணங்கள் போன்றவற்றுக்காக புவனகிரி செல்லாமல் பரங்கிப்பேட்டையிலேயே வேலையை
முடிக்கலாம்.
முதியோர் உதவித்தொகை,
ஆதரவற்றோர் உதவித் தொகை,
விதவை உதவித்தொகை போன்ற பல்வேறு அரசு உதவித் தொகைகள், நலத்திட்ட
உதவிகளை பரங்கிப்பேட்டையிலேயே பெற முடியும். வட்டாட்சியர் நமதூரிலேயே இருந்தால்
அரசு தொடர்பான பணிகள் அவரது நேரடி கண்காணிப்பில் நடக்கும். அவரை எளிதில் அணுகி
தேவைகளை கேட்டு பெற முடியும். இதற்காக உள்ள முகவர்களை அணுகி கூடுதல் தொகையை வழங்க
வேண்டிய தேவை இருக்காது.
தற்போது பரங்கிப்பேட்டையிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் புவனகிரிக்கு
இதற்காக செல்கிறார்கள். நமதூரிலேயே பெரும்பாலான அரசு சார்ந்த வேலைகள் முடியும்.
அதுமட்டுமின்றி பல ஊர்களை சேர்ந்தவர்கள் பரங்கிப்பேட்டை வருவார்கள். பரங்கிப்பேட்டையை
மையமாக வைத்து கூடுதல் பேருந்து சேவைகள் கிடைக்கும். அதிகளவிலான மக்கள் நமதூருக்கு
வந்தால் உள்ளூர் வியாபாரம் பெருகும். தொழில் வளர்ச்சியடையும். பலருக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசு நலத்திட்டங்கள்,
பொதுப்பணி திட்டங்கள்,
108 ஆம்புலன்ஸ்,
போன்றவற்றையும் கேட்டுப்பெற முடியும். தாலுக்காவாக பரங்கிப்பேட்டை மாறினால்
இங்குள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் தாலுக்கா
அந்தஸ்து இருக்கும் ஊர்களுக்கு இதுபோல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று
கூறுகிறார்கள்.
எனவே நமதூருக்கு இந்த சிறப்புகள், வசதிகள் கிடைக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சப்மிட் பட்டனை
அழுத்தி MYPNOன் முதலமைச்சருக்கு மெயில் அனுப்பும் திட்டத்துக்கு ஆதரவு
தாருங்கள்...