கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
கடலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதி. ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்வளவு வசதிகள் இருந்தும் தாலுக்காவாக இல்லாததால் எல்லாவற்றுக்கும் 13 கிமீ தொலைவில் உள்ள புவனகிரியை நாடி இருக்க வேண்டியுள்ளது. தாலுக்கா அமைந்தால் இங்கு தொழில் வளர்ச்சியும் பெருகும்.
இங்குள்ள விவசாய, மீனவ மக்களின் நலன் கருதி பரங்கிப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய்த்துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே கிளிக்கில் மின்னஞ்சல் அனுப்பும் வசதியை MYPNO சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் அதன் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பினர்.
அத்துடன் MYPNO ஆசிரியரும், பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளருமான கலீல் பாகவீ, பொது மக்களின் குறைபாடுகளை களைவதற்காக ஒன்றிய அரசு அமைத்துள்ள 'மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு (Centralized Public Grievance Redressal and Monitoring System - CPGRAMS) அமைப்புக்கும் கோரிக்கையை அனுப்பி வைத்தார்.
அதற்கு, "புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் பரப்பளவு, மக்கள் தொகை அடிப்படையில் அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களும், மாவட்ட வருவாய் அதிகாரி அவர்களும் அறிவித்து உள்ளனர்.
இதற்காக பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், பரங்கிப்பேட்டையை தனி தாலுக்காவாக அமைப்பதற்கு MYPNO தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும்.