ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதிக்குப்பின் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 750 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. 50 சதவீத இடங்கள் கவுன்சிலிங் மூலம் தமிழக அரசு நிரப்புகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்களை, பள்ளி நிர்வாகங்கள் நிரப்புகின்றன.
வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8 அல்லது 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்குப் பின் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
எனவே, 20ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்கள், ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவு மாணவர்கள் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்கிடையே, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த விரும்பவில்லை என, 15க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளன.