சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 17 பேர் 25 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளரின் மனுக்களும், 2 மனுக்கள் தாக்கல் செய்த லோக் ஜனசக்தி வேட்பாளரின் ஒரு மனுவும் உள்ளிட்ட 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி, தேர்தல் பார்வையாளர் ஷாலின் மிஷ்ரா, கூடுதல் உதவித் தேர்தல் அலுவலர் ஜே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்தனர். அப்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்த அனைவரும் பங்கேற்றனர்.
வேட்புமனு பரிசீலனையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா வேட்பாளர் பி.கோவிந்தசாமியாதவ் தாக்கல் செய்த 2 மனுக்களும், ராஷ்டிரியா ஜனதா தளம் வேட்பாளர் ஆர்.சண்முகம் மனுவும், லோக் ஜனசக்தி வேட்பாளர் ஆர்.பன்னீர் தாக்கல் செய்த 2 வேட்புமனுக்களில் ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பாஜக வேட்பாளர் தாக்கல் செய்த 3 வேட்புமனுக்களில் 2 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளர் எஸ்.வினோபா தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவையல்லாமல் சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.சண்முகம், கே.கவிதா, கே.ஜெயக்குமார் ஆகியோரின் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
தள்ளுபடி செய்யப்பட்டது போக ஏற்கப்பட்டுள்ள 12 மனுக்கள் விவரம்: இரா.பன்னீர் (லோக் ஜனசக்தி), ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் (மூமுக), ஜி.எம்.ரவிவாண்டையார் (மூமுக மாற்று வேட்பாளர்), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி), மூசா என்கிற இப்ராம்சா (மார்க்சிஸ்ட் மாற்று வேட்பாளர்), வி.கண்ணன் (பாஜக), வி.கணபதி (பாஜக மாற்று வேட்பாளர்), கே.செல்லையா (பகுஜன் சமாஜ் கட்சி) எஸ்.வினோபா (சுயேச்சை), கே.சத்தியமூர்த்தி (சுயேச்சை), ஏ.அருள்பிரகாசம் (சுயேச்சை), சி.சங்கர் (சுயே) ஆகிய 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவையல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கூடுதலாக 2 வேட்புமனுக்களும், மூமுக வேட்பாளர் ஸ்ரீதர்வாண்டையாரின் கூடுதலாக ஒரு வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
News: Dinamani