நாகரீகத்தில் முன்னேறிவிட்டோம் என்று நாம் மார்தட்டிக்கொள்ள முடியுமா?
மரத்தடியில், மணலில் அமர்ந்து மாணவ மாணவிகள் கல்வி பயிலும் இந்த காட்சி எங்கோ தென்தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்டதல்ல. சுமார் 105 வருடங்கள் பழமையான பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் தான் இந்த காட்சி.
ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கென்றும், அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கென்றும் அரசும், பொதுமக்களும் மிக முயற்சி செய்து வருகையில் இந்த குறிப்பிட்ட பள்ளி ஒரு விதிவிலக்காகவே உள்ளது. 8 ஆம் வகுப்பு வரை சுமார் 240 மாணவ மாணவியர்கள் பயிலும் இந்த பள்ளியில் அரசு ஒதுக்கீட்டின் படி கூட இல்லாமல் 4 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிம் கொடுமை. ( அரசு நிர்ணயத்தின் படி 6 அல்லது 9 ஆசிரியர்கள் இருக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் 25 க்கு 1 என்று ஆரம்ப கோஷங்கள் இட்டு அவர்கள் அடிக்கும் கூத்து நாமறிந்ததே).
கும்மத்பள்ளிவாசலின் இடத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு காலி இடத்தை காட்டினால், தற்போதுள்ள ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக கான்கிரீட் சீலிங் கட்டிடம் ஒன்றினை எஸ்எஸ்ஏ (S.S.A.) திட்டத்தின் கீழ் கட்டிதர அரசாங்கம் முன்வந்தபோது, அது குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், பள்ளிவாசல் நிர்வாகம் ஒத்துக்கொள்ளாததால் அந்த திட்டம் காலவதியானது.
ஏபிஎல் எனும் விளயாட்டு முறை கல்வி திட்டம் அருகிலிருக்கும் சிமெண்ட் சீலிங் கட்டிடத்தில் நடைபெறுகிறது. சில காலம் முன்பு வரை தட்டு ஓடு போடாமல் பெயர்ந்து ஓட்டை உடைசலாக கிடந்தது. மழை நேரம் என்றால் இரண்டு கட்டிடத்திலும் இருக்க முடியாத நிலை இருந்தது.
இடப்பற்றாக்குறையினால் சில வகுப்புகள் நிரந்தரமாக பக்கத்திலுள்ள கவனிப்பாரற்ற தர்கா வளாகத்தில் இப்போதும் நடக்கின்றன.
இன்னொரு கொடுமை.. மாணவர்களின் கல்விநலனிற்காக இப்பள்ளிக்கு 2 புத்தம் புதிய கம்ப்யூட்டர்களை அரசாங்கம் வழங்கியது. அது மொத்தம் 2 நாட்கள் மட்டுமே அங்கு இருக்க முடிந்தது. கட்டிட வசதி மற்றும் பாதுகாப்பின்மையை கருதி அந்த 2 கம்ப்யூட்டர்களும் அரசிடமே திருப்பி அளிக்கப்பட்ட கொடுமையும் நடந்தது.
இந்நிலையில், ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்களின் முன்முயற்சியில் சுமார் 1.50 லட்சம் செலவில் புதியதாக ஓடுகள், தட்டுஓடுகள் பொருத்தப்பட்டுள்ளது ஆறுதலான செய்தி.
இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், நமது தந்தைமார்களும், பாட்டன்மார்களும் படித்த இப்பள்ளியினை இடித்து விட்டு அந்த இடத்தில் திருமண மண்டபமும், கடைகளும் கட்ட திட்டமிடப்பட்டு வருவதாக பள்ளிவாசலின் நிர்வாக மட்டத்திலிருந்தே தகவல்கள் கசிகின்றன.
MYPNO வலைப்பூவின் சிறு ஆய்வில், ஊரின் மற்ற பள்ளிகள விட (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தவிர்த்து) கல்வித்தரம் இந்த நடுநிலைப்பள்ளியில் சிறப்பாகவே உள்ளது தெரியவந்தது.
ஆனால்
ஆசிரியர்கள் பற்றாக்குறையும், அங்கு நிலவும் குடிநீர் வசதியின்மையும், (பைப்கள் திடீர் திடீரென காணாமல் போதல்) மிகப்பெரும் பிரச்சனைகளாக உள்ளன.
மேலும் அங்கு பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் சிலரின் முறையற்ற மற்றும் கவனிப்பாரற்ற போக்கும் ஆசிரியர்களுக்கு தங்கள் கடமையை செய்வதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
நிலைமை மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.