பரங்கிப்பேட்டை: நான்கு தொகுதியில் மனுதாக்கல் செய்தது தொடர்பாக ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு பரங்கிப்பேட்டையில் 36வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புவனகிரி, புதுக்கோட்டை உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இது தவறு எனக் கூறி முன்னாள் திமுக எம்.பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக செல்வமணி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார், உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் பலமுறை விசாரணைக்கு வந்து ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோமதி, வழக்கை வரும் ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு ஒத்திவைக்கப்படுவது இது 36வது முறையாகும்.