ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தீன்! தீன்!

முஹம்மது நானா இருக்காங்களா? என அஹமது அவர் வீட்டின் கதவின் கொலுக்கை தட்டி பதட்டமாக கேட்டான்..

அரண்மனை சுவர் போல பர்மா தேக்கில் செய்த கதவில் ஐந்து கிலோ எடையுள்ள கொலுக்கு தொங்கியது. கதவை தட்டும் போது தவறி கொலுக்கின் நடுவில் கையின் விரல் சிக்கினால் சின்னாபின்னாமாகி விடும் போன்று பிரமாண்டமாக தொங்கிக் கொண்டிருந்தது முஹம்மது நானாவின் வீட்டு அழைப்பு மணி.

இரண்டு கட்டுக்களுடன் அமைந்துள்ள வீடு வேறு, நம் குரல் உள்ளே வரைக்கும் எட்டியிருக்குமா? என அவன் எண்ணும் போது...

யாரு..?  கொஞ்சம் இரிங்க..! நானா கொல்லையிலே இருக்காங்க, வருவாங்க சொல்லிருக்கேன் என்று உள் கட்டிலிருந்து பதில் வந்ததும்.. அவன் கொஞ்சம் திருப்தி அடைந்து அவர் வரும் வரை முஹம்மது நானா வீட்டு திண்ணையில் அமர்ந்தான் அஹமது.

ஆனால் அவனின் மனம் மட்டும் ஒருவித பதட்டதுடன் காணப்பட்டது. 

காரணம் அடுத்த வாரம் அஹமதுக்கு சுன்னத்(கத்னா) என்று வீட்டில் கூறியதும் அவனுடைய நட்பு வட்டங்களில் உள்ள சுன்னத் செய்யாத நண்பர்கள்  அவன் மனதில் சுன்னத் பற்றிய பலவித குழப்பங்களை  ஏற்படுத்தி விட்டார்கள் அதையே நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தோளில்  தட்டி சொல்லுங்கனி.. என்ன விஷயமா தேடி வந்திருக்கியும்.? என்று முஹமது நானா அவன் நினைவை கலைக்கவும்...

உங்கள்'ட்டே ஒன்னு கேக்கலாம் வந்தேன் நானா, நீங்க தான் சொல்லனும் என தயங்கவும்..

சொல்லுங்கனி.. பிரோட்டு (டியூசன்) ஏதாவது எடுக்கனுமா?

இல்ல நானா எனக்கு  அரை பரீட்சை லீவுலே அடுத்த வாரம் சுன்னத் செய்ய போறதா சொன்னாஹோ அதுதான் உங்கள்ட்டே டவுட்டு கேட்டு போலாம்னு வந்தேன் என அஹமது சொன்னதும்...


முஹம்மது நானாவின் முகம் லேசான சுருக்கம் அடைந்தது. அது ஆச்சிரிய சுருக்கமா, கோப சுருக்கமா? அஹமதுக்கு விளங்காத போது, வெடிச் சிரிப்பாக சிரித்து, இதுலே என்ன டவுட்டுங்கனி ? என்றார் முஹம்மது நானா.

அஹமது உனக்கு சுன்னத்தா செய்றாஹ? அப்ப உனக்கு இருக்கு என்று கூட்டாளிவோல்லாம் பயமுறுத்திட்டானுவோ நானா. அதுதான் சுன்னத் செஞ்சா உசுரு போகுற மாதிரி வலிக்குமா நானா?