இது மார்க் வாங்கும் நேரம்!
- அபூ இர்ஷாத்
ஏம்பா! அப்துல் ரஹீம் நீ நல்லாதானே படிக்கிறே! அப்புறம் மார்க் ஏன் கம்மியா வாங்குறே?' என்று தன் மகனிடம் சாதிக் பாய் கேட்டார்.
அதற்கு மகன், தெரியலெத்தா! நான் எல்லா கேள்விக்கும் சரியாதான் பதில் எழுதினேன். கணக்கு பாடத்தையும் சரியாதான் எழுதினேன். இருந்தும் எனக்கு மார்க்கு அதிகமாக கிடைக்கவில்லை. ஏன்னு புரியமாட்டேங்குது என்று தன் வருத்தத்தை தெரிவித்தான்.
சரி இதுக்கு ஏன் கவலை படுறே! வா உன் வகுப்பு ஆசிரியர் கிட்டே போய் ஆலோசனைக் கேட்போம' என்று கூறி தந்தையும் மகனும் வகுப்பாசிரியரிடம் சென்றார்கள்.
அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைந்ததும், ஆசிரியர் அப்துல் ரஹ்மான்... அஸ்ஸலாமு அலைக்கும், வாங்க சாதிக்பாய், எப்ப ராஸல் கைமாவிலிருந்து வந்தீங்க? என்று வரவேற்றார்.
வ அலைக்கும் சலாம், சார். போன வாரம்தான் ராஸல் கைமாவிலிருந்து வந்தேன். பையனோட விஷயமாக கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன். பையன் நன்றாகத்தான் படிக்கிறான். ஆனா மார்க் தான் கம்மியாக வாங்குகிறான். என்ன காரணம்னு தெரியலே? அதான் அவனுடைய ஆசிரியர் ஆச்சேன்னு உங்ககிட்ட கேட்க வந்தேன்' என்று தான் வந்ததுக்கான காரணத்தைக் கூறினார்.
சாதிக் பாய்! நானே உங்க பையன்கிட்ட இதப்பற்றி பேசலாம்னு இருந்தேன். நீங்களே அழைச்சிக்கிட்டு வந்திட்டீங்க ரொம்ப நல்லதாப் போச்சு. எதனாலே மார்க் குறைவா வருதுன்னு இப்பவே உங்களுக்கு தெரிஞ்சிடும் பாருங்க! என்று கூறி... மாணவன் அப்துர்ரஹீமின் பக்கம் திரும்பி, அப்துர்ரஹீம்! நீ கடந்த திருப்புத் தேர்வில் அறிவியல் கேள்வித்தாளை நல்லா படிச்சுப் பார்த்துதான் எழுதினாயா?
ஆமாம், சார்! படிச்சுப்பார்த்துதான் பதில் எழுதினேன், ஆனால் தெரியும்னு நெனச்சி எழுதினேன். அப்புறமா தெரியலேன்னு பாதியிலே முதல் கேள்வியை அடித்து விட்டு அடுத்த கேள்விக்கு பதில் எழுதினேன்.
கேள்வியை எப்படி வரிசைப்படுத்தி எழுதினே?
சார் முதல்ல 5 மார்க், பிறகு 10 மார்க் அப்புறமா 2 மார்க் கேள்விக்கும் இப்படி மாற்றி, மாற்றி எழுதினேன்.
பார்த்தாயா! இப்படி மாத்தி மாத்தி பதில் எழுத கூடாது, அடிச்சு அடிச்சும் எழுத கூடாது. உன் பேப்பரை திருத்தும் ஆசிரியருக்கு எரிச்சலா இருக்கும். அதனால் உனக்கு போடக்கூடிய மார்க்கும் குறையும். நீ என்ன பன்ன வேண்டும் என்று நான் சொல்கிறேன் அதன் படி நீ பரீட்சை எழுதினால் நீதான் நமது பள்ள்ளியில் முதல் மாணவனாக வருவாய்'; என்று கூறி விளக்க ஆரம்பித்தார்.
முதல்லே பரீட்சைக்கு தயாராகும் போது பேனா, பென்சில் ஸ்கேல், கலர் பென்சில் போன்றவற்றை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சின்னப் புள்ளைங்களுக்கு சொல்லுற மாதிரி சொல்லுறேன்னு நினைக்காதே, இது பரிட்சைக்கு அத்தியாவசியத் தேவை. இரண்டு பேனா எடுத்துக்கொள்வது நல்லது.
பொதுத்தேர்வுக்கு செல்லும் போது ஹால் டிக்கட் மறக்காம எடுத்து செல்லவேண்டும்.
பரிட்சை ஹாலுக்கு போனவுடன், படித்த பாடத்தை நினைத்து பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் புத்தகத்தைத் திறந்து படிக்கக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் பரிட்சை நேரத்திற்கு 2-மணி நேரம் முன்பே படிப்பதை நிறுத்தி விடவேண்டும். கடைசி நேரத்தில் படிக்கிற படிப்பு, ஏற்கனவே படித்த பாடத்தையும் போட்டுக் குழப்பி விடும்.
பரிட்சைக்கான கேள்வி தாள் வந்தவுடன் அமைதியாக அல்லாஹ்வை பிரார்த்தனை செய்து விட்டு கேள்விதாளை முழுவதுமாக ஒரு தடவை நல்லா படிக்கனும்.
முழுசா கேள்வியை படிச்சிட்டு, பிறகு எந்தெந்த கேள்விக்கு நல்லா தெளிவா பதில் தெரியுமோ அந்தக் கேள்வியை எழுத ஆரம்பிக்கனும்.
இதுல இன்னும் ஒரு விசயம் கூடுதலா சொல்லனும்னா நீ முதல்ல 2 மார்க் கேள்வியை தேர்ந்தெடுக்கிறது நல்லது. மூன்று கேள்விகளுக்கு உனக்கு தெளிவா பதில் தெரிஞ்சு எழுதினா அதை படிக்கிற ஆசிரியருக்கு உன்மேல் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும். உன் பேப்பரை திருத்த அவருக்கு ஆசையாகவும் இருக்கும்.
அப்புறமா ஒரு மார்க்கு கேள்வி, 5 மதிப்பெண் கேள்வி, 10 மதிப்பெண் கேள்வின்னு வரிசையா எழுது. ஒரு மார்க்கு கேள்வியிலே உனக்கு தெரிஞ்சதை சரியா எழுது.
அடுத்தவனை பார்க்காதே, அது உன் நேரத்தை வீணடிக்கும். சில நேரத்தில் அது தப்பாகவே போகும். அதை விட முக்கியம் 'காப்ப்பியடித்த்தான்' என்று உன்னை பரிட்சை ஹாலில் இருந்தே வெளியேற்றிவிட நேரிடலாம். அதனாலே உனக்கு தெரிஞ்சதை மட்டும் எழுது.
சொல்ல மறந்திட்டேன்! எழுத்தை மிகத் தெளிவாக எழுதணும், ரொம்ப சிறியதாகவும் எழுதக்கூடாது, ரொம்ப பெரிதாகவும் எழுதக்கூடாது. பெரிசு பெரிசா எழுதி பக்கத்தை நிரப்பாதே. எல்லோரும் படிக்கிற மாதிரி அழகாக நிதானமாக எழுதணும். எழுத்துக்களை சேர்த்து எழுதி படிக்க முடியாத அளவு பண்ணக் கூடாது. இதனாலேயும் உன் மார்க் குறைந்து போகும்.
தமிழ் பரிட்சை எழுதும் போது எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கணும். செய்யுள், திருக்குறள் போன்றவற்றை புத்தகத்தில் எப்படி இருக்கின்றதோ அதைப்போலவே எழுத வேண்டும்.
கட்டுரைகளை உனது சொந்தக் கருத்தை சொந்த நடையில் எழுதணும். இதுல சுலபமா மார்க் பெறக்கூடிய எதுகை, மோனை, வாக்கியத்தில் சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல் போன்ற கேள்விகள் அதிக மதிப்பெண்னை பெற்று தரும்.
ஆங்கிலத்திலும் எஸ்ஸே (Essay) போன்றவற்றை தெளிவாக எழுத வேண்டும். போயம் (Poem), போன்றவற்றை எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும். எளிதாக மார்க் எடுக்கக்கூடிய டெவலப் த ஹின்ட்ட்ஸ்ஸ் (Develop the Hints), ஆப்போசிட் வேர்ட்ஸ் (Oppsite Words), சினானிம்ஸ் (Synanims), ஆன்டானிம்ஸ், சபிக்ஸ், பிரிபிக்ஸ் போன்றவற்றில் கவனமாக எழுதினால் மிகஎளிதாக மதிப்பெண்கள் பெறமுடியும். என்றார்.
சார் கணக்குப் பரிட்சையில எப்படி சார் பதிலளிக்கணும்?
சொல்றேன்...
கணக்கு பரிட்சையில் தெளிவா ஆசிரியருக்கு புரியுர மாதிரி ஸ்டெப் பைஸ்டெப்பா (step-by-step) போடணும்.
கிராப் (Graph) மற்றும் வரைபடத்தை போடும் போது மிக நுணுக்கமாக போடவேண்டும்.
கோடு மேலே கோடு போடக்கூடாது. ஏன்னா இந்த மாதிரியான வரைபடங்களை அழகாக வரைவதாலே அதிகமான மார்க் எளிதாக கிடைக்கும்.
கணக்குகளும் வரைபடமும் சரியாக அமைந்தால் 100 மதிப்பெண் வாங்கி விடலாம்.
அது போல மற்ற பாடங்களிலும் படம் வரைந்து பாகங்கள் குறிப்பது போன்ற கேள்விகளை விட்டு விடக்கூடாது. அவை எளிதாக மதிப்பெண் பெற்று தரக்கூடியவை.
அறிவியல் பெயர்கள், விதிகள் போன்றவற்றை எழுதி அண்டர்லைன் பணணுவது அழகாகவும் இருக்கும். படிக்கும் ஆசிரியருக்கு பிடிக்கவும் செய்யும்.
சமூகவியல் பாடங்களில் வரும் பெயர்கள், ஆண்டுகள், இடத்தின் பெயர்கள் இது போன்றே இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் போன்ற எந்த பாடங்கள் ஆனாலும் இந்த முறையில் எழுதுவது நல்லது.
பின்னால் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத்துறையாக இருந்தாலும் அதிலும் இம்முறையை பயன்படுத்துவது நல்லது.
அடுத்து குறிப்பாக நீ வாங்கும் ஒவ்வொரு துணைத்தாளுக்கும் உடனடியாக பக்க எண்ணை குறிக்க மறக்க கூடாது. இது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும்.
அனைத்தும் எழுதி முடித்ததும் மீண்டும் ஒரு முறை படித்து பார்க்க வேண்டும்.
கேள்வி தாளில் உள்ளது போல் கேள்வி எண்ணை சரியாக போட்டிருக்கின்றாயா? என்று பார்க்கவேண்டும்.
பக்க எண்களை வரிசையாக வைத்து கட்டி கொடுக்க வேண்டும்
என்று தன் நீண்ட ஆலோசனையை கூறினார்.
சார் நான் வரும் பொதுத்தேர்வில் நீங்கள் சொன்ன மாதிரியே பரிட்சை எழுதிநமது பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் சார் இன்ஷா அல்லாஹ்... என்று அப்துல் ரஹீம் கூறினான்.
ரஹீம், 'ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்துக்கொள்' காலையில் படித்தால் மணதில் நிற்கும். ஆனா காலையில் எழுந்து முகம் கழுவி தெளிவா ஆன பிறகு படிக்க உட்காரனும். தூங்கிகிட்டே படிக்க கூடாது.
'சார் பொழுது போன பிறகு படிக்கலாம்ல சார்?' என்று ராஜா கேட்டான்.
ஏன்? நல்லது தான், படிக்கலாம், படித்ததை எழுதிப் பார்க்கலாம். பத்து தடைவ படிப்பதற்கு பதிலாக ஒரு தடவை எழுதி பார்ப்பது சிறந்தது தெரியுமா அதனால எழுதிப்பார்க்கும் வேளையை இரவில் செய்வது நல்லது.
எங்க சார் அந்த நேரத்தில் தான் எங்க வீட்டிலே சீரியல் பார்க்கறாங்க ஒன்னும் படிக்க முடியமாட்டுங்குது சார்' என்று ராஜா சொன்னான்.
'நான் படிக்க போறேன்னு சொல்லு அவங்க சீரியல் பார்க்க மாட்டாங்க. நீ நல்லா படித்து பெரிய ஆளா வரணும்னு தானே உங்க அத்தா அம்மா நினைப்பாங்க. உனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வாங்க, சரியா? என்றார்.
பாடத்தில் எந்தெந்த பகுதியை படிக்கலாம் சார் என்று அஹமது கேட்டான்.
'நல்ல கேள்வி! நீ பழைய பொதுத்தேர்வு கேள்விதாள்களை எடுத்து பார்க்கனும் அதுல எந்த பகுதியில் எத்தனை மார்க்குக்கு கேள்வி கேட்டுள்ளனர் என்று ஆராய்ச்சி செய்யணும். ஆனா அதற்கு இப்ப நேரமில்லை. நீ என்ன பண்ணவேண்டும் தெரியுமா? கடந்த 3 பொதுத்தேர்வு கேள்வி தாள்களில் இருக்கிற கேள்விகளை படிப்பது நல்லது. அதன் மூலம் அதிக மதிப்பெண் கிடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். படித்ததை ஒருமுறை எழுதி பார்க்கவும்'.
இந்த வருடம் நீங்க அனைவரும் நல்ல மார்க் எடுத்து நல்ல முறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் செய்வானாக! ஆமீன்!!
உரையாடல் முடிந்து சாதிக் பாய் ஆசிரியரிடம் விடைபெற்று சென்றார்.
உங்களுக்காக..
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான கடந்த மூன்று பொதுத்தேர்வு கேள்வி தாள்களை imct.50g.com என்ற இணையதளத்தில் காணலாம். தங்களுக்கு தேவையான கேள்வி தாள்களை Download செய்து பரிட்சைக்காக தயார் செய்யலாமே.
மறதியைப் போக்க்க வழி
வயதுக்கு ஏற்ப மறதியின் அளவும் வேறுபடும். மூளையின் நினைவுத்திறன் சார்ட்டெர்ம் மெமரி, லாங் டெர்ம் மெமரி என இரு வகைப்படும்.
படிப்பதை மறக்காமல் இருக்க முழுமையாகப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது எழுதிப் படிப்பது மூளையின் இடது புறத்திலும் படம் போட்டுப் படிப்பது வலது புறத்திலும் பதிவாகும். தேர்வு நேரத்தில் ஒன்று உதவவில்லை என்றாலும் மற்றொன்று உதவும்.
படிக்கும் போது உங்களுக்கு எது எளிதாக தோன்றுகிறதோ, அதனை முதலில் முடித்துவிடுங்கள். அதோடு தொடர்புடைய பகுதிகளில் லிங்க் பிடித்துக் கடினமான பகுதிகளை மனதில் பதிய வையுங்கள்.
தேர்வுகளின் போது ஏதேனும் பதில் மறந்து போனால் பதறாதீர்கள். உங்களுக்குத் தெரிந்த விடைகளை முதலில் எழுதி முடித்துவிடுங்கள்.
கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு யோசித்தால் மறந்து போன விடைகளும் பளிச்சென நினைவுக்கு வரும்.
டாக்டர் எஸ்.எம். பதூர் முகைதீன், குழந்தை நலன் மற்றும் மனநல மருத்துவர், சென்னை.(நன்றி: ஆனந்த விகடன் 15-10-2008)
நன்றி: http://www.muduvaivision.com/advertisment/Arivoli.pdf
- அறிவொளி இலவச மாத இதழ் - பிப்ரவரி 2009 (வெளியீடு: வி.களத்தூர், பெரம்பலூர் மாவட்டம்)
இணையதளம்: http://www.imct.50g.com/