
பரங்கிப்பேட்டை.
2108 ம் வருடம், ஒரு பிப்ரவரி மாத அதிகாலை பொழுது.
முஹம்மது இபுராஹீம் ஒரு முக்கிய அலுவலாக தலைநகர் சென்னைக்கு அருகிலுள்ள துணைதலைநகரான சென்னை phase III க்கு செல்ல காஜியார் தெருவிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியில் வந்தார்.
புவியீர்ப்பு அணுசரனை வாகனமான "டோட்டோ" அவருக்காக வாசலில் காத்திருக்க அதிலேறி (பழைய) பஞ்சங்குப்பம் அருகில் அமைந்திருந்த "ஏரோஸ்பாட்டுக்கு" வந்து சேர்ந்தார். அங்கே அவருக்காக முன்பதிவு செய்யப்பட்டு காத்திருந்த அரசு ஏரோகிராப்டில் ஏறி அரை மணித்துளியில் துணைதலைநகருக்கு வந்து சேர்ந்தார். நகரில் அவருக்கிருந்த அலுவல்கள முடித்துக்கொண்டு தனது நண்பர் செல்வத்துடன் மீண்டும் மதியம் 2 மணிக்கெல்லாம் பரங்கிப்பேட்டை திரும்பிவிட்டார். வரும் வழியில் ரசாயன கழிவு காடாக மாறி மனிதர்கள் செல்ல அனுமதியற்ற பிரதேசமாக சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் அரசால் அறிவிக்கப்பட்டுவிட்ட "கடலூர் சிப்காட்" பகுதியை தூரத்தில் பார்த்தவாரே வந்தார்.
பரங்கிப்பேட்டைக்கு வந்த பின்னர், பிற்பகல் தனது சென்னை நண்பருக்கு பரங்கிப்பேட்டையை சுற்றி காண்பிக்க கிளம்பினார். கலிமா நகரிலிருந்த பொலிவான ஒரு பள்ளிவாசலை தனது நண்பருக்கு காண்பித்து
"சுமார் 100 வருடம் பழைமையான பள்ளிவாசல் இது." என்றார்.
நெடுந்துயர்ந்த பல கட்டிடங்கள் கொண்ட பரங்கிப்பேட்டையை சுற்றி வந்தவர் உயரமான கட்டிடம் ஒன்றினை சுட்டி
"இதுதான் எங்களின் நகராட்சி " என்றார். பிறகு கொம்மத்பள்ளி தெருவழியாக வந்தவர் ஒரு பாழடைந்த, இடிந்த கட்டிடத்தை சுட்டிகாட்டி "இதுதான் பல நூறு ஆண்டுகள் பழைமையான ஒரு புதிய பள்ளி. மக்கள் யாரும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு பயந்து எதுவும் கேட்காமல் விட்டுவிட்டதால் இன்றுவரை இந்த இறையில்லம் இப்படிதான் இருக்கிறது." என்று வருத்தத்துடன் சொல்லி நகர்ந்தார்.
பிறகு பரங்கிப்பேட்டையின் வியாபார மையமான சஞ்சிவிராயர் கோவில் ஸ்கொயர் பகுதிக்கு வந்தவர், உயர்ந்த வியாபார கட்டிடங்களுக்கு இடையில் நெருக்கியடிக்கும் டிராபிக்கை சீர் செய்ய கட்டப்பட்டிருந்த fly over (மேம்பாலம்) ஏறி கடந்து கெச்சேரி தெருவுக்கு வந்தார். எல்லாபுறமும் உயர்ந்தோங்கி இருந்த கட்டிடங்கள உற்சாகமாய் பார்வையிட்டு வந்தவர், ஒருபுறம் பரிதாபமாக, இடிந்துபோய், பாழடைந்த நிலையில், உபயோகப்படுத்தப்படாமல் கிடந்த கட்டிடத்தை பார்த்தவர், மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் : " இந்த அரசு மருத்துவமனையை என்றுதான் திறப்பார்களோ ...? "