புதன், 21 பிப்ரவரி, 2024

இறை அழைப்பை ஏற்ற ஆளுமைகள்!

 


பரங்கிப்பேட்டையில் அண்மையில் மூன்று நபர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று இருக்கிறார்கள். அந்த மூவருமே இந்த சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

N.முஹம்மது ஷஃபி : 17-02-2024
கல்வியின் மேன்மை அறிந்த, கல்வித்துறையில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக, பேராசிரியராக, தலைமையாசிரியராக , ஆசிரியராக, ஆசிரியையாக தங்களின் பங்களிப்பினை நல்கிய குடும்பத்தில் இருந்து ஆசிரியராக பணியாற்றியவர் NMS சார் என்றழைக்கப்பட்ட வேதியியல் ஆசிரியர் N.முஹம்மது ஷஃபி அவர்கள். ஊர் பொதுமக்களால் ஷஃபி வாத்தியார் என்றழைக்கப்பட்டார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் பரங்கிப்பேட்டையில் தொடங்கப்படாத அக்காலத்தில், பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை கண்டிப்புடன் நல்வழிப்படுத்தினார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலர் இன்று வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல பொறுப்பான பதவியில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு வேதியியல் துறை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி, பின்னர் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

G.M.நெய்னா மரைக்காயர் : 20-02-2024
தலைமுறை இடைவெளி என்பது எப்போதும் இருக்கும் என்றாலும் இப்போதைய சமூக வலைத்தள காலகட்டத்தில் அது மிகவும் அதிகரித்து பெரியவர்களுக்கும் - இளைஞர்கள் / வாலிபர்கள் இடையே நீண்ட தூரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் அதை களையும் விதமாகவும், இளைய சக்திகள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்ற நன்நோக்கிலும் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (SSA) கால்பந்தாட்ட கழகத்தினை உருவாக்கி மாநிலம் தழுவிய பல்வேறு அணிகளை கொண்டு அவ்வப்போது போட்டிகளை நடத்தி பரங்கிப்பேட்டையின் அடையாளங்களாக கருதப்பட்டு வரும் வரிசையில் பூப்பந்தாட்டத்தை தொடர்ந்து, கால்பந்து விளையாட்டையும் இணைத்தது G.M.நெய்னா மரைக்காயர் அவர்கள்.
மீராப்பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான நெய்னா மரைக்காயர், நோன்பு காலங்களில் குறிப்பாக கியாமுல் லைல் எனப்படும் நள்ளிரவு தொழுகையில் மீராப்பள்ளி நுழைவாயிலில் நின்று தொழுகைக்கு வருவோரை அத்தர் மணம் பூசி வரவேற்பார்.
இவர் தனது இளமைக்காலத்தில் சாபுர் தைக்கால் என்று அழைக்கப்படும் காட்டாணை தர்காவில் உடற்பயிற்சிக்கு உரிய சாதனங்களை நிறுவி தனது சக வயது நண்பர்களை ஒருங்கிணைத்து உடற்பயிற்சி, குத்துச்சண்டை, கராத்தே போன்றவற்றை கற்றறிவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்பதை இன்று அவர் வயது பெரியவர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தபோது அப்போதைய நினைவலைகளை பகிர்ந்தனர்.

A.R.ஷேக் இப்ராஹிம் : 20-02-2024
பரங்கிப்பேட்டையில் தப்லீக் ஜமாஅத்தின் அமீராக அறியப்பட்ட A.R.ஷேக் இப்ராஹிம் அவர்கள் நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இளைஞர்களை - பெரியோர்களை தொழுகையின் பக்கம் அழைப்பவராகவே இருந்தார்.
மீராப்பள்ளி மதரஸா வளர்ச்சி, மீராப்பள்ளி நிர்வாகத்திற்குரிய ஆலோசனைகள் தொடர்பான பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியவர்
எப்போதும் பள்ளிவாசல் உடன் தொடர்பிலிருந்து வந்த இவர் மிக அண்மைக்காலம் வரை தனக்கு கடமையான ஒவ்வொரு நேரத்தொழுகையினையும் பள்ளிவாசலில் நிறைவேற்றுவதையே வழக்கமாக கொண்டு தொழுகையின் முக்கியத்துவத்தை வயது முதிர்ந்த இக்காலத்தில் தன் செயலால் சமகாலத்தில் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.
இறை அழைப்பினை ஏற்ற இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை தந்தருளட்டும்.
குடும்பத்தினருக்கு MYPNO தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...