வியாழன், 22 ஜனவரி, 2009

செல்வியின் செவ்வி

அதிகாரத்தின் "மை" என்றறியப்பட்ட பச்சை மையினால் தொடர்ந்தாற் போல் பதினைந்தாம் ஆண்டினை நோக்கி கையெழுத்திடும் பெண்மணி, ஆம்...! நீங்கள் யூகித்தது சரிதான் அவர், நமது சட்டமன்ற உறுப்பினர் திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள். இவருக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு, பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய புவனகிரி தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் (இனி வரும் தேர்தல்களில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தொகுதியில் தான் உள்ளடங்கும்).
நமது வலைதளத்திற்காக செவ்வி (பேட்டி) கேட்டபோது, "அம்மா, பிஸியா இருக்காங்க" "இன்னைக்கி தொகுதி விஸிட் போறாங்க" போன்ற அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கே உரித்தான படாடோபங்கள் இல்லை மாறாக, தானே தேநீர் கொண்டு வந்து நம்மை உபசரித்து இன்முகத்துடனேயே நமது வினாக்களை எதிர் கொண்டார்.