வியாழன், 19 மார்ச், 2009

வெட்டபடுவது மரம் மட்டுமல்ல...

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று விளம்பரம் செய்யும் அரசே ஒழுங்காய் செழிப்பாய் வளரும் மரத்தை அடியோடு வெட்டுவது நமதூரில் நேற்று காண கிடைத்தது.

நமதூர் அரசு மருத்துவமனை புதிய பொலிவான கட்டிடமாக கட்டப்பட்டது மக்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. தற்போது மருத்துவமனை வளாகத்தின் உள்ளே ஒரு தனி கட்டிடமும், ஆம்புலன்ஸ் நிறுத்த ஒரு புதிய கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. சந்தோஷம்.

இது அது அல்ல

ஆனால் இந்த நல்ல விஷயங்களில் ஒரு பெரும் உறுத்தலாக நமது அரசு மருத்துவமனையின் தென் புறம் ஓங்கி வளர்ந்து நிழல் தந்து கொண்டு இருந்த பெரிய வேப்ப மரம் ஒன்று இன்று காலை முழுவதுமாக வெட்டி வீழ்த்தப்பட்டது.


மரம் வெட்டப்படும் வேலை துவங்கிய உடன் நாம் சென்று பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களை சந்தித்து இது பற்றி கேட்டோம். அதற்க்கு அவர் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கட்டிடங்களையும் பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறைதான் மருத்துவமனை கட்டிடங்களுக்கும் நுழைவாயிலுக்கும் மரம் இடைஞ்சலாக இருப்பதால் அதனை வெட்டிவிட தீர்மானித்தது. அதற்க்கு முறைப்படி ஏலம் விடப்பட்டு, சில நாட்க்களுக்கு முன்பு ஏலம் வழங்கப்பட்டது. இது முழுமுதலாக தமிழக பொதுப்பணித்துறையின் விஷயம். இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை என்றார்.


தமிழ் கூறும் பரங்கிபேட்டை நல்லுலகில் நாய், பேய் அடிப்பட்டால் எல்லாம் கவனிக்க, பிரச்சனை பண்ண ஆள்களும் அமைப்புக்களும், கட்ச்சிகளும் கரைகளும் நிறைய உள்ளன. மரங்கள், அவை தரும் நலன்கள் பற்றி சொல்ல தேவையில்லை, அதுவும் இந்த குளோபல் வார்மிங் யுகத்தில்.... கிரசன்ட் போன்ற அமைப்புக்கள் ஊரெங்கும் மரங்கள் வளர்ப்பதில் காட்டி வரும் அக்கறைக்கும் முயற்சிக்கும் மத்தியில் இது போன்ற மரம் வெட்டல்களை தடுக்க அட்லீஸ்ட் பார்த்து வருத்தம் தெரிவிக்க ஒரு கிரீன் பீஸ் போன்ற அமைப்பு கூட இல்லாதது வருத்தமாக தான் உள்ளது. ( இது போல சமீப காலத்தில் கூட ஒரு முக்கிய பள்ளியில் மரம் வெட்டப்பட்ட போது பெரும் பிரச்சனை எழுவது போல் விஷயம் முற்றியது நினைவில் கொள்ளதக்கது. ).
நமது அடுத்த தலைமுறைக்கு நாம் எதை பரிசளித்து செல்லப்போகிறோம்.... வெறுமையான வெயில் பாரித்த தெருக்களை, வறண்டு போன நிலங்களை, தூர்ந்து போன குளங்களை, குப்பைகளும் கெமிக்கல்கலும் சூழ்ந்த நரகத்தை.... நினைத்துப்பார்த்தால் கலக்கமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் நமது அலட்சியம் நிச்சயம் பெரும் பாதிப்பாய் வந்து விடியும். மரம் வெட்டுவது என்பது குறிப்பாக இது போன்ற இடங்களில் தவிர்க்க முடியாதது தான். ஆனால் மரம் வெட்டுபவர்கள் (வீட்டிலும் சரி பொதுவிலும் சரி) சமுதாய உணர்வோடு அட்லீஸ்ட் இரண்டு மரமாவது நட்டு வைத்துவிட்டு பிறகு தூக்குங்கள் அரிவாளை, கோடாரியை...

இந்த மரத்தை விட்டு விடலாம். இனி எந்த மரம் என்றாலும் வெட்டப்படுவது மரம் மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததியினரின் நலவாழ்வும் தான் என்பதை மனதில் வைப்போம் .

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி

தமிழக அரசு கல்லூரி கல்வித்துறையின் விதிமுறைகளின் படி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும். என்றாலும் கல்லூரி முதல்வர், கல்லூரியின் மூத்த தேர்வு நிலை விரிவுரையாளர்கள், இணைப்பேராசிரியர் கொண்ட கமிட்டி பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக தகுதி உடைய மாணவர்களை படிப்பில் சேர்க்கிறது.

வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் வரம்புகளின் கீழ், அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரி, சிறுபான்மை கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2வில் மாணவர் பெற்ற மதிப்பெண்களை கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி 210 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு மாணவர்களின் தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

பட்டப்படிப்பில் மாணவர் சேர விரும்பும் அதே பாடத்தில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண்களே மாணவரின் தரவரிசை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் பிளஸ்2வில் எடுத்த பாடங்கள் அடிப்படையில் 5 வகையினராக பிரிக்கப்படுகிறார்கள். கல்லூரியில் சிலப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதற்கு அதே பாடத்தை பிளஸ் 2வில் படித்திருந்தால் மட்டுமே சேர முடியும். உதாரணமாக கணிதம்.

பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவு எடுத்திருந்தாலும் சில பட்டப்படிப்புகளை படிக்க முடியும் உதாரணமாக இதழியல், உளவியல். இவ்வாறு வித்தியாசப்படும் பாடப்பிரிவுகளில் விண்ணப்பம் செய்த மாணவர்களை தரவரிசை கீழ்க்கண்ட 5 வகையாக பிரிக்கப்படுகிறது.

1. கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப் பாடங்களை பிளஸ் 2வில் படித்திருப்பவர்.(தேர்வு செய்யும் முக்கிய மெயின் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடங்கள் இரண்டுக்கும் தலா 50 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)

2. கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)

3. துணைப்பாடங்கள் இரண்டையும் பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் துணைப்பாடங்கள் பிரிவுகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்)

4. முக்கிய பாடம் அல்லது ஏதாவது ஒரு துணைப்பாடத்தை படித்திருப்பவர். (முக்கிய பாடம் அல்லது துணைப்பாடத்தில் 100 மற்றும் மூன்றாம் பிரிவு பாடங்களில் செயல்முறை தேர்வு இல்லாமல் 100)

5. கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களை பிளஸ் 2வில் படிக்காதவர். (மூன்றாம் பிரிவு பாடங்களில், செயல்முறைத் தேர்வு இல்லாமல் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.)

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/QualificationDetails.asp?id=14