ஞாயிறு, 12 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை அருகே கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக மனித உரிமை ஆணையத்திடம் மீனவர் புகார்!

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அருகே கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக மனித உரிமை ஆணையத்திடம் மீனவர் புகார் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சி. புதுப்பேட்டை சின்னூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரப்பசெட்டி.

இவரது மகன் ஆறுமுகம்.

இவர் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இது குறித்து அந்த பெண் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையில் கிராம முக்கியஸ்தர்கள் பேசி சமாதானம் செய்தனர்.

அதையடுத்து நான் மீன்பிடிக்க சென்று விட்டேன்.

அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணை சரியில்லை என்று கிராம பஞ்சாயத்தார் என்னை மீண்டும் விசாரணைக்காக அழைத்தனர்.

அப்போது நான் தொழிலுக்கு சென்றதால் கால தாமதம் ஆகிவிட்டது.

அதன் பிறகு நாங்கள் கூப்பிட்டு நீ வரவில்லை என்று எனது ஊரில் எனக்கு

சாதிக் கட்டுப்பாடு செய்து விட்டார்கள்.

அன்று முதல் குடி தண்ணீர் கூட பிடிக்க முடியவில்லை.

எனது குடும்பத்தாருக்கும், எனக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனது பேரக்குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் அங்கேயும், பேச மறுக்கின்றனர்.

ஊரில் நல்லது, கெட்டது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

இது பற்றி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தேன்.

ஆனால் அவர்கள் போலீஸ் நிலையம் வரவில்லை.

ஆகவே எனது குடும்பத்தின் மீதும் கருணை கொண்டு எனது இயல்பு நிலையை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

பரங்கிப்பேட்டை பகுதியிலுள்ள கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்துவிடாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டப்படுமா?

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை பகுதியிலுள்ள பெரியக்குப்பம் கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்து விடாமல் தடுக்க கடற்கரையோரம் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.

இந்த மீனவ கிராமங்கள் அனைத்தும் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பெரும் சேதம் ஏற்பட்டது.

அதன்பிறகு மீனவர்கள் தனது சகஜ நிலைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆனது.

இந்த நிலையில் சின்னூர், புதுக்குப்பம், புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரப் பேட்டை, மடவாப்பள்ளம், அய்யம் பேட்டை, அன்னப்பன் பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பெரியக்குப்பம் கிராம கடற்கரையோரம் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

இதனால் கடற்கரையோரம் உள்ள மணல் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் செல்லும் நிலையில் உள்ளது.

சுமார் 20 அடிக்கு மேல் அலை வீசி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே கடற்கரையோரம் நிற்கும் தென்னை மரங்கள் ஒவ்வொன்றாக

வேரோடு சாய்ந்து வருகின்றன.

குடிசைகள் காற்றில் பறக்கின்றன.

இதனால் தினந்தோறும் இப்பகுதி மீனவ மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆகவே இப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ பெரியக்குப்பம் கடற்கரை யோர பகுதிகளில் தரமான தடுப்பணைகள் கட்ட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.