ஒரு ஆட்டோவில் எத்தனை குழந்தைகள் போக முடியும்?
ஐந்து என்பது அரசு வகுத்த விதி. எட்டு? பத்து?
பதினேழு சின்னஞ்சிறு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ என்ற பெயர்தாங்கி(ய) வாகனம் ஒன்று இன்று காலை மீராப்பள்ளி அருகே (வழக்கம்போல் வேகமாய்) வந்தபோது பளு தாங்க இயலாத அதன் டயர்கள் முறிந்து கோபித்துக்கொண்டு தனியே சுழன்று ஓடியது. இறைவனின் அருளால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.
குழந்தைகள் யாருக்கும் எந்த காயம் இல்லாமல் தப்பித்து இன்னொரு ஆபத்தை (பள்ளியை) நோக்கி சென்றனர்.
நடக்காத வரைதான் எதுவும் சம்பவம். நடந்து விட்டால் கும்பகோணம் பள்ளியில் நடந்தது போல - விபத்து.
அதிர்ச்சிகரமான இந்த நிகழ்வை நேரில் கண்ட சில சகோதரர்கள் இதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். அடுத்து வந்த ஆட்டோவை கவனித்தால் அதிலும் பதினேழு குழந்தைகள்.
என்னடா கொடுமை இது என்று வினவினால், பதினைந்து பேரை ஏற்றினால் தான் காசை பார்க்க முடிகிறது என்று வேறு ஆதங்கப்படுகின்றனர்.
தங்கள் பிள்ளைகள் செல்லும் ஆட்டோவில் அல்லது வேனில் எத்தனை பேர் செல்கின்றனர், வாகனத்தின் தரம் என்ன என்றெல்லாம் கூட கவனிக்க முன்வாராத பெற்றோர்கள் இனிமேலாவது சிந்திப்பார்களா? அல்லது தங்கள் பிள்ளைகளின் உயிரை மேலும் பணயம் வைப்பார்களா?
இது விஷயத்தை சமுதாய அக்கறை கொண்ட சகோதரர் ஒருவர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்ததில் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஆட்டோ வேன் டிரைவர்கள் மற்றும் பள்ளி தாளாளர்கள், நிர்வாகிகளை அழைத்து ஒரு அறிவுறுத்தல் கூட்டம் ஒன்றிற்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.