பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 30 டிசம்பர், 2008 2 கருத்துரைகள்!

அலுவலகத்தை இடம் மாற்றுகிறோம் என்கிற பெயரில் ஊர் முழுதும் Broadband இண்டெர்நெட் சேவையை கிட்டதட்ட 10 நாட்களாக நிறுத்தி வைத்திருக்கிறது பரங்கிப்பேட்டை பி.எஸ்.என்.எல். இன்று, இதோ, இப்போது வந்துவிடும் என தினமும் அதன் சந்தாதாரர்களை அலட்சியம் செய்து வருகிறது. இதனால் இந்த BSNL Broadband மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க>>>> "தொடர்ந்து அலட்சியம் செய்கிறது பரங்கிப்பேட்டை பி.எஸ்.என்.எல்."

3 கருத்துரைகள்!

பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்தனர். கடலூர் பஸ் நிலையத்தில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரபீக். இவர் அங்கு பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மகள் சமீமா(வயது 17, பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீமா கடந்த 27-ந் தேதி புதுச்சேரியில் இருந்து காயல்பட்டினம் புறப்பட்டார். உடன் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் நண்பர்கள் சிலரும் சென்றனர்.

திருமணம் முடிந்து நேற்று முன்தினம் சமீமா தனது நண்பர்களுடன் ஊர் திரும்பினார். திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரி வரும் அரசு பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். பஸ்சை டிரைவர் முருகேசன்(39) என்பவர் ஓட்டினார். இவர் திருச்செந்தூரை சேர்ந்தவர். செஞ்சி முத்து தெருவை சேர்ந்த ராஜா(42) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

பஸ்சை டிரைவரும், கண்டக்டரும் மாறி மாறி ஓட்டி வந்தனர். திருச்சி வந்ததும் கண்டக்டர் ராஜா பஸ்சை ஓட்டினார். டிரைவர் முருகேசன் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். அவருக்கு முன் இருக்கையில் மாணவி சமீமா அமர்ந்திருந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சமீமாவிடம் டிரைவர் முருகேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமீமா டிரைவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

இதை அடுத்து சமீமாவின் உறவினர்கள் நேற்று அதிகாலையில் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது திருச்செந்தூர்-புதுச்சேரி பஸ் அங்கே வந்து நின்றதும். அதில் இருந்து இறங்கிய மாணவி சமீமா அழுதபடியே தனது உறவினர்களை நோக்கி ஓடோடி வந்தார். பஸ்சில் நடந்தவற்றை எடுத்து கூறி, சம்பவத்துக்கு காரணமான டிரைவரையும் அடையாளம் காட்டினார்.

ஆத்திரம் அடைந்த சமீமாவின் உறவினர்கள் டிரைவர் முருகேசனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே நின்று கொண்டிந்த பயணிகளும் டிரைவரை தாக்கினார்கள். இதை அறிந்து போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சமீமாவின் உறவினர்கள் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் டிரைவர் முருகேசனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடம் தொழுதூர் என்பதால் இந்த வழக்கு விசாரணை தொழுதூருக்கு மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கடலூர் பஸ் நிலையத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த டிரைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஸ்சில் பயணம் செய்யும் பணிகள் ஏறிய இடம் முதல் இறங்கும் இடம் வரும் வரையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் கடமையாகும். ஆனால் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய டிரைவரே பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது வேலியே பயிரை மேய்ந்த கதைபோல ஆகிவிட்டது.

இந்த நிலையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த பஸ் டிரைவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க>>>> "அக்கம் பக்கம்: இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள!?"

திங்கள், 29 டிசம்பர், 2008 6 கருத்துரைகள்!

முடித்துவைப்பதை குறித்தாலும்
முற்றுப்புள்ளிகள்
அழகானவை.

முடிக்கத்திணறும் ஒரு காற்புள்ளியை விடவோ ( கமா )
அர்த்தம் தராத ஒரு அரைப்புள்ளியைவிடவோ (செமிகோலன்)
நிச்சயம் அழகானது
முழுவட்ட பூரணமான
முற்றுப்புள்ளி.

நம்மில் பலருக்கு
முற்றுப்புள்ளி வைப்பது இன்னும்
கைவராத கலைதான்.

சுருதியற்ற வெட்டிப்பேச்சுக்களுக்கும்,
கைகூடிவராத காதல்களுக்கும்,
முடிச்சுக்கள் விழுந்த கவிதைகளுக்கும்,
அர்த்தமில்லா தனிமை சிந்தனைகளுக்கும்....
அழகிய முற்றுப்புள்ளியொன்று வைக்க
நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

முற்றுப்புள்ளி
முறித்துக்கொள்ளும் வன்மத்தின் அடையாளமல்ல.

அடுத்த வாக்கியத்தை இணைத்து வைக்கும்
சமாதானத்தூதுவன் அது.

முற்றுப்புள்ளியற்ற வாக்கியம்
அழகாக இருக்குமா என்ன?

துவக்கப்புள்ளியில் துலங்கினாலும்
முடித்துவைக்கும்
முற்றுப்புள்ளியில் அல்லவா உள்ளது
வாசல் கோலத்தின் பரிபூரணம்.

முற்றவே முற்றாத மறுமை வாழ்விற்கு முன்
மரணம் நமக்கிடப்போகும் முற்றுப்புள்ளி
எங்கு, எப்போது என்று
முற்றாக அறியாத நிலையில்
வாருங்கள்
வாழ்க்கையை
அழகாக்கி அர்த்தப்படுத்துவோம்.
மேலும் வாசிக்க>>>> "முற்றுப்புள்ளி"

சனி, 27 டிசம்பர், 2008 3 கருத்துரைகள்!

குமரக் கோயில் தெருவில் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல். எக்ஸ்ச்சேஞ் அலுவலகம் சந்தை தோப்பு அருகில் உள்ள அதன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல்லின் பிராட்பேண்ட் சேவை கடந்த 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.ஏம். சேவை மட்டுமின்றி அதன் மற்ற சேவைகளும் பரங்கிப்பேட்டையில் நேற்றுவரை தடைபெற்றிருந்தது. அவசரநிலை கருதி வங்கி சேவைக்கு மட்டும் இண்டர்நெட் வசதியை நேற்று வழங்கப்பட்டது. ஆனால் வங்கி தவிர்த்து மற்ற யாருக்கும் இணைப்பை தராமல் இன்று, நாளை என்று மாற்றி மாற்றி கூறுவதால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அலுவலகம் மற்றும் இணைப்பு கட்டிடம் மாற்று பணி நடைபெறுகிறது. இந்த சிரமத்தை நாங்களும் உணர்கிறோம். இன்று மாலைக்குள் எல்லா பிரச்சினையும் சரிசெய்யப்பட்டு வழக்கமான சேவைகள் தொடரும் என்று கூறினர்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் இண்டெர்நெட் மற்றும் வங்கி சேவைகள் பாதிப்பு"

வெள்ளி, 26 டிசம்பர், 2008 15 கருத்துரைகள்!


2004 டிசம்பர் 26 காலை மனித இன வரலாற்றில் மிகப்பெரும் பேரழிவினை பதிவு செய்தது சுனாமி என்ற ஆழிப்பேரலை. கிட்டத்தட்ட இரண்டரை லட்ச மக்கள் பலியாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை திசைமாற்றிய சுனாமி, இன்றளவும் பயவிழிகளுடன்தான் கவனிக்கப்படுகிறது.
பூகம்ப அதிர்வுகளால் சற்றே தளும்பிய மகா சமுத்திரத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நமது வீடுகளையும், உடமைகளையும், உயிர்களையும் விழுங்கி திரும்புவதற்கு சில மில்லிமீட்டர் அளவு வித்தியாசங்கள் போதும்.
காலங்காலமாய் ஒரு சாகசக்கதை அளவிற்கு பேசப்படப்போகும் இந்த பேரழிவின் மூலம் அந்த கடலையும், நம்மையும் படைத்த இறைவன் விடுத்த செய்தியினைப்பற்றி நம்மில் எத்தனை பேர் யோசித்திருப்போம்? பேசியிருப்போம்? மீண்டும் பிச்சையிடப்பட்ட நமது உயிரையும், வாழ்க்கையையும் வைத்துக்கொண்டு நாம் என்னதான் செய்து கொண்டு உள்ளோம் ?

சில நாட்கள் முன்பு அமெரிக்க லேமென் பிரதர்ஸ் திவால் எனும் பூகம்பத்தால் பரவிய மெல்ட் டவுன் சுனாமி பீதி, நமதூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன் நூற்றுக்கணக்கானவர்களை குவித்தது. அன்றும் அதற்க்கடுத்த நாளும் நமதூர் மக்களால் சுமார் 13 கோடிரூபாய்க்கும் மேல் அந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. ஓபன் சீக்ரட் ஆன இந்த விஷயத்திலும் நாம் கற்று கொள்ள விஷயம் உள்ளது.
வங்கி பயனாளர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள், அவர்கள் எவ்வளவு ஜகாத் கொடுத்திருப்பார்கள் என்பதையெல்லாம் நமக்கு தெரிந்த ஊர் கணக்கை வைத்து probablityக்கு ( நிகழ்தகவு) தீனியாக போட்டுவிட்டு பார்த்தால் ...... 13 கோடி வேண்டாம்... 10 கோடிக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் ஒரு வருடத்திற்கு என்றால் 5 வருட முடிவில் யாருமே ஜகாத் வாங்க தேவையற்ற நிலைதானே உருவாகி இருக்க வேண்டும்.?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திவால் என்று ஒரே ஒரு பிங்க் ஸிலிப் தனக்கு தானே கொடுத்துக்கொண்டிருந்தால் (மஞ்சள் நோட்டிஸ்) மொத்த பணமும் காந்தி கணக்கில்தானே போயிருக்கும். தன்னுடைய நிலையாமையை அழகாக காட்டிய, - தப்பிபிழைத்த அந்த பணம்- நம்முடைய பணமே என்றாலும் அதில் ஏழைகளுக்கு சேரவேண்டியதாக இறைவன் நிர்ணயித்திருப்பதை கொடுத்திருந்தால் அது தானே நிலையானதாக இருந்திருக்கும்.... நம்மை இல்லாமலேயே செய்திருக்கூடிய சுனாமி....
நாம் இருந்தும் இல்லாமல் ஆக்கியிருக்ககூடிய இன்னொரு சுனாமி
என்று சுனாமிகள் பலவகையாக இருந்தாலும் படிப்பினைகள் எப்போதும் ஒன்றுதான்.
மேலும் வாசிக்க>>>> "சுனாமிகள் பல வகை...."

புதன், 24 டிசம்பர், 2008 8 கருத்துரைகள்!

இறைவனுக்கே எல்லாப் புகழும் பெருமையும் ! الحمد لله

அன்பிற்கினிய நேயர்களே! நேற்றுதான் தொடங்கியது போல இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமான முதலாம் ஆண்டுடன் 250ஆம் பதிவையும் நிறைவு செய்கிறோம். 50,000த்தை நெருங்கும் 'நோக்கு'கள்(Hits).

இறையருள் முன்னிற்க, நல்லெண்ண சகோதரர்களாகிய உங்களின் ஆதரவும் அரவணைப்பும் மறக்க இயலாதது.

MYPNO என்கிற இவ்வலைப்பக்கத்தை அதன் பொருளுக்கேற்ப 'என்னுடைய பரங்கிப்பேட்டை' என்றே அனைவரும் உணர்ந்து வந்திருக்கிறீர்கள். நன்றி!

ஊர்ச்செய்திகளுக்கான அர்ப்பணிப்புடனும் தனித்தன்மையுடனும் ஒளிவீசும் இவ்வலைதளத்தில் உடனுக்குடனும், சார்புகளற்றும், விருப்புவெறுப்புகளற்றும், செய்திகளை செய்திகளாகவே தருவதற்கு எங்களால் இயன்ற எல்லாமுயற்சிகளையும் எடுத்துவந்திருக்கிறோம்.

மனிதர்கள் என்பதால் எங்களிலும் பிழைகள் இருக்கலாம்.பிழை மட்டுமே இயல்பு என்றில்லாமல் திருத்திக்கொள்வதே அழகு என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்.

ஓர் இனிய நற்செய்தியாக, இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் நாம் வலைப்பூவை தொடர்ந்து சொந்தமாக mypno.com என்கிற சொந்த வலைமனைக்கே குடியேற இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் மிக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிலே, மிகப்பல புதிய பகுதிகள் உங்களின் இரசனைக்கும், சிந்தனைக்கும் விருந்தாய் அமைய உழைக்கிற அதேநேரத்தில்,சமூக அவலங்களுக்கான மருந்தாகவும் எங்கள் மெய்நிகர்களஉழைப்பு (Virtual FieldWork) இடம் பெறவேண்டும் என்பதிலே ஆர்வமும், நேர்மையுங் கொண்டுள்ளோம்.

புதியதாக மலர இருக்கிற நம்முடைய mypno.com/ வலைமனையில், இடம் பெறத் தக்கவை என்று நீங்கள் கருதுகிற சீர்திருத்தங்களையும், நேர்கருத்துகளையும் mypnonews@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தரும்படி வாசகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (தயவுசெய்து பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டாம், அப்படியும் பின்னூட்ட விரும்பினால் அதில் உங்களின் முழுமுகவரியை அளித்தால் மகிழுவோம்).

எதிர்பார்ப்புகளற்ற எங்களின் உழைப்பும் அதன் பயனும் தேக்கமடையாதிருக்க உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், ஊக்கப்பூர்வமான கருத்துகளும், பிரார்த்தனைகளும் நிறையவும் நிறைவாகவும் வேண்டும்,வேண்டும்,வேண்டும்.

.......and miles to go before WE sleep!جزاك الله خيرا

உங்களின் சேவையில்
MYPNO வலைத்தளக் குழு.
மேலும் வாசிக்க>>>> "இதுவரை நாம்....!"

1 கருத்துரைகள்!

சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை சுற்றுப்புற புவியியலில் நிகழ்த்திவிட்ட பாதிப்புகள் இன்னமும் சரிசெய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.

காட்டாக, புதுச்சத்திரத்தை அடுத்துள்ளதொரு கிராமத்தில் ஊருக்குள் புகுந்த மழைநீரிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் சாலையில் குறுக்கே பள்ளங்களை வெட்டிவிட்டனர் . தண்ணீர் வடிந்து பலநாள்களாகியும் வெட்டிவிடப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்படாததால் சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நகரப்பேருந்துகள் வேளங்கிப்பட்டு வரையே வந்து திரும்பிச்செல்கின்றனவாம்.

இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வேளங்கிப்பட்டு, தச்சக்காடு, சேந்திரகிள்ளை, மணிக்கொல்லை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூருக்குச் செல்லவேண்டுமானால் பு.முட்லூர் வந்து பேருந்து பிடிக்கவேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க>>>> "அக்கம்பக்கம்: புதுச்சத்திரம் - பு.முட்லூர் சாலை உடைப்பு!"

ஞாயிறு, 21 டிசம்பர், 2008 7 கருத்துரைகள்!

தேவையற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள சில மனிதர்கள் எப்போதும் தங்கள் காதுகளை தீட்டி கொண்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் பரங்கிபேட்டையில் காணப்பட்ட நீண்ட காதுகளை உடைய வித்தியாசமான இந்த ஆடு, அப்படி எந்த செய்தியையும் கேட்க்க ஆவாலாக இருப்பது போல் தெரியவில்லை. நாங்கள் போட்டோ பிடிக்க போஸ் கொடுக்க சொல்லி வற்புறுத்திய போது கூட ஏதும் பேசாமல் மறுத்து விட்டது.

மேலும் வாசிக்க>>>> "காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல..."

2 கருத்துரைகள்!


இளம்பிள்ளைவாதம் எனும் கொடுமையான நோயை ஒழித்து கட்ட அரசாங்கம் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வருடம் தோறும் இரண்டு நாட்கள் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை இலவசமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளித்து வருகிறது. இன்று அந்த நாள். நமதூரில் பல இடங்களில் இதற்கென தற்காலிக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "இளம்பிள்ளைவாத தடுப்பு நாள்"

சனி, 20 டிசம்பர், 2008 1 கருத்துரைகள்!

கடந்த வாரம் வெள்ள நிவாரணத் தொகையாக பரங்கிப்பேட்டையின் சில வார்டு (பேரூராட்சித்தொகுதி) களில் ரூ. 75இலட்சம் வரை வழங்கப்பட்டதாம்।
வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் சில வார்டுகளில் சில வீடுகள் விடுபடுவதாகக் கூறி பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியலில் சில மன்றஉறுப்பினர்(கவுன்சிலர்)களும் கலந்துகொண்டனர்.

சாலைமறியல் தொடர்பாக கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது. இதில் கவுன்சிலர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சுமார்117பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

சிதம்பரம் வட்டாட்சியர் தன்வந்த கிருஷ்ணன், செல்வி இராமஜெயம் ச।ம।உ, ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்குவதாக காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட மக்களுக்கு உறுதி அளித்தனர்.

நமது நிருபர்
மேலும் வாசிக்க>>>> "வெள்ள நிவாரணத்தொகை: பரங்கிப்பேட்டை பரபரப்பு."

7 கருத்துரைகள்!

புதுப்பள்ளி நிர்வாக தேர்தல் நடக்காததால் நேற்று பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையில் பரங்கிபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை ஏழு எட்டு மணி அளவில் தொடங்கிய சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை.

இந்த தரப்பில் ஜுபைர், மரைக்கார், லுக்மான், ஷாஜகான், பிலால், ரபி என ஆறு பேரும் அந்த தரப்பில் மாலிக், கஜ்ஜாலி, உக்காஷ், அய்யூப் ஆகிய நான்கு பேரும் ரிமாண்ட் செய்யப்பட்டு கடலூர் சிறைக்கு இரவு பதினோரு மணியளவில் கொண்டு செல்லப்பட்டனர்.

இறைவனின் இல்லத்தை முன்னிட்டு செய்யப்படும் விஷயங்கள் எந்த பெரும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ப்ரார்த்தனையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்த வேளையில் இது போன்ற சங்கடம் தரும் கைது நிகழ்வு ஊரின் முஸ்லீம் பொது மக்களிடையே வருத்தத்தினை ஏற்படுத்திஉள்ளது. நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதனால் திங்கட்கிழைமை தான் அவர்கள் அனைவரும் பெயிலில் வர முடியும்.

மேலும் வாசிக்க>>>> "புதுப்பள்ளி பிரச்சனை"

வெள்ளி, 19 டிசம்பர், 2008 12 கருத்துரைகள்!

புதுப்பள்ளி நிர்வாகத்திர்க்கென இன்று ( 19.08.2008) தேர்தல் நடத்த வக்ப் வாரியம் திட்டமிட்டு நாள் குறித்திருந்த வேளையில், பள்ளி நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கி விட்டது. அதனால் இன்று தேர்தல் நடக்கவில்லை.

இன்று ஜும்ஆ முடிந்து நீண்ட நேரம் பெரும் கூட்டமாக மக்கள் வெளியில் நின்று இருந்தனர். பள்ளியின் நிர்வாகம் சீரமயாதது குறித்த அதிருப்தி அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் கோர்ட்டில் ஸ்டே கோரி வழக்கு போட்ட ஃபஜூல் மாலிமார் வெளியில் வந்தபோது அவரிடம் சாத்வீகமாக கேள்வி கேட்க்க சிலர் சென்றதாகவும் அதை தொடர்ந்து சிறிது சலசலப்பானது. பிறகு அடி தடியாக ஆனது. பள்ளியில் நூற்றுக்கணக்கான பேர் திரண்டிருந்தனர். சில காலம் முன்பு நடந்ததை போல் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று அனைவரும் பயந்து இருந்த நிலையில் பள்ளியினுள் நடந்த இந்த சம்பவத்தை சிலர் தடுத்து அமைதிபடுத்த முயற்சித்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிமிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

நிலைமை சற்று கட்டுக்கடங்குவதற்குள் ஆவதற்குள் போலீஸ் வந்தது. அவர்களுக்கு நிலைமையை ஆரம்பம் முதல் ஜுபைர் விளக்கினார். பிறகு ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் வந்து சேர்ந்தார் . பிறகு வழக்கு கொடுக்க ஒரு தரப்பு யூனுஸ் அவர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். கும்மத் பள்ளியில் ஏற்பட்ட இந்த சம்பவங்களினால் ஊர் முழுவதும் சற்று பரபரப்புடன்தான் வருகிறது.
மேலும் வாசிக்க>>>> "புதுப்பள்ளி பரபரப்பு"

வியாழன், 18 டிசம்பர், 2008 2 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நஞ்சைத் தரிசுக்கேற்ற டிஏயு1 ரக உளுந்து விதை பரங்கிப்பேட்டை வட்டார
(பரங்கிப்பேட்டை, பின்னத்தூர்) வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் யாரும் மானிய விலையில் (ரூ.56/கிலோ) பெற்றுப் பயனடையலாம்.


மேலும் வாசிக்க>>>> "விவசாயக்குறிப்பு: மானிய விலையில் உளுந்து விதை."

0 கருத்துரைகள்!

கடந்த 2004 ஆம் ஆண்டில் சம்பவித்த ஆழிப்பேரலை(சுனாமி) பாதிப்புகளுக்கு; மனித மற்றும் கால்நடை உயிர்ப்பலிகளுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியிருந்தது. அச்சமயம் கிள்ளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கால்நடை மருத்துவர் ஒருவரும் முறைகேடாக 85 ஆடுமாடுகளின் பட்டியலுக்கு பணம் பெற்றதாக அரசுத் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு அவர்கள் அரசுத் தரப்பாக முன்னிலையாகி நேற்று ஒருமணிநேரம் சாட்சியம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை கோர்ட்டில் மாவட்ட கலெக்டர்."

செவ்வாய், 16 டிசம்பர், 2008 0 கருத்துரைகள்!

பரங்கிபேட்டை இரண்டாவது இரட்டை கிணற்று தெருவில் ஒரு குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

நவாப் மற்றும் அவரது மனைவி உத்திரம் ஆகியோர் வசித்து வந்த சிறு குடிசை வீடு நேற்று மாலை திடீரென்று பற்றி எரிந்தது. அச்சமயம் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதை கவனித்து நீரூற்றி அணைத்தனர். தீயில் மொத்த குடிசையும் எரிந்து சாம்பலானது.

செய்தி அறிந்து உடனேயே தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் மூலம் தீயணைப்பு நிலையத்திற்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் நேரிலும் உடனே வந்து விட்டார். தீயனைப்பு வீரர்கள் உடனே வந்தாலும் அவர்களால் சம்பவ இடத்திற்கு வர முடியாததாலும், தீ உடனே அணைக்கப்பட்டு விட்டதாலும் அவர்கள் திரும்பி சென்றனர்.

மொத்த சம்பவத்தில் மிக கொடுமையான விஷயம் சுமார் பதினைந்து ஆடுகள் அதில் தோல் பொசுங்கி பார்ப்பதற்கே கொடூரமான நிலையில் கிடந்தது தான். இரண்டு ஆடுகள் கிட்டத்தட்ட சாகும் நிலையில் இருந்தன.

மேலும் வாசிக்க>>>> "தீ விபத்தில் குடிசை சாம்பல்"

1 கருத்துரைகள்!

பரங்கிபேட்டை கரிக்குப்பம் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் வேலி தகராறு காரணமாக நடந்த வெட்டு குத்து தாக்குதலில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கு கடுமையான அரிவாள் வெட்டு விழுந்து பரங்கிபேட்டை அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர். வெட்டப்பட்டவர் குடும்பத்தினரில் உள்ள பெண்களில் ஒருவர் போலீசாக பணி புரிகிறார் என்பது இன்னொரு அதிர்ச்சி. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கடலூர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் வாசிக்க>>>> "வெட்டு குத்தில் முடிந்த வேலி தகராறு"

திங்கள், 15 டிசம்பர், 2008 1 கருத்துரைகள்!

பரங்கிபேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் டவுன் பஸ் ஒன்று, இன்று காலை கீரப்பாளையம் தாண்டிய நெடுவழியில் மாருதி காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் நல்லவேளையாக உயிர் பலியோ துக்கம் மேலிடும் இழப்புக்களோ யாருக்கும் இல்லை. மாருதி காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி போய் இருந்தது. விபத்து, சாலையின் (அரசு பேருந்தின்) இடது பக்கம் நடந்ததால் தவறு மாருதி கார் டிரைவர் மீது தான் என்பதாக பேசிக்கொள்ளப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "அரசு பேருந்து விபத்து"

0 கருத்துரைகள்!

பரங்கிபேட்டை நகுதா மரைக்காயர் தெருவை சேர்ந்த அபஜான் (லியாகத் அலி) அவர்களின் பேத்தியான சிறு குழ்ந்தை அல்லாஹுவின் நாட்டப்படி மர்ஹூம் ஆகிவிட்டது. மிகப்பெரிய துக்கங்களில் ஒன்றான இந்த இழப்பை அக்குழந்தையின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளவும் இறைவன் அவர்களுக்கு அதன் (பொறுமையின்) மூலம் ஈடேற்றம் அளிக்கவும் வல்ல நாயனிடம் துஆ செய்வோம்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

2 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேநிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதலிடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கலியபெருமாள் தலைமை வகிக்க, தாளாளர் பிரபாவதி அம்மையார் முன்னிலையில் முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை ஆற்றினார்.

இதில் சேவாமந்திர் பள்ளி மட்டுமின்றி புதுக்குப்பம், சாமியார்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர்களும் பரிசு பெற்றனர்.
-நமது நிருபர்
மேலும் வாசிக்க>>>> "சேவாமந்திர் பள்ளியில் பரிசளிப்பு விழா."

ஞாயிறு, 14 டிசம்பர், 2008 0 கருத்துரைகள்!

கடல் கொந்தளிப்பில் சிக்கி படகு கவிழ்ந்ததால் மீனவர்கள் பலி.

பரங்கிபேட்டை புதுப்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், கடலில் எற்பட்ட கடும் கொந்தளிப்பில் சிக்கி படகு கவிழ்ந்ததால் படகில் சென்ற நான்கு பேரில் இருவர் பரிதாபமாக பலியாகினர். இன்று காலை இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
இறந்த இருவரும் சகோதரர்கள் ஆவார்கள் என்பது இதில் இன்னும் பரிதாபம்.

இறந்த மீனவர்களில் ஒருவரின் உடல் மட்டும் தான் கிடைத்துள்ளது. இன்னொருவரின் உடலை தேடி வருகின்றனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இறந்த மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வலைப்பூ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
மேலும் வாசிக்க>>>> "படகு கவிழ்ந்து மீனவர்கள் பலி."

6 கருத்துரைகள்!

பரங்கிபேட்டை தில்லி சாஹிப் தர்கா மற்றும் புது நகரில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு கட்ட சுமார் 6000 தென்னங் கீற்றுக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரால் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரான முத்துராஜா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "வெள்ள நிவாரண பணியில் தவ்ஹீத் ஜமாஅத்"

1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை மாதாகோவில் பகுதியில் சமீப வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சலங்குக்கார தெரு அரசு பள்ளியில் நடைபெற்றது. வெள்ளத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாழ் 363 பேருக்கு ரூ.2000 என்ற அளவிலும், பகுதியளவு பாதிக்கப்பட்ட 45 பேருக்கு ரூ.1000 என்ற அளவிலும் உதவித் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் அதிருப்தியடைந்த சரவணன் என்ற வாலிபர், அனைவருக்கும் ரூ.2000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பயனாளிகள் பெயர்பட்டியலை எடுத்துச்சென்று விட்டாராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் அசோகன் என்பார் உடனடியாக காவல்துறையில் முறையீடு செய்ய, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊரிலிருந்து எமது செய்தி முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்தி நாளேடுகளில் வந்துள்ளதாம்.
மேலும் வாசிக்க>>>> "வெள்ள நிவாரணத்தொகை: ஒரு அதிருப்தி சம்பவம்."

சனி, 13 டிசம்பர், 2008 1 கருத்துரைகள்!


சிறுதுளி தானே என்று அலட்சியமாகக் கருதி நமது வாழ்வியல் ஆதாரங்களான நீர், மின்சாரம்ஆகியவற்றின் சிற்றளவுகளை வீணடிப்பதால் ஏற்படும் இழப்பு குறித்த விழிப்புணர்வு - நமது முன்னாள் குடியரசுத்தலைவர் பார்வையில்....கணினியை முன்வைத்து.

(பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் சொடுக்குங்கள்)
மேலும் வாசிக்க>>>> "சிந்தனைக்கு: சிறுதுளி பெருவெள்ளம்."

1 கருத்துரைகள்!

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை கவனமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்திக்கொள்வது முக்கியத்துவம் பெற்று வரும் இவ்வேளையில் சத்தமில்லாமல் ஒரு செய்தி நெட்வொர்க்கை உருவாக்கி சாதித்து வருகிறார் சாதாத் என்ற பரங்கிபேட்டை இளைஞ்ர்.

பரங்கிபேட்டை சுமையா சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மகனான இவர், மொபைல் மூலம் உலக நடப்புகள் முதல் பரங்கிபேட்டை செய்திகள் வரை தனக்கென இருக்கும் ஒரு வாசகர் வட்டத்திற்கு நாள் பொழுதும் செய்திகள் அளித்து வருகிறார். இவரின் மொபைல் நெட்வொர்க்கில் இணையும் மொபைல் வாசகர்களுக்கு உலக செய்திகள் முதல் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் எஸ் எம் எஸ் களாக வந்து விழுகின்றன.

இவரின் மொபைல் நெட்வொர்க்கில் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவியதற்கு : நீங்கள் செய்ய வேண்டியது JOIN PARANGIPETTAI என்று டைப் செய்து 567678 என்ற எண்ணிற்கு எஸ் எம் எஸ் செய்தால் மட்டும் போதும். நெட்வொர்க் சேர்க்கை கட்டணமாக ருபாய் மூன்று மட்டும் தவிர வேறு கட்டணங்கள் கிடையாது என்று சொல்கிறார். பரவாயில்லையே.....


கொசுறு செய்தியாக சாதாத் ஒன்று சொன்னார்:

இந்த சேவை லோக்கல் மொபைலுக்கு மட்டும் தானாம். வெளிநாடு வாழ் சகோதரர்கள் இதை வைத்து காமடி ஏதாவது பண்ணிவிட போகிறார்கள் என்று கொஞ்சம் சிரித்து வைத்தார்.

(ஓ அப்படி வேற இருக்குல்ல....? )

மேலும் வாசிக்க>>>> "One Message Received"

2 கருத்துரைகள்!

உலகெங்கும் சமீபத்தில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு போல விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் என்று விஞ்ஞானிகள் முதல் அனைவரும் காட்டுக் கத்தலாய் கத்துவது பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் காதிலேயே விழவில்லை போலும்.

வாரத்தில் பல தடவை மருத்துவமனையின் தண்ணீர் தொட்டி பல மணி நேர கணக்கில் வழிந்து ஓடி அங்கிருக்கும் ஒரு பெரிய பள்ளத்தை நிரப்பி மீண்டும் வெளியேறி ஓடி சஞ்சீவிராயர் கோயில் முச்சந்தி வரை வந்தாலும் யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
புதிய கட்டிடத்திலும் அதே நிலை அங்கிருக்கும் நீர் தொட்டி வழிந்து..... (கடந்த வரியை படித்து கொள்ளுங்கள்).

நீர் இறைக்கும் மோட்டார் இந்த மின்வெட்டு காலத்திலும் கதற கதற ஓடிக்கொண்டே இருக்கும். மின்சாரமும் மோட்டாரும் இவர்கள் வீட்டுடையது அல்லவே. அரசாங்கத்தினுடையது தானே.... யார் கேட்க போகிறார்கள்?.

மின்சாரம், பொது சொத்துக்கள், இயற்கை வளம் விரயம், என்று வீணடிப்புக்களில் காட்டும் அலட்சியத்தை நோயாளிகள் மீதும் காட்டி விடுவார்களோ என்று தான் பயமாக உள்ளது.
இனியாவது இதை கவனித்து சரி செய்யுமா மருத்துவமனை நிர்வாகம்?
(பத்திரிகை நாகரீகம் கருதி பல பல முறை சுட்டி காட்டிய பிறகே இச்செய்தி வெளியிடப்படுகிறது)
மேலும் வாசிக்க>>>> "இது ஒரு தொடர்கதை"

0 கருத்துரைகள்!

எட்டாம் வார்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது இன்று காலை வண்டிக்கார தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. கடந்த புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிகழ்வில் வந்து இருந்து நிவாரணத்தை பெற்று சென்றனர். இதில் கவுன்சிலர் பாவஜான், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "வெள்ள நிவாரணம்"

வெள்ளி, 12 டிசம்பர், 2008 5 கருத்துரைகள்!

"டீ போட்டு வை. இதோ வந்துடறேன்" என்று சொல்லி விட்டு பாத்ரூம் சென்றவர், இப்போது நம்மிடையே இல்லை. (அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக). நாம் அனைவரும் மிக அடிக்கடி உபயோகப்படுத்தும் இந்த வார்த்தை ( இதோ வந்துடறேன் ) எத்தனை நிச்சயமற்ற வார்த்தை...!

நிச்சயமின்மை எனும் போர்வை நம் மீதும், நாம் டீல் பண்ணும் அனைத்து விஷயங்கள் மீதும் எப்போதும் படிந்துள்ளதை ஜனாசா தொழுகைக்கு வருகையில் (லாவது) கவனிக்க முடிந்தது.

மரணம் எனும் மாபெரும் நிதர்சனம் முகத்தில் அறையும் போது, சகலமும் அர்த்தமற்று போய்விடுகின்றன. நமது ஈகோக்கள், அபிலாஷைகள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், உறவுகள், நல்லவை, கெட்டவை அனைத்தும் நம்மை பார்த்து கேலியாக சிரிக்கின்றன.

ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தில் நாமே இல்லாமல் போய் விட்ட பிறகு நமக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வியின் கணம் எப்போதும் தாங்க முடியாததாக இருக்கிறது.

சில பத்து வருடங்களின் வினைகளை பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வெம்மையில் காத்திருக்கிறது படைப்பாளனிடம் பதிலாக சொல்லி ஆகவேண்டும் என்ற உண்மை உரைப்பதற்க்காவது இந்த ஜனாசா தொழுகை எனக்கு பயன்படட்டும்.

அனைவரும் சுவைத்தே ஆக வேண்டும் என்று இறைவன் குறிப்பிடும் அந்த மெகா உண்மையின் வீரியம் (புரிந்தும்) புரியாமல் நமது கனவுகளில் புதைந்துக்கொண்டு நாம்....

(வாழும்போது நல்லவிதமாகவே வாழ்ந்து இன்று இல்லாமல் போய் விட்ட அனைவருக்காகவும், நமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.)
மேலும் வாசிக்க>>>> "மரண சிந்தனை"

வியாழன், 11 டிசம்பர், 2008 1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் இன்று (11/12/08) வெள்ள நிவாரண நிதி வழங்க பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப் ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி உதவியை பெற ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர்.18 வார்டுகளில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 4765 விடுகளுக்கு நிவாரண தொகை வழங்கபட உள்ளது. அதில் முதல் கட்டமாக 1,2 மற்றும் 6 வார்டுகளில் இன்று புதுபள்ளி நடுநிலை பள்ளி வளாகத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் குடிசை வீட்டுக்கு தலா ரூபாய் 2000 மும் ஒட்டு வீட்டுக்கு தலா ரூபாய் 1000 மும் வழங்கப்பட்டது.
தகவல் நன்றி : இர்பான் அஹமது , CWO.
மேலும் வாசிக்க>>>> "வெள்ள நிவாரண நிதி"

3 கருத்துரைகள்!

ஜுன்னத் மியான் தெரு, ஹம்மாது, ஆதம் மாலிக் இவர்களின் மூத்த சகோதரர் மற்றும் சாதலி, உஸ்மான் ஆகியோரின் தந்தையுமான (ஆதம் ஸ்டோர், பெரிய கடை தெரு) கஜ்ஜாலி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்..
தகவல் : அப்பாஸ் இப்னு ஜலாலுதீன்
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

11 கருத்துரைகள்!

இவருக்கு சரியான கூட்டணி அமையலையோ அல்லது யாருடனும் கூட்டணி சேர மறுத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.
மேலும் வாசிக்க>>>> "கண்ணுபட போகுதய்யா...!"

செவ்வாய், 9 டிசம்பர், 2008 2 கருத்துரைகள்!

தொழுகைக்கு வந்தவர்கள் வட்லாப்பம் சாப்பிட புற்ப்பட்டு கொண்டிருந்த வேளையிலே, தனிமையில் ஒரு அடியார் இறைஞ்சுகிறார்.

புகைப்படம்: ஹமீது மரைக்காயர்
மேலும் வாசிக்க>>>> "ஹஜ் பெருநாள்: வலைப்பூவின் சிறப்பு புகைப்படம்"

15 கருத்துரைகள்!

இறைவனின் மாபெரும் கிருபை இந்த ஹஜ் பெருநாளில் கொஞ்சம் அதிகமாகவே பொழிந்தது போலவே தெரிகிறது. காரணம் இந்த பெருநாளின் ஹீரோவான மிஸ்டர் மழை.

கொட்டும் மழையிலும் ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் முயன்று (நீந்தி) வந்து மிக திரளான பெண்கள் (தனியாக ஷாதி மஹாலில் நடைபெற்ற) தொழுகையில் கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தின் வலிமையான கூறாகிய ஜும்ஆ பேருரையை மக்களின், சமுதாயத்தின் முன்னேற்றம், கல்வி, நடைமுறை தொழில் நுட்ப வளர்ச்சி, பிரச்சனைகளை பற்றி, ஆரோக்கியமான தீர்வுகளை பற்றி மற்ற பிரயோஜன விஷயங்களை பற்றி, யதார்த்தமாக பேசாமல் எத்தனை காலம்தான் இன்னும் துல்ஹஜ் பிறை பதிமூன்றைமுக்காலின் பெருமைகளையும், ஆட்டை அறுப்பது எப்படி என்றும் பேசி நம்மை தாலாட்டப்போகிறார்களோ என்ற அயர்ச்சி ஏற்பட்டது.

போதாக்குறைக்கு முன்பு ஹதீஸ் அடிப்படையில் முதல் ரக்கஅத்தில் ஒன்று ப்ளஸ் ஏழு, இரண்டாம் ரக்கஅத்தில் ஒன்று ப்ளஸ் ஐந்து என்றபடி தக்பீர் இல்லாமல் மத்ஹப் அடிப்படையில் ஒன்று ப்ளஸ் நான்கு இரண்டாவது ரக்கஅத்தில் ருகுவிற்கு பிறகு நான்கு தக்பீர்கள் என்று முரணாக தொழ வைத்ததை பற்றி பரவலாக முனுமுனுப்பு எழுந்தது.

தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் தழுவி தங்களின் அன்பையும் பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்ட சகோதரர்கள் பலரின் கண்களில் பணிக்கும் ஈரம். சிலர் தனியே சென்று உணர்வு பெருக்கில் அழுததையும் காண முடிந்தது.

நீங்க பாட்டுக்கு தொழுவுங்க நா பாட்டுக்கு பெய்யிறேன் என்றபடி கறந்து கட்டிய மழை, தொழுகை முடிந்த உடன், நமக்கு சற்று இடைவேளை விட்டதால் வேலை பொழைப்பை கவனிக்க மக்கள் கலைந்து பரவி சென்றனர்.
பள்ளியின் மாடியில் அனைவரும் சென்ற பின்னரும் தனியே சஜ்தாவில் வீழ்ந்து துஆ செய்து கொண்டிருந்த ஒரு அடியார்.... (அவரை தொந்தரவு செய்யாமல் எடுத்த படம் மேலே... ) அவர் இறைவனிடம் என்ன கோரினாரோ அதை இறைவன் அவருக்கு வழங்கிட நாமும் துஆ செய்வோம்.
ஆங்காங்கே நான்கு செண்டிமீட்டர் கைலி, இரண்டு செண்டிமீட்டர் சட்டையும் என பெருநாள் புத்துடைகள் தந்த பெருமை பொங்க சிறார்களும் சிறு குழந்தைகளும் அவரவர் உலகங்களில் அற்புதமாய் சஞ்சரித்துக்கொண்டு.....
எத்தனை கோடி இன்பங்கள் தந்தாய் இறைவா ..... அத்தனைக்கும் நன்றி சொல்ல பொழுதுகள் தகுமோ...
மேலும் வாசிக்க>>>> "தியாகத்திருநாள் தொழுகை"

திங்கள், 8 டிசம்பர், 2008 2 கருத்துரைகள்!

அழகிய மழைக்கால கச்சேரி தெரு
மீண்டும் புயல், மழை, வேக காற்று வீசும் என்று பத்திரிகைகளும் டிவீ யும் கடந்த நான்கு நாட்க்களாக ஸ்பிக்கர் கிழிய கத்தியது தான் மிச்சம். ஒரு துளி மழையும் இல்லை, சற்று வேகமான காற்று கூட இல்லை.


ஆனால் இன்று பத்திரிக்கைகளில் செய்தி புயல் அபாயம் நீங்கியது அடை மழை பயம் இலலை. இந்த செய்திக்காகவே காத்திருந்ததுபோல் இன்று காலை பிடித்த மழை மதியம் வரை தொடர்ந்து பெய்து வருகிறது.


இதில் நாம் கற்றுக்கொள்ள பாடம் ஒன்று இருக்கிறது - என்னதான் விளக்கமாக ரமணன் சார் சொன்னாலும் ஆண்டவன் நெனச்சாதான் மழை பெய்யும். (இதை அவரும் மறுக்க மாட்டார்)
மேலும் வாசிக்க>>>> "மழை காமெடி"

11 கருத்துரைகள்!

கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நேற்று காலை பத்து மணிக்கு மீராபள்ளி தெருவில் நடைபெற்றது. இதில் கிரசன்ட் துணை தலைவர் காமில் அவர்கள் தலைமை தாங்கினார். கிரசன்ட் புதிய அலுவலக கட்டிடத்தினை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் திறந்து வைத்தார்கள். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் கிரசன்ட் இன்போ டெக் ஐ திறந்து வைத்தார். கிரசன்ட் நூலகத்தை, சங்கத்தின் முன்னாள் தலைவர் கவுஸ் ஹமீது அவர்களும் ஜமாஅத் துணை தலைவர் ஹாஜா கமால் அவர்கள் ஏழைகளுக்கு அரிசியும் வழ்ங்கினார். பரங்கிபேட்டை முஸ்லீம் அசோசியேஷன், ஜித்தாவின் பொருளாளர் முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்கள் மரக்கன்டினை நட்டார்கள்.
விழாவில் வழக்கம் போலவே சுவை பட பேசி வருகையாளர்களை கவர்ந்த அண்ணாமலை பல்கலைகழக கடல் வாழ உயிரின ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் அவர்கள் பரங்கிபேட்டையில் விரைவில் ஒரு ஐ. ஏ.எஸ் உருவாக வேண்டும் மற்றும் மகளிர் கல்லூரி ஒன்று வர வேண்டும் என்ற தனது விருப்ப கனவினை வெளியிட்டார். இதனை பற்றி அங்கு மேடையில் அமர்ந்திருந்த முஹம்மத் யூனுஸ் மற்றும் செல்வி ராமஜெயம் ஆகியோர் குறிப்புக்களை எடுத்து பேசியது நமக்கு சில நல்ல வருகைக்கான சில அடையாளங்களை காண்பித்தது.
விழாவில் திரளான மக்கள் மற்றும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் வாசிக்க>>>> "கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் ஐம்பெரும் விழா"

4 கருத்துரைகள்!

டிசம்பர் ஆறு.

பாபரி மஸ்ஜித் கொடியவர்களால் இடிக்கப்பட்ட தினம். அந்த கொடுமையான நிகழ்வு குறித்த தங்களது எதிர்ப்பையும், அதை மீண்டும் மீட்கும் முஸ்லிம்களது வேட்கயினையும் பரங்கிபேட்டையின் இஸ்லாமிய அமைப்புக்கள் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பரங்கிபேட்டைஇலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் விருதாச்சலத்தில் நடத்திய ரயில் மறியல் போராட்டத்திலும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் இது போன்ற நிகழ்வுகளில் மௌனமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் ஜமாத்துல் உலமா பேரவையினர் பாபரி மஸ்ஜித் நினைவு சிறப்பு கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். இதில் மௌலான மௌலவி ஹாஜா முயனுதீன் மிஸ்பாஹி, மவ்லானா லியாகத் அலி மன்பயீ, மவ்லவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பல உலமாக்கள் கலந்து கொண்டு பாபரி மஸ்ஜித் பற்றிய அடிப்படை தகவல்கள், முழுமையான வரலாறு, தற்போதைய நிலை, நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய பல விளக்கங்களை அளித்தனர்.

மார்க்க சடங்கு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி மக்களின் மற்ற பிரச்சனைகளை கண்டுக்கொள்ளதவர்கள் என்று மற்ற கொள்கை சகோதரர்களால் பொதுவாக கூறப்படும் உலமா பெருமக்களின் இந்த பொருள் பொதிந்த சரியான முன்னெடுப்பு மனதிற்கு இதம் தருவதாக மக்கள் கருதுவதை காண முடிந்தது.

மேலும் வாசிக்க>>>> "டிசம்பர் ஆறு."

ஞாயிறு, 7 டிசம்பர், 2008 4 கருத்துரைகள்!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக எந்தவித நிர்வாக மாற்றத்தையும் கண்டிராத புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு வரும் 19-ந்தேதி தேர்தல் என்று வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. இதனிடையே இதுகுறித்து இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் தேர்தலில் கீழ்கண்டவர்களை புதிய நிர்வாகம் அமையப்படவேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முத்தவல்லியாக..... கும்மத்பள்ளி நஜீர் அஹமது
செயலாளராக ......... A. அப்துல் மாலிக்
பொருளாளராக........ அப்துல் காதிர் உமரி

19-ந்தேதி இவர்களை கொண்டு புதிய நிர்வாகம் அமையுமா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க>>>> "புதுப்பள்ளி நிர்வாகத்தில் புதிய மாற்றம் வருமா?"

சனி, 6 டிசம்பர், 2008 1 கருத்துரைகள்!


இந்திய சந்தையில் விலையேற்றத்திற்கு பெயர் போன பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் தற்போது ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சின்னகடை மார்க்கெட்டில் இறைச்சி கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹஜ் பெருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதினால் ஆட்டு கிடாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பினால் போக்குவரத்து சற்று தடைபட்டதும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.
மேலும் வாசிக்க>>>> "ஆட்டிறைச்சி கடும் விலை உயர்வு"

6 கருத்துரைகள்!

இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மீராபள்ளி கபறுஸ்தான் அருகில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள மிக தடிமனான நல்ல பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.
( பாம்பு கடித்தால் தான் நியூஸ் அதை அடித்தால் என்ன நியூஸ் என்று இந்த பதிவுக்கு ஒரு கமண்ட்டை எதிர்பார்ப்போம். )
மேலும் வாசிக்க>>>> "பாம்பு.. பாம்பு...."

வெள்ளி, 5 டிசம்பர், 2008 2 கருத்துரைகள்!


வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிஷா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதில் பரங்கிப்பேட்டை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாகத் தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் இந்தோனேசியாவுக்கு வட மேற்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை வாக்கில் சென்னைக்கு அருகே வந்து விடும் என்பதால் அன்று இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கவுள்ளது.

சமீபத்திய புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாமல், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உருவாகியுள்ள புயல் குறித்த செய்தி பரங்கிப்பேட்டை மக்களை, குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க>>>> "மீண்டும் ஒரு புயல் சின்னம்!"

புதன், 3 டிசம்பர், 2008 1 கருத்துரைகள்!

புயல் மழை நின்று போனது. மக்களின் சங்கட வாழ்வும் இன்னல்களும் மாறாமல் அப்படியேதான் தொடர்கிறது. மக்கள் நலத்திற்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்களில் முக்கியமானது தரமான சாலை வசதி. பேரூராட்சியின் கீழ் உள்ள ஊர் தெருக்கள் முழுவதும் சிமென்ட் சாலைகள் பளபளக்க, முட்லூர் முதல் பெரிய தெரு முனை வரையிலான நெடுஞ்சாலை துறையினரின் பொறுப்பில் உள்ள, (ஏற்கனவே தில்லாங்குத்தான) சாலை அசிங்கமாய் பல்லிளிக்கிறது. (பார்க்க படங்கள்)

ஊரின் முதுகெலும்பு போன்ற முக்கிய சாலையான இது (ஹை ஸ்கூல் ரோடு, கீரைகார தெரு, மற்றும் முட்லூர் வரைக்குமான பிரசித்தி பெற்ற வழவழ் சாலை ) மிக மோசமான நிலையில் இருப்பது, அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த் அவஸ்தையையும் சிரமத்தையும் அளிக்கிறது. வாகனங்கள் பஞ்சர் ஆவது, கற்கள் சிதறி மேலே தெறிப்பது வாடிக்கை நிகழ்வாகிவிட்டது.


எக்காலத்திர்க்குமான மிக மோசமான தெரு என்ற சிறப்பு பெயரை பெற்றிருந்த பெரிய தெருவே பளபள என்று ஆகிவிட்ட நிலையில் இன்னும் சீர் பெறாத இந்த தெரு அந்த பெயரை விரைவில் பெறுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இதற்க்கான திட்டம் தீட்டப்பட்டு, இன்னும் நடைமுறை படுத்தபடாத நிலையில் நெடுஞ்சாலை துறையினரின் இந்த அலட்சியபோக்கு மாறுமா?

மேலும் வாசிக்க>>>> "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ...."

செவ்வாய், 2 டிசம்பர், 2008 3 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை பற்றிய புதிய வலைப்பூ பரங்கிப்பேட்டை செய்தி மடல் என்கிற பெயரில் ஹம்துன் அப்பாஸ் உருவாக்கி செய்தி சேவையை அளித்து வருகிறார். சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது தாயகம் திரும்பியிருக்கிறார். விடுப்பில் இருக்கும் இவர் ஊரில் தான் கண்ட விசயங்களை புகைப்படங்களுடன் இந்த வலைப்பூவில் பதிவிடும் விசயம் சிறப்பம்சம். இது பற்றி அப்பாஸ் கூறுகையில் ஊரில் (விடுப்பில்) இருக்கும் மிச்ச நாட்கள் வரை ஊரைப் பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை எனது கண்ணோட்டத்தில் அளித்து வருகிறேன். ஆர்வ மிகுதி மற்றும் சேவை எண்ணத்துடன் நான் இதை செய்து வந்தாலும் விடுப்பிற்கு பிறகு ஊரைப் பற்றிய செய்திகள் என்னால் சேகரித்து தரமுடியாவிட்டாலும் வேறு பதிப்புகளை எனது கண்ணோட்டத்தில் பதிவிடுவேன் என்றார்.

இவரது வலைப்பூ முகவரி: http://pnonews.blogspot.com/
இதேபோன்று கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கமும் (CWO) தனது வலைப்பூ ஒன்றை துவங்கியுள்ளது. இதில் CWO-வின் சேவைகள் மற்றும் இதர தகவல்கள், செய்திகள் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் பெய்த கன மழையின் பாதிப்பின்போது CWO மேற்கொண்ட நிவாரணப் பணிகள் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது.

CWO- வின் வலைப்பூ முகவரி: http://crescentpno.blogspot.com/

மேலும் வாசிக்க>>>> "புதிய வலைப்பூ அறிமுகம்"

திங்கள், 1 டிசம்பர், 2008 5 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் பாதிப்பிற்கு பிறகு இயல்பு நிலை முழுமையாக திரும்பிவருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரும் வடியத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடலூர் பகுதிகளில் விஷக்காய்ச்சல் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.


இது பரங்கிப்பேட்டை பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இது குறித்து எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. பரங்கிப்பேட்டை பகுதி முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ குழுவும் களத்தில் உள்ளது. எனவே இறையருளால் நமதூர் பகுதியில் நோய் பரவும் ஆபத்து எதுவுமில்லை' என்றார் உறுதியாக.

பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகள் துவங்கும் என்று முன்பு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேற்று மாலை மாவட்ட கல்வி இயக்கம் திங்கட் கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என்று அறிவிப்பு செய்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இந்த விடுமுறை நாளையும் தொடர வாய்ப்பு உள்ளது.
மேலும் வாசிக்க>>>> "வடிந்தது மழை நீர்! பரவுமா விஷக்காய்ச்சல்?"

3 கருத்துரைகள்!

இன்று டிசம்பர் முதல் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது.
எய்டஸ் என்பது கெட்ட பழக்கமுள்ள யாருக்கோ வரும் நோய் என்று மட்டும் நம்பினால் அது மூடநம்பிக்கை. முறையற்ற உடல் தொடர்புகளினால் மட்டும் இந்த நோய் பரவுவதில்லை. சுத்தப்படுத்தப்படாத பிளேடுகள், ஊசிகள், மூலம் கூட இந்த நோய் பரவும்.

இறைவனின் மாபெரும் சோதனைகளில் ஒன்றான, இன்றைய மருத்துவ முறைகளில் தீர்வே இல்லாததாக கருதப்படும் இந்நோய்க்கு ஒரே மருந்து இறைவன் அளித்த வாழ்க்கை நெறியில் மனக்கட்டுப்பாட்டுடன் முறையாக வாழ்வதுதான்.

பரங்கிபேட்டையில் இருந்து சுமார் நாற்பத்தி எட்டு (48) பேர், சென்னை கிண்டியில் உள்ள எய்ட்ஸ் நோய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வழக்கமான சிகிச்சைகளுக்காக சென்று வருகிறார்கள் என்று இங்கே உள்ள மருத்துவ தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் ஆதாரபூர்வமாக கூறியதை இந்த நேரத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

படத்திளுள்ளவரின் விழிகளில் ஏதேனும் தெரிகிறதா?
மேலும் வாசிக்க>>>> "உயிர்கொல்லி பாதுகாப்பு தினம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234