வியாழன், 19 பிப்ரவரி, 2015

அமீரகத்தில் ஒன்றுகூடிய பரங்கிப்பேட்டை சிட்டிசன்கள் (படங்கள்)


உலகின் பல நாடுகளிலும் பரங்கிப்பேட்டை மக்கள் நாட்டை, ஊரை, உறவை பிரிந்து வேலை நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலும் அதிகமாக பணியாற்றுகிறார்கள். வேலை பளு உள்ளிட்ட பல சூழ்நிலைகளின் காரணமாக ஒரே நாட்டில் வசித்து வந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழல் உள்ளது.
 
அந்த இடைவெளியை போக்குவதற்காக அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் பேரவை (PMA UAE) கடந்த வெள்ளிக்கிழமை (13/02/2015) துபாய் முஸ்ரிஃப் பூங்காவில் பரங்கிப்பேட்டை மக்கள் குடும்பத்துடன் சந்திக்கும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உட்பட சுமார் 110 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பூங்காவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுதனர். பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து பெரியவர்கள் சிரியவர்களுக்கு உரியடித்தல், ஓட்டப்பந்தயம், கிராஅத் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு திருக்குர்ஆன் கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றியாளர்களுக்கு M.E. நகுதா அவர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பசுமையான பல்வேறு நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியுடனும், மீண்டும் இது போல ஒன்று கூட வேண்டும் என்ற உறுதியுடனும் திரும்பி சென்றனர்.
 
நிகழ்ச்சியை முஹம்மத் உவைஸ், ஹம்தி அப்பாஸ், இஹ்சான் அஹ்மத் ஆகியோருடன் PMA UAE நிர்வாகிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.










செய்தி உதவி & புகைப்படங்கள்: அன்வர் சாதாத்