ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன் இழை' கண்ணாடி குவளை குண்டு பல்புவின் தொடக்கம் தான் இன்று எல்.இ.டி என்னும் ஒரு மிகப்பெரிய ஒளிரும் சாதனத்தில் வந்து நிற்கிறோம்.  

இன்றைய நாகரீக உலகத்தில்  வெளிச்சம் உமிழும் நகரத்தை பகலாக உண்டாக்கும் எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அன்று 70-80 க்கும் மத்தியில் (நம் வயது, அனுபவத்தை பொருத்தவரை இதிலிருந்து தான் தொடங்க முடியும்) எந்த விளக்குகளிருந்து நாம் ஒளி பெற்று கடந்து வந்திருக்கிறோம் என்பதை சிறிதாக பார்ப்போமா?

முட்டை விளக்கு


பெயருக்கு ஏற்ற மாதிரி முட்டையின் தோல் போல் இருந்து கைகளிலிருந்து சிறிது தவறி விழுந்தாலும் கண்ணாடி சிம்னி உடைந்து போகும். மாற்று  வாங்குவதற்கு வீட்டில் ஏவி,  அலுப்பு ஏற்பட்டு அதன் பலனாக ஏச்சு,உதை வாங்கி பிறகு அந்த முட்டையை வாங்கிட்டு வருவோம்.