
உலகெங்கும் சமீபத்தில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு போல விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் என்று விஞ்ஞானிகள் முதல் அனைவரும் காட்டுக் கத்தலாய் கத்துவது பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் காதிலேயே விழவில்லை போலும்.
வாரத்தில் பல தடவை மருத்துவமனையின் தண்ணீர் தொட்டி பல மணி நேர கணக்கில் வழிந்து ஓடி அங்கிருக்கும் ஒரு பெரிய பள்ளத்தை நிரப்பி மீண்டும் வெளியேறி ஓடி சஞ்சீவிராயர் கோயில் முச்சந்தி வரை வந்தாலும் யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
புதிய கட்டிடத்திலும் அதே நிலை அங்கிருக்கும் நீர் தொட்டி வழிந்து..... (கடந்த வரியை படித்து கொள்ளுங்கள்).
நீர் இறைக்கும் மோட்டார் இந்த மின்வெட்டு காலத்திலும் கதற கதற ஓடிக்கொண்டே இருக்கும். மின்சாரமும் மோட்டாரும் இவர்கள் வீட்டுடையது அல்லவே. அரசாங்கத்தினுடையது தானே.... யார் கேட்க போகிறார்கள்?.
மின்சாரம், பொது சொத்துக்கள், இயற்கை வளம் விரயம், என்று வீணடிப்புக்களில் காட்டும் அலட்சியத்தை நோயாளிகள் மீதும் காட்டி விடுவார்களோ என்று தான் பயமாக உள்ளது.
இனியாவது இதை கவனித்து சரி செய்யுமா மருத்துவமனை நிர்வாகம்?
(பத்திரிகை நாகரீகம் கருதி பல பல முறை சுட்டி காட்டிய பிறகே இச்செய்தி வெளியிடப்படுகிறது)