பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு நேற்று இரவு தொடங்கியது. இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நோன்பு , ரமலான் பிறை நேற்று முன்தினம் தென்படாத காரணத்தால், இன்று முதல் (வியாழக்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று இரவு முதல் ரமலான் மாதம் பரங்கிப்பேட்டையில் துவங்கியது. இதனையொட்டி, அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று இரவு தராவீஹ் தொழுகை நடைப்பெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இதே போன்றே ஷ'பான் மாதத்தை 30 ஆக கணக்கிட்டு இன்று முதல் ரமலான் முதல் நோன்கு தொடங்குகிறது என்று முன்பே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இன்று காலையில் சஹர் உணவு சாப்பிட்டு அனைவரும் நோன்பை ஆரம்பித்தனர். அதிகாலை சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோன்பு நேரம் அதிகமாக இருக்கும். முதல் நோன்பு அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். இது படிப்படியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குறைந்து கடைசி ரமலான் நோன்பு 14 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களாக இருக்கும்.
இம்முறை ஐந்து வெள்ளிக் கிழமைகள் ரமலான் நோன்பில் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 29 வது நோன்பு நாளான ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை ரமலான் பிறை தென்படாமல் போனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 30வது நோன்பு நாளாக கணக்கில் கொள்ளப்படும்.