சிறந்த மக்கள் சேவைக்காக பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் வழங்கினார்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ். இவரின் சிறந்த மக்கள் சேவைக்காக அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை (21.07.2016) தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரெட்டி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ரோசய்யா, பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுசுக்கு, சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார். ஏற்கனவே, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது ஆகியவை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரங்கிப்பேட்டையின் தற்போதைய பேரூராட்சி மன்றத்திற்கு 2-வது முறையாக தலைவராக இருக்கும் இவர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தில் 4 முறைகளாக தொடர்ந்து 12 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார். அது மட்டுமின்றி கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவராகவும், பரங்கிப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருக்கிறார். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கடலூர் மாவட்ட பெண்கள் நலச் சங்கத்தின் கௌரவ தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.