இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு ஆள் சேர்க்கும் பணி அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இது குறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருவண்ணாமலையில்
இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஜுன் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சோல்ஜர் டெக்னிகல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட் மற்றும் சோல்ஜர் பொதுப் பணியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி, இன்டர்மீடியேட் படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்.
சோல்ஜர் பொதுப் பணி, சோல்ஜர் டெக்னிகல் பணியில் சேரும் நபர்களுக்கு ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வு நடைபெறும்.
ஸ்கிரீன் தேர்வு
சோல்ஜர் பொதுப் பணியில் சேர விரும்பும் வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜுன் 11-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடக்கும்.
திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜுன் 12-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடக்கும்.
சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர்களுக்கு ஜுன் 14-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடைபெறும்.
விமானப்படை
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஜுலை 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்களுக்கு, அதிகாரிக்கு கீழ் நிலைப் பதவிகளுக்கான ஆள் சேர்ப்பு நடக்கும்.
இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.