பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 30 மார்ச், 2008 6 கருத்துரைகள்!காலசூழல்களுக்கேற்பவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் சுற்று முழுவதும் தரமான இரும்பு கிரில் கேட்கள் அமைக்க ஜும்ஆவில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் அழகிய முறையில் அமைக்கவும் பட்டது. தற்போது மஸ்ஜிதின் முன்புறம் மழை / வெயில் கருதி சிமெண்ட் ஷீட் கொண்டு சிறிது தூரம் கூரை அமைக்கப்பட்டுள்ளது. பெருநாள் போன்ற மக்கள் அதிகம் கூடும் தினங்களில் இது மிகவும் வசதியாக அமையும். மீராப்பள்ளி சம்பந்தப்பட்ட வளர்ச்சி பணிகள குறை கூறும் அபத்த போக்கு முன்பு சிலரிடம் காணப்பட்டது. இறையில்லத்தை பரிபாலனம் செய்வது, எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவற்றை விஸ்தீரணம் செய்வது போன்றவை இயல்பாகவே மஸ்ஜித் நிர்வாகத்தின் பணிகளாகும். பேரூராட்சியின் மயான மேம்பாடு திட்டத்தினை பயன்படுத்தி கபுருஸ்தானை ஒழுங்கமைத்தது, பெரும்பாலும் எங்குமே இந்தளவு உருப்படியாக காணக்கிடைக்காத குளத்தினை பராமரித்து வருவது போன்ற பாராட்டத்தக்க விஷயங்கள நிர்வாகம் தொடர்ந்து செய்துதான் வருகிறது. அதனை பாராட்டாமல் இருந்தாலும் சரி, குறை சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், இப்படி வளர்ச்சி பணிகள முன்னெடுத்து செல்லும் மீராப்பள்ளியை குறை சொல்பவர்கள், பல பத்து வருடங்களாக இருந்தது போலவே இருந்து வரும் சில பள்ளிகள் குறித்து ஏன் ஒரு வார்த்தைகூட கேட்பதில்லை பேசுவதில்லை என்பது புரியாத புதிர்தான்.
மேலும் வாசிக்க>>>> "மெருகேறும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி"

5 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் அவர்களை கடலூர் மாவட்ட "காஜிகளை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழு" உறுப்பினராகவும், கடலூர் மாவட்ட "முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்" என்கிற அரசு சார்பு அமைப்பின் கௌரவ செயலாளராகவும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நியமனம் செய்துள்ளார். இதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க>>>> "யூனுஸ் அவர்களுக்கு இரு புதிய பதவிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணை"

வெள்ளி, 28 மார்ச், 2008 1 கருத்துரைகள்!

ஜெயின் பாவா தைக்கால் தெரு மர்ஹூம் சையத் அவர்களின் மகனாரும் ஹசன் ஜஃபருல்லா தகப்பனாருமாகிய எஸ்.எம்.அப்துல் ஹமீது அவர்கள் மர்ஹூமாகிவிட்டார்கள்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

வியாழன், 27 மார்ச், 2008 4 கருத்துரைகள்!
என்றும் மாறாத உண்மைகள் வரிசையில் நீங்கா இடம் பெற்றிருப்பது பரங்கிப்பேட்டை பி.முட்லூர் மோசமான நெடுஞ்சாலை. பரங்கிப்பேட்டை அனைத்து அமைப்புகளும், ஏன் பேரூராட்சி நிர்வாகமே தலைகீழாய் நின்று முயன்றும் முடியாத கனவாகவே இது உள்ளது. சென்ற நவம்பரில் ஜமாஅத் சார்பாக நடந்த ஈத்மிலன் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அவர்கள் இன்னும் 3 மாதங்களில் முழு அளவிலான தரமான சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தும் இன்னும் முடியாதது பரங்கிப்பேட்டை பொதுமக்களுக்கு வியப்பையும், அயர்ச்சியையும் தருகிறது. இந்நிலையில் இந்நெடுஞ்சாலையில் அகரம் ரயில்வே கேட்டை தாண்டி வரும் சிறிய பாலம் ஒன்று கடந்த சில வாரங்கள் பெய்த திடீர் பெருமழையில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பாலத்தின் இருபுறமும் சுவர் மற்றும் அடிவாரங்களும் இடிந்தும் பெயர்ந்தும் அவ்வழியே செல்பவர்கள பயத்துடனேயே பாலத்தை கடக்க செய்கின்றன. பாலத்தின் அடியில் இரும்பு முட்டுகொடுத்தலும், பாலத்தின் இருபுறமும் சிவப்பு கொடிகள் நட்டபட்டுள்ளது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. சபிக்கப்பட்ட இந்த சாலை தொடர் விஷயத்தில் நமது நெடுஞ்சாலைதுறையினர் காட்டி வரும் பிரசித்திபெற்ற நீண்ட அலட்சியம் இந்த பாலம் உடைந்தால் தான் உடையுமா? என்பது பொதுமக்கள் அச்சம் கலந்த கேள்வியாக உள்ளது.
மேலும் வாசிக்க>>>> "அபாய நிலையில் பாலம்"

திங்கள், 24 மார்ச், 2008 0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த மழையினால் மீராப்பள்ளி குளத்தின் கபரஸ்தானை ஒட்டியுள்ள பக்கச்சுவர் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மீராப்பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்
மேலும் வாசிக்க>>>> "மழையால் மீராப்பள்ளி குளம் பாதிப்பு"

ஞாயிறு, 23 மார்ச், 2008 1 கருத்துரைகள்!


கல்விக்குழு சார்பாக 23.03.08 ஞாயிறு காலை 9 மணியளவில் ஓரியன்டல் பள்ளியில் முஹம்மது நபி(ஸல்) என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கான பிரசங்க நிகழ்ச்சி நடைபெற்றது. டி.வி., சினிமா போன்ற பெருகி வரும் அனாச்சாரங்களுக்கிடையில், நமது சிறார்களுக்கான சரியான முன்மாதிரி யார்? என்பதை விளக்கும் வகையில் முஹம்மது (ஸல்) அவர்கள பற்றி ஜனாப் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் மாணவர்களுக்கேற்ப அழகிய உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், முஹம்மது(ஸல்) அவர்களின் சிறப்புக்களயும், உலகில் மற்றெவரையும்விட அவர்கள நாம் நேசிக்க வேண்டிய அவசியத்தையும், நடிகர்கள், அரசியல்வாதிகள ரோல்மாடல்களாக எடுக்காமல், நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முஹம்மது(ஸல்) அவர்களயே அழகிய முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என்றும் மாணவமாணவியரிடம் விளக்கி பேசினார்கள். பிறகு, பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சிறிய கேள்விபதில் நிகழ்ச்சியும், (குவிஸ்) மாணவர்தம் ஆளுமைதிறன் வளர்க்க பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் (கலந்துகொண்ட அனைவருக்கும்) வழங்கப்பட்டது. இந்நிகழச்சிக்கான அழைப்பு நோட்டிஸ், பேனர் செலவெதுவுமில்லாமல், மஸ்ஜித், பள்ளிகூடங்கள், அதிகாலை குர்ஆன் மக்தப் வகுப்புகளுக்கு சென்று மாணவ மாணவியரை நேரில் சென்று அழைத்தல் போன்ற முறைகள் கையாளப்பட்டன. அனைத்து செலவுகளும் பிள்ளகளுக்கே சென்றடையுமாறு (பரிசுகள், உண்டிகள்) பார்த்துகொள்ளப்பட்டது. சிற்றுண்டியாக, வித்தியாசமாக (சத்தான) சுண்டல், அவுல் மற்றும் பிஸ்கட் தரப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "கல்விக்குழு சார்பாக மாணவர் நிகழ்ச்சி"

சனி, 22 மார்ச், 2008 0 கருத்துரைகள்!

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த நிலையால் பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்ததது. இதனால் பரங்கிப்பேட்டையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று பதிவான அளவின்படி 36 மி.மீ மழை பெய்துள்து. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றியிருக்கும் விவசாயிகளுக்கும் இம்மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிக மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் நேற்று 36 மி.மீ மழை பதிவு"

புதன், 19 மார்ச், 2008 1 கருத்துரைகள்!

நமதூரில் அமைந்திருக்கும் அண்ணாமலை பல்கலைகழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் தற்போது வரலாற்றுச்சிறப்புமிக்க சாதனை புரிந்துள்ளது. இருதய அறுவை சிகிச்சையின் போது ரத்தஉறைதலை தடுக்கும் மிக அரிய, விலைமதிப்பற்ற ஹெப்பாரின் எனும் உயிர்காக்கும் வேதிமருந்தினை சிப்பிகளிலிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றிகண்டுள்ளார்கள். இந்த வகை சிப்பிகள் இந்திய கிழக்கு கடற்கரையோரப்பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. உலகிலேயே இத்தாலியில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த அரிய மருந்து கேன்சர் மற்றும் ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தாகவும் செயல்படும். இது தொடர்பாக அம்மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர். முத்துவேல் ஆறுமுகம் அவர்கள் நமது வலைப்பூவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இது ஒரு குழுமுயற்சி என்றும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் திரு. டாக்டர். டி. பாலசுப்பிரமணியன் அவர்களது தலைமையில் எங்கள் குழுவினரின் கடின முயற்சியினால் இது சாத்தியபட்டதாகவும் தெரிவித்தார். இத்தாலியின் ஒபாகிரின் மற்றும் தேசிய உயிரியல் தரம் மற்றும் கட்டுப்பாட்டு மையமும் தங்களது தயாரிப்பினை சோதித்து அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுவாகவே விலை அதிகம் மற்றும் தட்டுப்பாடுள்ள இந்த ஹெப்பாரின் தற்போது நம்மால் மிக குறைந்த விலையில் வழங்க சாத்தியமுள்ளது எனவும், இதன் முழுஅளவு தயாரிப்பு இன்னும் ஒரு வருடத்தில் துவங்கும் என்றும் தெரிவித்தார். இம்மையம் உள்ளூர் மீனவர்களுக்கு அரியவகை அலங்கார மீன் வகைகள ஆராய்ச்சிசாலைகளில் இனவிருத்தி செய்து வழங்குவது போன்ற சமுதாயநலனிலும் கவனம் செலுத்தி வருவது பாராட்டதக்கதாகும்.
மேலும் வாசிக்க>>>> "ஓர் அரிய சாதனை"

சனி, 15 மார்ச், 2008 2 கருத்துரைகள்!


1. ஜமாஅத் சார்பாக ஊர் மக்கள் கணக்கெடுப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு, அது முழுமையடையாமல் உள்ளதே?
இந்த விசயத்தில் மக்கள் மிகவும் ஆர்வமாக ஆரம்பத்தில் கேட்ட தகவல்களைக் கொடுத்து வந்தார்கள். இதற்காக மற்றும் கல்விக்குழு தங்களின் பங்களிப்புகளை அளித்து வந்தார்கள். 50 சதவீத கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது உண்மைதான். இதற்கிடையில் அவரவர்களுக்கு உண்டான வேலை நிமித்தம் காரணமான தொடர முடியாமல் உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி மீத வேலைகளை தொடரச் சொல்ல இயலாத நிலையில் இக்கணக்கெடுப்பை முழுமையாக முடிக்கனும் என்கிற ஆர்வம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முடிக்க முயற்சிக்கிறோம்.

2. பேரூராட்சி திட்டத்தின் கீழ் செம்மைபட்டு வரும் மீராப்பள்ளி மயானத்தில் சில குடும்ப கோரிகள் ஏன் அகற்றப் படாத நிலையில் உள்ளது?
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மீராப்பள்ளி மயானத்தில் காடுகள் அகற்றப்பட்டு, வேலிகளை எடுத்துவிட்டு சுவர்கள் எழுப்பப்பட்டு, பவர் சேவர் எனப்படும் மின் விளக்குகள் கம்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பாதையும் புதிதாகப் போடப்பட்டு மண் அடிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இது பற்றி அந்தந்த குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டு கோரிகளை அகற்றிவிட்டு ஒரே மட்டமாக ஆக்கிவிடலாம் என்று நானே சொல்லியிருந்தேன். பரங்கிப்பேட்டையைப் பொறுத்தவரை பல கொள்கையுடையவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் 100 வருடங்களாக பாரம்பரியமாக எங்களின் குடும்பத்தினரை அடக்கம் செய்து வருகிறோம் என்று சிலர் கூறிவரும் காரணத்தினால், முழுமையாக கோரிகளை அகற்றி ஊரில் ஒரு சலசலப்பினை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. மீராப்பள்ளி நிர்வாகத்தின் நிலையும் இதுதான். தற்போது அதிக கோரிகள் தானாகவே இடிந்து போய்விட்டது. சிறிய அளவில் தான் மீதமுள்ள கோரிகள் உள்ளது. இதற்கு மேல் குடும்ப கோரி என்று யாரும் புதிதாக கட்ட வாய்ப்பு இல்லை. மீதமுள்ள கோரிகள் விரைவில் தானாகவே இடிந்துவிட்ட பிறகு, 10 வருடங்களுக்குப் பிறகு கோரிகள் இல்லாத மயானத்தை நாம் பார்க்கலாம்.

3. அவசத்திற்கோ முதலுதவிக்கோ கூப்பிட்டால் எந்த டாக்டரும் வருவதே கிடையாத நிலையில் இது குறித்து எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுத்தீர்களா?
பரங்கிப்பேட்டையில் முன்பு டாக்டர் நூர் முஹமது அவர்கள் மருத்துவ சேவை செய்து வந்தபோது, எந்த நேரத்திலும் (வீட்டிற்கு வந்தே) அவசரகால மற்றும் முதலுதவி சிகிச்சையளித்து வந்தார். அதன் பிறகு சில தொய்வுகள். அதன் பிறகு வேறு யாரும் வீட்டிற்கு கூப்பிட்டால் வருவது கிடையாது. இதற்காக வேண்டுகோள் விடுத்தும், சணடைப் போட்டும் பலனில்லை. இதற்கிடையில் கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஷகீலா பேகம் என்பவர் ஊரில் க்ளினிக் ஆரம்பிக்க ஜமாஅத்தை அனுகியபோது, ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அதாவது, எந்த சமுதாயத்தினரின் அவசரத்திற்காகவும் போன் செய்தாலும் சேவை மனப்பாண்மையுடன் சென்று பார்க்னும் என்று கூறினோம். இங்கு உயிர் போகிற தருணத்தில் கூட எந்த டாக்டரும் வந்து பல்ஸ் பார்க்க்கூட வரமுடியாத நிலையில் நிச்சயம் நீங்கள் இந்த சேவை செய்ய வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கூறினோம். அவர் இதை ஏற்றபிறகு, நாங்களே முன்னின்று மீராப்பள்ளித் தெருவில் (நவாப்ஜான் நானா அவர்களுடைய) ஒரு வீட்டை வாடகைக்கு பெற்றுத் தந்துள்ளோம். தற்போது யார் கூப்பிட்டாலும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் காட்டுமன்னார்குடியிலிருந்து ஒரு டாக்டர் (அய்னுல்லாகான்) ஊரில் க்ளினிக் ஆரம்பிக்க வீடு எதுவும் கிடைக்காமல் சிரமபட்டு ஜமாஅத்தை அணுகியபோது, சின்னத்தெருவில் ஷேக் இமாம் நானா அவர்களின் பழைய வீட்டின் போர்ஷன் ஒன்றை வாடகைக்குப் பெற்று தந்துள்ளோம். அவரும் எங்கள் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு தற்போது அவரும் அவசர சிகிச்சைக்கு எந்த நேரம் கூப்பிட்டாலும் மறுக்காமல் வருகிறார். அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இரண்டு டாக்டர்கள் மட்டுமே இருந்து வந்தனர். இதற்காக அமைச்சரிடம் முறையிட்டு தற்போது நான்கு டாக்டர்களைப் பெற்றுள்ளோம். இது மட்டுமில்லாமல் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு மேலும் விரிவாக்ம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த அரசு மருத்துமனையை தாலுக்கா அந்தஸ்து உள்ள மருத்துவமனையாக மாற்றித் தர கேட்டிருக்கிறோம். ஆறு மாதத்திற்குள் இது தாலுக்கா அந்தஸ்து பெற்ற மருத்துவமனையாக மாறிவிடும் என்று உறுதியளித்துள்ளார்கள். இதனால் ஆறு நிரந்தர மருத்துவர்கள் இங்கு இருப்பார்கள் இதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய வசதிகளும் நம் மருத்துவமனைக்கு கிடைக்கும். தற்போது டாக்டர் பிரச்னை 99 சதவீதம் முடிவுக்குவந்துவிட்டது.

4. அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் இல்லாமல் உள்ளதே?
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விளையாட்டுத் திடலாக இருந்து வந்த இடத்தில்தான் அரசினர் ஆண்கள் பள்ளி இப்போது புதிதாக இயங்கி வருகிறது. இறைவனின் கிருபையால், ஜமாஅத்தின் முயற்சியால்தான் விளையாட்டுத்திடலை அரசுக்கு (மாவட்ட ஆட்சித் தலைவருக்கு) புதிய பள்ளிக்கு காட்டினோம். இராஜஸ்தான் அரசு 1 கோடியே 20 இலட்ச ரூபாயும் வேல்ட் விஷன் 40 இலட்ச ரூபாயும் ஆக மொத்த 1.60 கோடி ரூபாய் செலவில் எல்லா வசதிகளுடனும் அருமையான கட்டிடத்தை கட்டிக் கொடுத்தார்கள். அதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால்தான் எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்ய முடியும். அது ஏற்கனவே பள்ளமான இடம் - மழை காலத்தில் தண்ணீர் தேங்கும் இடம். இது சம்மந்தமாக சுனாமி திட்ட அலுவலர்கள் போன்றோர் வந்து பார்த்து சைக்கிள் ஸ்டாண்ட், ஆழ்துளை கிணறு (நல்ல தண்ணீருக்காக) மற்றும் (விளையாட்டுத்திடலுக்கு போதிய இடம் உள்ளதால்) மண் அடித்தல் போன்றப் பணிகளை செய்து தர இருக்கிறார்கள். மேலும் லயன்ஸ் க்ளப் உதவியுடன் விளையாட்டடுத்திடலைச் சுற்றியும் பள்ளியிலும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. எல்லாம் சரியாக கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் சரி செய்யப்பட்டுவிடும். இது மட்டுமில்லாமல் மாணவர்கள் பெரியமதகு செல்லாமல் வண்ணாரப்பாளையம் வழியாக செல்ல தரைப்பாலம் ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் கொடுத்து விட்டார்.

5. அதே பள்ளியில் சில மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை குறித்து பிரச்சனை எழுந்துள்ளதே? குறிப்பாக மொபைல் ஃபோனை தவறாகப் பயன்படுத்துவதாகவும் சர்ச்சை உருவாகியுள்ளது, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும் நீங்கள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டீர்களா?
உண்மைதான். ஆனால் மொபைல் ஃபோனை தவறாக பயன்படுத்திய தகவல் எனக்குத் தெரியவில்லை. தூரமாக பள்ளி சென்று விட்டதால் கண்கானிப்பு குறைவாக உள்ளது. வகுப்புகள் முடிவதற்கு முன்பே மாணவர்கள் வெளியேறிவிடுவதாக தகவல்கள் வருகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பலமுறை இதை கண்டித்து சொல்லியிருக்கிறேன். பள்ளியின் தலைமையாசிரியர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ளது. இதற்குப் பிறகு புதிய தலைமையாசிரியர் பதவியேற்றவுடன் இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்கிற முறையில் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இதற்கு ஒரு சுமூக தீர்வு காண வழிவகை செய்வேன். மொபைல் போன் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இது சம்மந்தமாக அரசினர் பெண்கள் பள்ளியிடம் பேசியதற்கு அங்கு யாரும் பயன்படுத்துவதில்லை என தெரியவந்நது. ஆண்கள் பள்யிலும் இதை கடைப்பிடிக்கிறார்கள். இருந்தாலும் இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்.

6. நம் கண் முன்பே சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளிச் சிறுமியை தெரு நாய் ஒன்று பாய்ந்து கடித்தது. பொது மக்களுக்கு இடைஞ்சல் தரும் தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?
இப்போது தெரு நாய்களை பிடிக்க அரசு தடை செய்துள்ளது. இதற்கு பதிலாக ஆண் நாய்களை பிடித்து அதற்கு குடும்ப கட்டுப்பாடு செய்து திரும்ப வந்து விட்டுவிட வேண்டும் என அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. இது பெரும்பாலும் சாத்தியம் கிடையாது. நான் பேரூராட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றிய முதல் தீர்மானமே இந்த தெருநாய் ஒழிப்பு தீர்மானம்தான். அரசாங்க சட்டம் ஒருபுறமிருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 10 நாட்களாக 498 நாய்களைப் பிடித்தோம். இதனால் மற்ற நாய்கள் பதுங்க ஆரம்பித்து விட்டது. மீதம் உள்ள சுமார் 500 நாய்களையும் பிடிக்க ஏற்பாடு செய்தபோது வேண்டாத சில நபர்கள் 'இவர் அரசாங்கத்தை மீறி செயல்படுகிறார்' என்று புகார் அளித்துவிட்டதால், அரசு தரப்பில் இனி நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு மட்டும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக எல்லா பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய கூட்டத்தில் இது முன் வைக்கப்பட்டுள்ளது. அரசு இதை பரிசீலிக்கும் என்று கூறியுள்ளது

7. பள்ளிவாசல்களின் பொதுக்குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது பற்றி....
எங்களுடைய காலங்களிலெல்லாம் குளத்தில் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கு கூட்டுக் குடும்ப வாழ்கை முறை முக்கிய காரணமாக இருந்து வந்தது. அப்போதெல்லாம் வீட்டிற்கு பொதுவாக இருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுத்து துவைக்க வேண்டியிருந்ததால் குளத்தில் அதிகம் பேர் குளிக்க வருவார்கள். ஆனால் தற்போது தனிக்குடும்பம், ஷவர் பாத் என மாறி அதிகமாய் யாரும் குளத்திற்கு செல்வது கிடையாது. வழக்கமாய் குளத்தில் குளித்தே பழகியவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த காலத்தில் 100 பேர் குளித்தார்கள் என்றால் இப்போது 10 பேர்தான் குளத்திற்கு வருகிறார்கள். இருந்தாலும் நம்முடைய பள்ளிகளின் பழமையான குளங்களை குளிப்பதற்க ஏற்றவாறு மாற்றியமைக்கனும் என்கிற எண்ணம் இருக்கிறது. இதற்காக பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஊர் மக்கள் ஒத்துழைப்பு தந்தால் விரைவில் இது சரி செய்யப்படும். குடிசைகள் நிறைந்த ஹக்கா சாயபு தர்காவளாக பகுதி மக்களின் அவசியம் கருதி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒரு லட்சம் செலவில் அங்குள்ள குளத்தை தூர் வாரி படிகட்டு கட்ட ஏற்பாடு செய்து பணிகள் நடந்து கொண்டு வருகின்றன.
மேலும் வாசிக்க>>>> "நிறைவு பகுதி - பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் அளித்த பேட்டியின் 3-வது பகுதி."

புதன், 12 மார்ச், 2008 0 கருத்துரைகள்!

மார்ச் 12 :பரங்கிப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக நிலவிவரும் வெப்பத்தை தணிக்கும் விதமாக நேற்று ஆரம்பித்த மழை தொடர்ந்து கடுமையாக பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது.இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. வெளியூர் செல்லும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் .வங்ககடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் மழை - இயல்பு வாழ்கை பாதிப்பு."

செவ்வாய், 11 மார்ச், 2008 1 கருத்துரைகள்!


நாகரீக சமுதாயத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று விளயாட்டு மற்றும் உடற்பயிற்சி. உடலுக்கு வலுவூட்டும் அதே வேளயில், சிந்தனைகள வீணாக சிதறவிடாமல் அவை காக்கின்றன. பரங்கிப்பேட்டையில் பாட்மின்டன், ஷட்டில் தான் தேசிய விளயாட்டாக (சில தொய்வுகள் இருந்தாலும்) இருக்கிறது. வாலிபால் மற்றும் பெயர் குறிப்பிட்டால் பணம் செலுத்த வேண்டிவருமோ என பயப்படும் அந்த கார்ப்பரேட் விளயாட்டும் ஆங்காங்கே நடக்கின்றன. இந்நிலையில், பரங்கிப்பேட்டையில் கிக் பாக்ஸிங் பயிற்சி வகுப்புக்கள் துவங்கப்பட்டுள்ளது மனநிறைவினை தருகின்றது. கல்விக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஹமீது கவுஸ் அவர்களின் மிகுந்த ஆர்வம் மற்றும் முயற்சியினாலும், கடலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் முயற்சியினாலும் துவங்கப்பட்டுள்ள இதனை ஜமாஅத் தலைவர் யூனூஸ் நானா அவர்கள் கையுறை வழங்கி துவக்கி வைத்தார். இதுபோன்ற பிரயோஜனமிக்க முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும் பரங்கிப்பேட்டைக்கென்று ஒரு அவுட்டோர் மற்றும் இன்டோர் விளயாட்டரங்கம் (ஸ்டேடியம்) திறன்வாய்ந்த உடற்பயிற்சி மையம் (ஜிம்னாஷியம்) மற்றும் அனைத்து விளயாட்டு போட்டிகளயும் ஒருங்கினைத்து நடத்த ஒரு மைய டீம் ஆகியவை பற்றிய கனவு என்று நினைவாகும் என்றும் ஒரு ஏக்கம் பூக்கிறது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் கிக் பாக்ஸிங் பயிற்சி வகுப்புக்கள்"

சனி, 8 மார்ச், 2008 1 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை மஹ்முதிய்யா ஷாதி மஹாலில் (08.03.2008) காலை நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மூனா ஆஸ்திரேலியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத் முதல்வர் நடன சபேசன் கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள பற்றி விளக்கினார். அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் பாவாடைசாமி அவர்கள், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி துணைத்தலைமையாசிரியர் ஆர்.பாலசுப்ரமணியன் கல்வி பற்றி அக்கறையுடன் தனது கருத்து மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறித்து விளக்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோதிபாசுஇ பேராசிரியர் லியாகத் அலிகான் (மூனா ஆஸ்திரேலியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) மற்றும் மெளலவி அ.பா. கலில் அஹ்மத் பாகவி ஆகியேர் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை & C.W.O. இனைந்து நடத்திய கல்வி விழிப்புனர்வு முகாம்"

0 கருத்துரைகள்!

1. ஹஜ் பெருநாள் அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் 'பெரிய தெரு' சாலையில் உடனடியாக பேட்ச் ஒர்க் செய்யப்படும் என்று சொல்லியும் இதுவரை எந்த ஏற்பாடும் செய்யப்படாமலேயே உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை மீண்டும் தொடர்பு கொண்டீர்களா?
சரிதான். இதற்காக சஞ்சீவிராயர் முனை முதல் சின்னக்கடை வரை மாவட்ட ஆட்சித் தலைவர் 3 இலட்சம் ரூபாய் செலவில் பேட்ச் ஒர்க் செய்ய அனுமதியளித்துவிட்டார். ஆனால் இதற்கிடையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ஆர். ஆர் எனப்படும் நெடுஞ்சாலைப் பிரிவு திட்டத்தின் கீழ் ஆலப்பாக்கத்திலிருந்து (பெரியகுப்பம்) சாமியார்பேட்டை, சின்னக்கடை-பெரியத் தெரு வழியாக அன்னங்கோயில் வரை 9.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடடில் 7 மீட்டர் அகலமுடைய சாலையை உருவாக்கி வருகிறார்கள். இதற்கிடையில் மழையினால் பெரியதெருவில் ஏற்பட்ட சேதத்தை பேரூராட்சி சொந்த செலவில் ஜே.சி.பி. வைத்து சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து இடையூறில்லாமல் ஓரளவு சரிசெய்யப்பட்டு விட்டது. அதே போல் பு.முட்லூரிலிருந்து மெயின்ரோடு-பெரியக்கடைத் தெரு வழியாக கண்டெடுத்த தர்கா வரை 7 மீட்டர் அகலமுள்ள சாலையை உருவாக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இது மட்டுமில்லாமல் தெத்துக்கடை காந்தி சிலையிலிருந்து போலிஸ் ஸ்டேஷன் வழியாக ஹைஸ்கூல் ரோடு முடிய 7 மீ அகலமுள்ள சாலையும் போடப்பட்டுவிடும். இப்பபணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன். தற்போது பெரியக்கடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இதன்படி ஏற்கனவே பேரூராட்சியில் நிறைவேறிய தீர்மானத்தின் படி, பேருந்துகள் காந்தி சிலையிலிருந்து பெரிய கடை - பக்கீர் மாலிம் தெரு வரியாக சென்று திரும்பும் போது ஹைஸ்கூல் ரோடு - சஞ்சிவீராயர் கோயில் தெரு வழியாக செலுத்தப்டும். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியும் குறையும்.

2. பணி முழுதும் முடிக்கப்பட்டப்பிறகும் நெடு நாட்களாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறக்கப்படாமலேயே உள்ளதே?
இதற்காக கடந்த 25, 26 தேதிகளில் 3 அமைச்சர்கள் மூலம் இவற்றை திறக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மார்ச் 10 தேதிக்குள் வந்து திறந்து தருவதாக கூறியிருக்கிறார்கள். அரசு பெண்கள் பள்ளியைப் பொருத்தவரை 69 இலட்சம் ரூ செலவில் கட்டிடத்தை மட்டுமே கட்டிக்கொடுத்தார்கள். பள்ளிக்கூடம் பெண்கள் பயிலும் இடமாக இருப்பதினால் அவர்களின் பாதுகாப்பு குறித்து பலர் கோரிக்கை வைத்ததினால் ஜமாஅத் முன்னின்று லயன்ஸ் கிளப் உதவியுடன் கேட்டை அடைத்து பாதுக்காப்பானதாகவும் சகோ. ஹபீப் ரஹ்மான் அவர்கள் மதில் சுவற்றை உயர்த்தி 40 அடி நீளம் வரை கட்டிக் கொடுத்து பெயிண்டிங் வேலையையும் சொந்த செலவில் செய்துக் கொடுத்தார். மேலும் ஆண்கள் மேநிலைப் பள்ளியாக இயங்கி வந்த போது இங்கு பராமரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் லேப் ஒன்றை இடிக்காமல் கம்ப்ப்யூட்ர்களுடன் இப்பெண்கள் மேநிலைப் பள்ளி பயன் பெற ஆண்கள் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூ நிதியளிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் பெண்கள் பள்ளி நிர்வாகத்திதிடம் இதற்கான நிதியாதாரம் இல்லாததினால், என் மனைவி அந்த வார்டு உறுப்பினர் என்கிற முறையில் என்னுடைய சொந்த பணத்தில் 5000 ரூபாயை கொடுத்து இதை பெண்கள் பள்ளிக்காக பெற்றோம். மருத்துவமனையைப் பொருத்தவரை இராஜஸ்தான் அரசு நிதியுதவியடன் கட்டப்பட்டதால் அந்த மாநில முதல்வரே வந்து திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு யாரையாவது வைத்து திறந்துக் கொள்ள இத்திட்டக்குழு எங்களிடம் ஒப்படைத்து சென்றுவிட்டது. பின்பு இதிலிருந்த நிறைய குறைபாடுகளை என்னுடைய செலவில் சரி செய்யப்பட்டு இப்போது தயார் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் மார்ச் 10 தேதிக்குள் திறக்கப்பட்டுவிடும். திறந்தபின் எல்லோரும் பயன் பெரும் வகையில் நல்ல மருத்துவமனையாக இருக்கும். இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும், அன்றைய மக்கள்தொகையை கணக்கு வைத்து மேலும் வசதிகளுடன் மருத்துவர்கள் தங்க குடியிருப்புகள், சித்த மருத்துவமனை, ஆம்புலன்ஸ் நிறுத்த இடம் போன்றவற்றை கருத்தில் கொண்டு கச்சேரித் தெரு தொடக்கப்பள்ளியும் மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வர ஏற்பாடுகளை செய்து விட்டோம். இது தவிர பிரேத பரிசோதனைக்கூடமும் மாற்றி பள்ளி வளாகத்தில் அமைய ஏற்பாடு செய்துள்ளோம்.

3. தங்களையும் ஜமாஅத்தின் ஒரு சிலரையும் தவிர பெரும்பாலான ஜமாஅத் நிர்வாகிகள் செயல்படுவதாகவே தெரியவில்லை. நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்-நீக்கும் அதிகாரம் உள்ள நீங்கள் செயல்படக்கூடியவர்களை ஏன் தேர்ந்தெடுத்து உங்கள் பணிகளை இன்னும் செம்மைப் படுத்தக்கூடாது?
இது நான் பதவியேற்ற 9 வருடங்களாக உள்ள பிரச்சினை. எந்த வகையிலும் தொய்வு இருக்கக் கூடாது என்று முயற்சிகள் செய்கிறோம். அவர் அவர்களின் வேலைகளை ஜமாஅத் நிர்வாகிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் அந்த வேலையைத் தான் செய்யனும், சிலர் இந்த வேலையைத் தான் செய்யனும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். யார் எந்தப் பணியை செய்தாலும் பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம்தான் இருக்கிறது. அதன்பிறகு யார் வருகிறார்களோ அவர்கள் சிறப்பாக செயல்பட அதற்குண்டான வழிமுறைகளை நாங்கள் மேற்கொள்வோம்.

4. பல விசயங்களில் சிறப்பாக செயல்படும் நீங்கள் உங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த நிர்வாகக் குழுவினை அடையாளம் கண்டு உருவாக்க எடுக்கும் முயற்சிகள் என்ன?
இது குறித்து (இது போல) ஏற்கனவே ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னுடைய இடைவிடாத உழைப்பின் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் அமைய செயல்பட்டு வருகிறேன். அப்படி வருபவர்களுக்கு எங்களால் இயன்ற ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் தர தயாரக உள்ளோம். ஆனால் யார் வருவார் - யார் வரனும் என்பதை இப்போதே நாம் சொல்ல முடியாது. ஏனென்றால் தேர்தல் முறையில் தான் அடுத்த நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கனும் என்று பைலா போடப்பட்டுள்ளது. யார் மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்கள்தான் வரவேண்டும். ஜனநாயகத்துக்கு முரணாக இவர்தான் வர வேண்டும் என்று கை காட்டி ஒருவரை முன்னிருத்த விரும்பவில்லை. எனவே, பைலாவின்படி, என் பதவிக் காலம் முடியும்போது பொதுக்குழுவைக் கூட்டி-தேர்தல் அறிவித்து- 10 பேர் நின்றாலும் மக்கள் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் தலைவராக வருவார். இதை முழுமையாகப் பின்பற்ற முயற்சிகளை செய்கிறோம். இதனால் நாங்கள் யாரையும் கை காட்டி இவர் தான் வரணும் என்று விரும்பவில்லை.

5. ஐக்கிய ஜமாஅத்தின் செயற்பாடுகள் பற்றி எதுவுமே தெரியாமல் அதனை குறை சொல்லும் போக்கு இருந்து வருகிறது. இதை தவிர்க்க ஜமாஅத்தின் செயற்குழுவில் அதிகளவில் சமுதாய அக்கறையுள்ளவர்களை குறிப்பாக இளைஞர்களை செயற்குழுவில் இணைப்பதுப் பற்றி ஜமாஅத் என்ன நினைக்கிறது?
ஜமாஅத்தில் 180 பேர் செயற்கழு உறுப்பினர்களாக உள்ளனர். கடந்தக் காலங்களை ஒப்பிட்டு 3 மாதங்களாக கூட்டத்திற்கு வராதவர்களை நீக்கி விட்டு புதியவர்களை நியமிக்கிறோம். இந்த 180 பேர்களில் கிட்டதட்ட 90 பேர் இளைஞர்கள். செயற்குழு கூடும்போது 90 (அ) 100 பேர்தான் கலந்துக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்க 100 சதவீத உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இயலாது. தேவைப்படும் நேரங்களில் பொதுக்குழு கூட்டப்படும்போது ஊர் விசயங்கள் மற்றும் ஒரு சில குடும்பங்களில் நடக்கும் தவறான செயல்கள் குறித்து கருத்து சொல்ல ஆயிரம் பேர் வந்துவிடுவார்கள். இந்த ஆயிரம் பேரை வைத்துக் கொண்டு (எந்த தவறான) பிரச்னைகளை எப்படி கையாள்வது-அணுகுவது இது உண்மையா-பொய்யா என்று ஆராய்ந்து செயல்பட வாய்ப்புகள் கிடையாது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே சொந்தக் கருத்து சொல்வதெனபது நடைமுறையில் உள்ளதுதான். மற்றபடி இளைஞர்களை அதிகமாக செயற்குழுவில் சேர்க்கனும் என்றுதான் விரும்புகிறோம். இதற்காக கல்விக்குழு தலைவர் ஹமீத் மரைக்காயர் அவர்களிடம் இளைஞர்களின் பட்டியலைக் கேட்டுள்ளோம். எனவே அதிகமான இளைஞர்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் சேர்க்கப்படுவார்கள்.

6. 2 வருடங்களுக்கு முன்பு ஜமாஅத் பொதுக்குழுவில் 'வரதட்சனை ஒழிப்பு தீர்மானம்' போடப்பட்டது, அத்தீர்மானம் செயல் வடிவில் உள்ளதா? நிறைய பேர் வரதட்சனை வாங்குவதாகவே கருத்து தென்படுகிறதே?
வரதட்சணை வாங்கக்கூடாது, சீர் சாமான்கள் வாங்கக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போட்டது உண்மைதான். மேலும் பேண்ட் வாத்தியங்கள் வைக்கக்கூடாது, ரேடியோ, வானவேடிக்கைகள் கூடாது என்று சட்டங்கள் போட்டு திருமண நிகழ்ச்சிகளை வசதிக்கு தக்கவாறு மிக எளிமையாக செய்யுங்கள் என்று சொன்னோம். திருமண செலவுகளைக் குறைத்துக் கொண்டு ஏழைகளுக்கும் குறிப்பாக கல்விக்கு உதவிகளை செய்யுங்கள் என்று வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஊரில் நடக்கும் ஒவ்வொரு திருமண முடிவின் போதும் ஜமாஅத் பிரதிநிதி யாரவது கலந்துக் கொண்டு ஜமாஅத் மூலமாக உருவாக்கப்பட்ட உறுதிப் படிவத்தில் 'வரதட்சணை வாங்குவதிலலை என உறுதி கூறுகிறோம்' என்று இரு தரப்பினரிடமும் கையெழுத்து வாங்குகிறோம். அவர்களும் கையெழுத்துப் போட்டு தருகிறார்கள். இதுதான் எங்களுக்கு நம்பிக்கை. அவர்கள் மறைமுகமாக வாங்குகிறார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. மற்றபடி பேண்ட் வாத்தியங்கள், ரேடியோ போன்றவை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இது ஒருவகையில் மாபெரும் வெற்றி.
மேலும் வாசிக்க>>>> "பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் MYPNO வலைப்பூவிற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியின் 2-வது பகுதி"

ஞாயிறு, 2 மார்ச், 2008 2 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளி மாலை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அப்துல் காதர் (அதிராம்பட்டினம்) பெண்கல்வியின் அவசியத்ததையும் இஸ்லாம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதையும் சினிமா-சீரியல், ஆட்டம்-பாட்டத்தை கடுமையாக விமர்சித்தும் பேசியது சிறப்பம்சமாக இருந்தது. கடைசியில் இவரின் தலைமையிலேயே கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகள் சினிமா பாடல்களுக்கு அரங்கு அதிர ஆட்டம்-பாட்டம் போட்டனர். ஆண்டுவிழாக்கள் என்றாலே அரங்கு அதிர ஆட்டம் போட்டுத்தான் மாணவ-மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிகொணர வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் இந்தத் திறமைகளை(?) காண பெற்றோர்கள் இரவு 9.30 மணி வரை காத்திருந்து ரசித்ததுதான் வேதனை.
மேலும் வாசிக்க>>>> "ஆஸ்திரேலியன் பள்ளியின் ஆண்டு விழா!"

சனி, 1 மார்ச், 2008 0 கருத்துரைகள்!

நேற்று வெள்ளிக் கிழமை (ஜூம்ஆ) தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் நிர்வாகிகள் பங்கேற்று பேசி கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்கள்.

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி பரிபாலன சபையின் சட்டதிட்டங்கள் 1957-ல் ஏற்படுத்தப்பட்டது, தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரணத்தினாலும், வஃக்பு வாரியத்தில் அதனை பதிவு செய்யப்படாத காரணத்தினாலும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய ஆலோசனைப்படி நமது மீராப்பள்ளி மற்றும் அல்மதரஸத்துல் மஹ்மூதியா நிர்வாகத்திற்காக நிர்வாக செயல் திட்டங்கள், சட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டு தங்களின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.
பொதுமக்களாகிய தாங்கள் இவற்றை பார்வை செய்து சட்ட வரைவுகளில் ஏதேனம் திருத்தங்கள் செய்யவேண்டுமென்றால் தங்களது அரிய ஆலோசனைகளை இச்சட்ட வரைவு வெளியிட்ட 15-தினங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக நிர்வாகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வாசிக்க>>>> "ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் பொதுக்குழு கூட்டம்."

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234