புதன், 15 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐந்து லட்சம் செலவில் ஆழப்படுத்தப்பட்ட குளம் மக்களுக்கு பயன்படாத அவலம்

ஐந்து லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட குளம் முறையாக தூர்வாரப்படாமல் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் சந்தைதோப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2007-2008) ஐந்து லட்சம் ரூபாய் செலவில் குளம் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது.

ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமல் பெயரளவில் குளத்தில் இருந்த மணலை ஒதுக்கி விட்டு, கரைப்பகுதியில் கல் அடிக்கப்பட்டது.

குளத்தை முழுமையாக தூர் வாரி சரி செய்யாததால் கடந்த நவம்பரில் ஏற்பட்ட மழையில் குளத்தில் தண்ணீர் தேங்கி குளம், தூர்ந்து, எவ்வித பயன்பாடும் இன்றியுள்ளது.

இந்த குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு பாடம் நடந்தும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் படைப்பாற்றல் கல்வி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பாடம் குறித்து நான்கு கட்டங்களாக நடந்தது.

தலைமை ஆசிரியை மெர்சிஜாய் முன்னிலை வகித்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவசண்முகம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துசுகுமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்து ஆலோசனைகள் மற்றும் படைப்பாற்றல் கல்வி குறித்து பேசினார்.

முகாமில் பங்கேற்ற 128 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் மாறன், ஜெயராமன், பாலமுருகன், பூங்கோதை, மாலதி, மஞ்சுளா, பாஸ்கர், கே.பாஸ்கரன், பிரியதர்ஷினி, வேம்பு பயிற்சி அளித்தனர்.

இறப்புச் செய்தி

தியாகுச் செட்டி தெரு, மர்ஹும் ஹனிபா மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் காதர் மஸ்தான் அவர்களின் மருமகனாரும், பாவா மரைக்காயர் அவர்களின் சகோதரரும், சாகுல் ஹமீது, ஜாஃபர் அலி, இவர்களின் தகப்பனாரும், அலி ஆஜம், ஜாக்கீர் உசேன் இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி H. கிதர் முஹம்மது அவர்கள் மர்ஹும்ஆகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்