B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹால் திறப்பு விழா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது. B.M. இஸ்ஹாக் மரைக்காயர் அவர்களால் இந்த புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
கலிமா K ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினில் ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், அப்துல் ஹமீது மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய ஜாமியா மஸ்ஜித் மற்றும் அல் மத்ரசத்துல் மஹமூதியா நிர்வாகி A. முஹம்மது ஆரிப் அவர்கள் ஜாமியா மஸ்ஜித்ற்கும், அல் மத்ரசத்துல் மஹமூதியாவிற்கும் ஜனாப் மர்ஹும் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் அவர்கள் எவ்வாறெல்லாம் கனவு கண்டு பெரும் பாடு பட்டு உழைத்தார்கள் என்பதை கூறி அவர்களின் பெயர் இந்த மண்டபத்திற்கு வைக்கப்பட்டிருப்பதை பொருத்தமாக விளக்கினார்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் உரையாற்றுகையில், இத்தனை மகத்தான பள்ளியினையும், மதர்சாவினையும், இந்த இரு மண்டபங்களையும் மறுமையில் கூலி என்பதை தவிர எந்த எதிர்பார்புகளும் இன்றி இத்தனை திறம்பட நிர்வகித்து வரும் நிர்வாகிகளை மனமார பாராட்டினார். இவர்களை போன்றவர்களை பாராட்டாமல் போனாலும், தொந்தரவு கொடுப்போர்களை பற்றி தான் வருத்தப்படுவதாக கூறினார்.
பிறகு பேசிய கும்மத் பள்ளியின் இமாம் M.S. காஜா முயினுத்தீன் அவர்கள் எண்ணங்களை பொறுத்தே எந்த செயலும் அமையும் எனும் ஹதீஸை கூறி மண்டபத்தின் உருவாக்கத்தில் உள்ள அனைவரின் நல்எண்ணங்களால் தான் இத்தனை பெரிய மண்டபமும், துணை மண்டபமும், அதன் சரியான நிர்வாகமும் நல்ல முறையில் சாத்தியமாகின்றன என்று கூறினார்.
அல் மத்ரசத்துல் மஹமூதியா முதல்வர் A. சித்திக் அலி அவர்கள் பேசுகையில் எந்த காரியம் பிஸ்மில்லாஹ் (அல்லாஹுவின் பெயர் கொண்டு துவங்கப்படவில்லயோ அதில் அபிவிருத்தி இருக்காது. இந்த மண்டபம் அல்லாஹுவின் மாபெரும் கருணையால் அல்லாஹுவின் திருப்பெயர் கொண்டு திறக்கப்பட்டதுடன் இதில் முதலாக நடந்த நிகழ்ச்சி ஹாஜிகளுக்கான பயான் நிகழ்ச்சி என்பதையும் அல்லாஹும்ம லப்பைக் என்ற முழக்கமே இந்த மண்டபத்தில் முதன்முதலில் கேட்டது என்றும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
அல் ஹசனாத் மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் S.I. அப்துல் காதர் அவர்கள் தனது உரையில் எந்த நல்ல செயலுக்கும் அதை தொடர்ந்து நன்மைகள் அதை துவக்கியவருக்கு வந்து சேர்ந்து கொண்டிக்கும் என்று கூறிவிட்டு இந்த மதரசாவினை உருவாக்கியவர்கள் இந்த நல்ல காரியம் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக அதன் பொருளாதார நலன்களுக்காக ஷாதி மஹால் எனும் மண்டபத்தை வருமானம் தரும் வகையில் உருவாக்கியது தான் மிகபுத்திசாலித்தனமான காரியம் என்றார். இந்த மாணவரகள் பிற்காலத்தில் குரான் ஹதீஸை போதிக்கக்கூடிய சிறந்த ஆலிம்களாக பரிணமிக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் M. அப்துல் காதர் உமரி அவர்கள் மதரசாவின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசினார்.
நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிகவும் கச்சிதமாக அசர் முதல் மக்ரிப் வரை திட்டமிட்டு மிக சரியாக முடித்தது குறிப்பிடத்தக்கது. வந்திருந்தவர்களுக்கு இனிப்பு காரம் காபி வழங்கப்பட்டது. மக்ரிப் தொழுகை அழைப்பிற்கு சற்று முன்னதாகவே முத்தவல்லி பஷீர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதுடன் விழா இனிதே நிறைவுற்றது.