புதன், 25 டிசம்பர், 2024

ஆழிப்பேரலை 20 ஆம் ஆண்டு!

2004-2024

சுனாமி (ஆழிப்பேரலை)  என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் தாக்கியதாக ஒரு தகவல் சொல்லப்பட்டு இருந்தாலும், 2004-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சுனாமி என்பது எவ்வளவு பேரழிவு ஏற்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட பெரிய தாக்கத்தையும் கண்டு அறிந்ததில்லையோ அதுபோல் நமக்கும் அது ஒரு செய்தியாகத்  தான் இருந்திருக்கும்.  

(ஒரு பிரபல நாளிதழ் கூட பெயர் தெரியாமல் அடுத்த நாள் 'தமிழகத்தை தாக்கிய டி-சுனாமி' என்று செய்தி வெளியிட்டது )

பாவம் அவர்களுக்கே தெரியவில்லை.

ஆனால் 2004 டிசம்பர் 26 அன்று காலை 8 மணிக்கு மேல் தமிழக கடற்கரையைச் சார்ந்த மக்கள் கண்டுக் கொண்டார்கள்.

மழை வெள்ளத்தால் படிப்படியாகத் தண்ணீர் வந்ததைப் பார்த்திருக்கலாம்.

கடல் தண்ணீர் ஊருக்கு வந்ததைக் கூட சிலசமயம் பார்த்திருக்கலாம்.

ஒரே மூச்சில் சுமார் 30 மீட்டர்(100அடி) வெள்ளம் இரண்டு தென்னை மரம் உயரம் அளவு உயர்ந்து பாரிய அலையாக, அழிவுப் பேரலையாக,

ஆழிப்பேரலையாக ஊருக்கு வந்ததையும் சுமத்ராவிற்கு எந்த விதத் தொடர்புமில்லாத மனிதர்கள் மாண்டதையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்தோனேசியா சுமத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலத்தட்டுகள் (டெக்டானிக் பிளேட்கள்-Plate tectonics) அதில் இந்தியத் தட்டும் மியான்மர் தட்டும் கடலுக்கு அடியில் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட நிலநடுக்கமே சுனாமியாக உருவெடுத்து இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள தமிழகம் உட்பட சில நாடுகளை 2004 ஆம் ஆண்டு தாக்கியது. 

அன்று கடலுக்கடியில் 9.1-9.3 ரிக்டர் அளவு பதிவாகிய நிலநடுக்கம் என்பதை கடல் மேற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலாடிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கரை வந்தபிறகு அந்தப் பெரிய அழிவைக் கண்டனர். உறவுகள் மாண்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடற்பரப்பில் ஏற்பட்ட பெரிய அளவு நிலநடுக்கம், நிலத்தில் ஏற்பட்டிருந்தால் 

பல அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

சுனாமி தாக்கிய 14 நாடுகளில் இரண்டே கால் லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து கடலூர் மாவட்டத்தில் மொத்தமாக 600 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் அந்த எண்ணிக்கையில் தேவனாம்பட்டினம், சாமியார் பேட்டையில் தான் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர்.


கடலூர்

மெரினா

புதுக்குப்பம்

கடலூர்

நாகை

நாகை

கடலூர்

நாகை

சுமத்ரா என்பது தங்கத் தீவு என்ற பொருளில் அழைத்தாலும், கடல் சூழ்ந்த தீவாக இருப்பதால் சமுத்திரா என்கிற வடமொழி சொல்லும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தோனேசியா சுமத்ரா தீவில் உள்ளுர் நேரப்படி காலை 7.59 ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப்பேரலையாக உருவாகி இந்தியப் பெருங்கடலில் பயணித்து தமிழக கடற்கரையை உள்ளுர் நேரப்படி காலை 8:10 (ஊருக்கு ஊர் மாற்றம் இருக்கலாம்) தாக்கியது. 

சுமத்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நமது ஊர் பரங்கிப்பேட்டையில் சிலருக்கு லேசான தலைச்சுற்றல், குமட்டல் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால்  கடற்கரைகளில் ஒட்டி வாழும் மனிதர்களைப் பொறுத்தவரை அந்த தலைச்சுற்றல் பெரிய அழிவைத் தான் ஏற்படுத்த போகிறது என்கிற உள்ளுணர்வாக  அதனை எடுத்துக்கொள்ளவில்லை.

விலங்குகளுக்கு மட்டும் உள்ளுணர்வு  ஏற்பட்டும் அதனால் அவை அன்றைக்கு வெளியேறியதாக  தகவல் ஒன்று உள்ளது. கயிற்றில் கட்டி வைக்கப்பட்ட வளர்ப்பு விலங்குகளை தவிர மற்ற விலங்குகள் அதிகளவில் இந்த சுனாமியில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது உண்மையும் வியப்புமாகும்.

பரங்கிப்பேட்டையில் சுனாமி தாக்கிய போது கலங்கரை விளக்கம் உயரத்தின் முக்கால் அளவு மூழ்கி போகும் வரை உள்ள தடம் தெரிந்தது. அந்த பேரலையின் நீர், கடல் நீர் போல் தெளிவான நீராக இல்லாமல் குப்பைகளை கரைத்துக் கொண்டு கழிவு நீர் போல் காட்சி அளித்த கறுப்பு நீர் பேரலை தடம் பதித்திருந்தது. 

கணவாய் மீனின் தலையில் இருக்கும் மை'யை போல் வண்ணம் கொண்டிருந்தது.

கடல் துப்பிய தண்ணீரின் வேக ஓட்டம்  கிளுர் நபிப்பள்ளி (ஷாஹே மஹான் தர்கா) வரை லேசாக வந்து வேகத்தை முடித்துக் கொண்டது.

மற்றொரு வழியாக கஸ்டம்ஸ் சிமெண்ட் பாலம் வழியாகவும் தண்ணீர் ஏறியது.

பரங்கிப்பேட்டை அண்ணங்கோயில் வத்தக்கரையில் நின்றிருந்த மீனவர்களும், மீன் வாங்கச் சென்றவர்களும், நடைப் பயிற்சி செய்த அனைவரையும் ஒரு சேர பேரலை அடித்துக் கொண்டு 500 மீட்டர் தள்ளி எறிந்தது. 

அதில் அன்று கலங்கரை விளக்கம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பின் உள்ளேயும் பலர் சிக்கி மடிந்தனர்.

சின்னூர், புதுப்பேட்டை, புதுகுப்பம் வே.பேட்டை சாமியார்ப் பேட்டை ஆகிய பகுதிகள் பெரிய பாதிப்புகளைக் கண்டிருந்தன என்பதை  சுனாமி தாக்கிய சில நிமிடங்களில் நேராகக் கண்ட போது தெரிந்தது.

சாலை எங்கும் குவியல் குவியலாக மனித உடல்கள் மர உச்சியிலும் மனித உடல்கள். மீட்ட உடல்களை அடையாள தெரிந்த, தெரியாத உடல்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டு பரங்கிப்பேட்டை பெரிய மதகு ஊராட்சி  அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் இரண்டு நாள்களாக மீட்கப்படாத உடல்களை மீட்க துணை இராணுவம் வந்தடைந்தது.

ஏர்டெல்லின் தொலைதொடர்பு சேவையும் விரைவாக கொடுக்கப்பட்டது.

சுனாமி  சகோதர மீனவ கிராமங்களைத் தாக்கிய செய்தி அறிந்த,  பரங்கிப்பேட்டை முஸ்லிம் தன்னார்வலர்கள் மற்றும்  இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் இணைந்து துரிதமாக, போர்க்கால அடிப்படையில்  பதற்றமான 

 Panic- க்கான அந்த நேரத்திலும், இறைவனின் அருளால் பல உயிர்களைப் பேணி காத்தனர்.

ஒவ்வொருவரின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களும் மட்டுமின்றி சிலரின் தோள்பட்டைகளும் இறந்தவர்கள்/காயம்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்தியாக செயற்பட்டன. 

பாதிக்கப்பட்ட சகோதர மத மக்கள் உட்பட, அனைத்து மக்களையும் தங்கவைத்து உணவு வழங்குவதிலும் தேர்ந்த முன்மாதிரி ஊராகத் தான்  அன்று பரங்கிப்பேட்டை இருந்தது. கல்யாண கூடங்கள் திறந்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் சுனாமி ஏற்படுத்திய வடுக்கள்  ஆறாதது என்றாலும் விட்டுச் சென்ற சுவடுகள் என்பது வித்தியாசமா னது.

ஒரு சகோதர மதத்தைச் சேர்ந்த ஒரு தாய்க்கு மய்யித் பெட்டி வாங்கி அவரை அடக்கம் செய்யப்பட்டது.

மய்யித் பெட்டி மற்ற மதத்தார்கள் வாங்குவது இயல்புதானே? என்றாலும்..

'நான் மரித்து போனால் மய்யித் பெட்டி வாங்கி தான் அடக்கப்பட வேண்டும்' என்று அந்த சகோதர மதத்துத் தாய் முன்பே விரும்பியதாகவும் தகவல்! 

மீண்டும் சுனாமியாமே?

நீர்  சூறாவளியாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வதந்திதான் தீரா வலியாக இருந்தது.

சுனாமி பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களில் வசித்த மக்கள் கூட அதைத் தொடர்ந்த சில நாள்களில் பயங்களின்றி அந்தந்த ஊர்களிலேயே வசித்தனர். 

ஆனால்  கடற்கரை அருகில் உள்ள ஊரில் சுனாமிக்குப் பிறகு திருட்டு நடப்பதாகவும் மீண்டும் இன்னொரு சுனாமி வருகிறது என்றும் அஞ்சி அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்ப் பக்கம் உள்ள  உறவினர் வீட்டுக்குச் சென்று விடலாம் எனத் தீர்மானித்து சிலர் அருகில் உள்ள அந்த ஊரில் கரை ஒதுங்கினர்.

சுனாமி அடித்து மூன்றாவது நாள்

சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இருந்து பெரிய பேருந்து நிலையம் நோக்கி ஒரு பெருங்கூட்டம் விழுந்தடித்து ஓடியது  'இன்னொரு சுனாமி வந்து விட்டதாம்' என்று இதை நம்பி நின்றிருந்த பேருந்தும் ஸ்டார்ட் செய்து புகை பறக்க மேற்கு திசையை நோக்கி கிளம்பியது.

அதை பொருட்படுத்தாமல் அதற்கு அஞ்சி ஓடாமல் அங்கு நின்றிருந்தவர்களே தப்பித்தார்கள் அந்த வதந்தியிலிருந்து...

நெய்தல் நிலத்தை புரட்டிப் போட்ட  சுனாமி (ஆழிப்பேரலை) தாக்கி  இன்றுடன் 20'ம் ஆண்டு ஆகிறது.

-

ஊர் நேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக