சனி, 16 பிப்ரவரி, 2008

'சமரசம் உலாவும் மயானத்தில்' இடஒதுக்கீடு?

Image source: MobileCam (poorQuality)
'சமரசம் உலாவும் இடமே' என்று சமத்துவத்திற்கு உதாரணமாக எல்லா காலத்திலும்-இனத்திலும் எடுத்துக் காட்டப்படுவது மயானங்கள் தான். எல்லோருக்குமே, யார் எவர் என்ற பாகுபாடின்றி ஆறடி மண்ணே அங்கு இருப்பிடமாகிறது.
நமதூர் பரங்கிப்பேட்டையின் மீராப்பள்ளி மயான பூமி சீரமைப்பிற்காக அண்ணா மறுமலர்சி திட்டத்தின்படி சுமார் 1.75 இலட்சம் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி. ஒரு பள்ளிவாசல் மயான சீரமைப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டது இதுவே முதலமுறை. (இதற்கு முன்னர் கோவில்கள், தேவாலயங்களுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது). நிதி ஒதுக்கியது மட்டுமல்லாமல் மளமளவென சீரமைப்பு வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது.


புதிய சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டு, மின் விளக்கு கம்பங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டு, சுற்று சுவர்களும் மேடு பள்ள சீரமைப்புகளும் முழுவேகத்தில் நடைபெறுகின்றன. இந்த வேகத்தில் நிழல் தந்த மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டது வருத்தத்திற்குரியது தான். ஆனால் மயான சீரமைப்புக்கு மரங்களையும் சாய்க்கப்பட்டேயாக வேண்டும் என்றிருக்கும் நிலையில் ஆட்சேபத்திற்கு வழியில்லை தான். அதே சமயம், ஆங்காங்கே சில 'குடும்ப' கோரிகள் என்ற பெயரில் மய்யித்துக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் - அதுவும் சிதைந்து போன நிலையில் காணப்படுகின்றது. அவற்றையும் நிரவி சமன் செய்தால் நன்றாக இருக்குமே என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

எத்தனை சலுகைகள்! மானியங்கள்!! உதவித்தொகைகள்!! ஆனால் பயனடையாத சிறுமான்மை சமூகம்! - கவிக்கோ வேதனை!!

Image source: MobileCam (poorQuality)
இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் சிதம்பரத்தில் நேற்று மாலை கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் பரங்கிப்பேட்டையிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சகோதரர்களும், ஐக்கிய ஜமாஅத் மற்றும் கல்விக்குழு சார்பிலும் பலர் கலந்துக் கொண்டனர். விழா துவக்க உரையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம். எஸ். முஹமது யூனுஸ் வாழ்த்துரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் கவிக்கோ அப்துல் ரகுமான், கேப்டன் அமீர் அலி மற்றும் எஸ். எம். இதயதுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றனார்கள். இட ஒதுக்கீடு பெற்றபின்னரும் அதை முழுமையாக அனுபவிக்காத குறைகளையும் மத்திய-மாநில அரசுகளின் சலுகைகள் உதவிகள் நிறைய இருந்தும், அதை பயன்படுத்திக் கொள்ளாத நிலையையும் சச்சார் குழு அறிக்கை விபரங்களையும் தனக்கே உரிய கவிதை நடையில் கவிக்கோ தெரிவித்தர்.
பள்ளிவாசல்கள் தோரும் மழலையர் பள்ளிகளை துவங்க முன்வருவோர்க்கு நிதி உதவிகள் அளிக்க தயாராக இருப்பதாக இதயதுல்லாஹ் கூறினார். மேலும் இஸ்லாமிய சமூகம் பயன்பெற வேண்டிய அரசின் பல்வேறு திட்டங்களையும் உதவிகளையும் அவற்றை பெற வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்.