சிறுபான்மை இனத்தவரின் நலனுக்காக பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச நலத்திட்ட விளக்க விழா நேற்று மாலை நான்கு மணியளவில் பரங்கிபேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.
முன்னதாக 3.30 மணியளவில் இதற்கான பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிட்டத்தட்ட மொத்த மாவட்ட அரசு நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதனை பயன்படுத்தி கொள்வது போல பல்வேறு முக்கியஸ்தர்களும் தங்களின் மாவட்ட நலன் சார்ந்த கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் முன் வைத்தனர்.
மாவட்ட கலெக்டர் P. சீத்தாராமன் மிக சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உரையாற்றியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. சிறுபான்மை இன மக்களுக்கு அரசு எவ்வாறெல்லாம் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்பதை உதாரணங்களுடன் (உம் : உலமா ஓய்வூதியம் -அதன் பயன்கள்) குறிப்பிட்டு பேசிய கலக்டர், மக்கள் அதைபற்றிய விழிப்புணர்வு அற்று இருப்பதை பற்றி மிகவும் வருந்தி பேசினார். இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாதினை பாராட்டிய அவர் இன்னும் சிறப்பாக மக்களுக்கு அரசின் திட்டங்களை பற்றி விளக்கி சொல்லும்படி ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுசினை கேட்டுக்கொண்டார்.
இந்த மாவட்டத்தின் முந்தைய கலக்ட்டர்கள் ஜமாஅத் நிர்வாகத்துடன் மிகவும் பரிவுடன் இருந்து வந்ததை அறிந்திருந்த மக்கள் புதிய கலக்டர் கலந்து கொள்ளும் இந்த முதல் விழாவில் அவரை பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்பார்கள். புதிய கலக்ட்டார் அவர்களை ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அரசும், ஜமாத்தும் இத்தனை முயற்சிகள் எடுத்தும் மக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள முன்வருவார்களா அல்லது வழக்கம் போல தூங்க செல்ல போகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.