திங்கள், 16 ஜூன், 2014

17 வயது முஸ்லிம் மாணவர் பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு

சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மேதாவி மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத் திகழ்கிறார். இவரைப் போன்று இளம் வயதில் பன்முகத்திறன் மிக்க அறிவாற்றல் நிறைந்த மாணவர்கள் உரிய அறிமுகம், அடையாளம், மதிப்பு கிடைக்காமல் உள்ளனர்.

மாணவர் பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு பயிலும்போது அவர் கல்விக் கட்டணம் இல்லாமல், உணவு, தங்குமிடம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட வசதிகளும் இலவசமாகப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். 

மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் பேசும்போது, கோயம்புத்தூர் கார்மல் கார்டன் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது மேஸ்நெட் நிறுவனத்தில் பகுதி நேர கம்ப்யூட்டர் படிப்பில் சேர்ந்து படித்தேன். 8வது படிக்கும்போதே 15 வகை கம்ப்யூட்டர் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்து விட்டேன். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விப் படிப்பு எம்.சி.ஏ. பயில விண்ணப்பித்தேன். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவினர் 20 பேர் கொண்ட குழுவினர் என் திறமையை நேர்காணலின் போது பரிசோதனை செய்து, என் திறமையின் அடிப்படையில் எம்.சி.ஏ. படிக்க அனுமதித்தனர். தற்போது எம்.சி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறி 78.5 மதிப்பெண் பெற்றுள்ளேன்.

தற்போது எனது உறவினர் தாத்தா ராயப்பேட்டை புதுக்கல்லூரி பேராசிரியர் காஜா முஹைதீன் வழிகாட்டுதலுடன் இங்கு எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள சேர்ந்துள்ளேன். எனக்கு இங்கு உயர்கல்வி பயில அளிக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுக்காகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இணையதள முடக்கம், சைபர் கிரைம் தொடர்பான கணினி தொழில்நுட்பத்துறையில் எனது ஆய்வுப் படிப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இவர் தன்னுடைய 14வது வயதிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார். 9ம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பல்கலைக்கழகம்  இவருக்காக வயது வரம்பை தளர்த்தியது குறிப்பிடதக்கது.

புதன், 11 ஜூன், 2014

கல்வி பரிசளிப்பு விழா - சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!


பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத். 

அந்த வகையில் இந்த ஆண்டும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த மாணவ-மாணவிகளையும் கவுரப்படுத்தவுள்ளது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்.

இதற்காக பரிசு வழங்கும் விழா வரும் சனிக்கிழமை (14/06/2014) காலை மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெறவுள்ளது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மீராப்பள்ளி நிர்வாகி கலிமா கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவினை, மீராப்பள்ளி இமாம் எம்.எஸ். அஹமது கபீர் காஷிபி இறை வசனம் ஓதி துவக்கி வைக்கின்றார்.

இந்த விழாவில் கடலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஏ. அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எம். சந்திரகாசி, சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு  தங்கம்-வெள்ளி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துரை வழங்கவுள்ளனர். 

அனைரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன்  எம்.  ஹமீது அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.