தமிழக அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் பரங்கிப்பேட்டை தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 01-06-2015 அன்று தனியார் பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட போராட்டம் நாளை(12-06-2015 வெள்ளி ) நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்திருந்த நிலையில், இன்று சாக்ரடீஸ் பள்ளியில், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பச்சையப்பன், மாவட்ட தொடக்க கல்வி திருஞானம், உதவி தொடக்க கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி, பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜி.ரமேஷ் பாபு தலைமையில் போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ” அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து ஆதாரத்துடன் தனி நபர் புகார் அளித்தால். அப்புகாரை ஏழு பேர் கொண்ட குழு ஆய்வு செய்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் பள்ளிகளால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பரங்கிப்பேட்டை பெற்றோர்கள் பலரும் அதிக கட்டணம் வசூலித்துள்ள தனியார் பள்ளிகள் குறித்து அச்சமின்றி புகார் கொடுக்க முன் வர வேண்டும்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை குறித்து MYPNO முன்பே செய்தி வெளியிட்டிருந்ததை நினைவு கூர்கிறோம்.
புகைப்படங்கள்: கிங் காலித்