ஞாயிறு, 31 ஜூலை, 2016

பரங்கிப்பேட்டைக்கும் சேலத்துக்கும் என்ன தொடர்பு?

சேலம் மாநகரிலிருந்து எட்டு கி.மீ. தென்மேற்கே உள்ள கஞ்ச மலைக்கு யார் அந்தப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே கஞ்சமலை, கஞ்ச-மலை அல்ல. சேலம் மாவட்டம் கனிவளத்திற்கு, அதாவது மாங்கனி வளத்திற்கு பெயர் பெற்றதென்றால், நம் சேலம் நகரம் கனிம வளத்திற்கு, அதாவது மேக்னடைட் மற்றும் மேக்னசைட் கனிம வளங்களுக்கு புகழ் பெற்றது. கஞ்சமலையில் மேக்னடைட் எனும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான இரும்புத்தாது 'ஹெமடைட்'. அது இங்கே அதிகம் இல்லை. இந்த மேக்னடைட் தாது Banded Magnetite Quartzite (நம் தமிழில், “பட்டை இரும்புக் கல்”) எனும் பாறையிலிருந்து கிடைக்கிறது..
 
கஞ்சமலையின் நீளம் சுமார் எட்டு கி.மீ., அகலம் சுமார் மூன்றரை கி.மீ., உயரம் அங்குள்ள தரைமட்டத்திலிருந்து சுமார் அறுநூறு மீ. இந்த மலை முழுவதுமே, பட்டை இரும்புக் கல்லால் ஆனது அல்ல. வேறு பலவிதமான பாறைகளும் கலந்தே இருக்கின்றன.
 
புவியியல் அமைப்புப்படி , கஞ்சமலை ஒரு குழிமுக மடிப்பு மலை, அதாவது பாறைகளின் பரப்பு எல்லா மலைகளையும் போல் வெளிப்புறம் சரிந்திருந்தாலும், பாறை அமைப்புகள் உட்புறமாக சரிந்துள்ளன, ஒரு தோணியைப் போல. (கூகுள் படத்தில் இரு முனைகளிலும் மடிப்பைப் பார்க்கலாம்). பட்டை இரும்புப் பாறை, மூன்று பெரும் கிடைகளாக மலையின் எல்லாப்பக்கத்திலும் காணப்படுகிறது (கூகுள் படத்தில் கரும் பச்சை நிறத்தில் உள்ளவை).
 
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் முதன்முதலில் பறங்கிப்பேட்டை எனும் இடத்தில்தான் இரும்பு உருக்காலை துவங்கப்பட்டது. பறங்கிப்பேட்டைக்கு போர்ட்டோ நோவோ எனும்  பெயரும் உண்டு. போர்த்துகீசிய  மொழியில் புதிய துறைமுகம் என்று பொருள். இசுலாமியர்கள் முகம்மது பந்தர் என்று அழைப்பார்கள். அங்கே JOSHUA MARSHALL HEATH எனும் வெள்ளையரின் பெரும் முயற்சியால் 1830ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின் 1877ஆம் ஆண்டு வரை POTONOVO IRON WORKS எனும் பெயரில் இரும்பு ஆலை நடத்தப்பட்டது. அந்த ஆலைக்கு வேண்டிய இரும்புத் தாது சேலத்திலிருந்துதான் கொண்டு செல்லப்பட்டது. மலையை சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாக தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில்  வசதி  இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை எப்படிக் கொண்டு  செல்வது.  
 
ஆச்சர்யப்படாதீர்கள். காவேரி - கொள்ளிடம் - வெள்ளாறு வழியே பரிசல்களில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி”யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது (கே.ஆர். சாகர், கபினி அணை, மேட்டூர் எதுவும் இல்லை அல்லவா). ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முன்னூறு கி.மீ. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, கஞ்சமலை இரும்புத் தாது.
 
சேலத்தில் தரத்தில் உயர்ந்த இரும்புத் தாது ஏராளமாக உள்ளது என அக்காலக் குறிப்புகளில் காணப்படுகிறது. பறங்கிப்பேட்டையில் தயாரான இரும்பு இங்கிலாந்தில் மிகவும் விரும்பி வாங்கப்பட்டதாம். இப்போதும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் “MADE IN PORTONOVO” என எழுதப்பட்ட இரும்புத்தூண்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். இதை விட முக்கியம் என்னவெனில், சேலம் இரும்புதாதுவிலிருந்து, பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR மற்றும் STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டது என்று S.B. JOSHI எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (Page 97) தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
 
Inline image 1
சரி, முடிவாக சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு  சுமார் 75 மில்லியன் டன்கள். மலையை சுற்றியு கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து  ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
 
சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல; உருட்டாலை. இங்கே எந்தக்  கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.
 
படம் 1: POTONOVO IRON WORKS இரும்பு ஆலை, பரங்கிப்பேட்டை
படம் 2: சேலம் - பரங்கிப்பேட்டை வழிப்பாதை
படம் 3: கஞ்சமலையின் செந்நிற தோற்றம் 
 
-சிங்க நெஞ்சன் - "மின்தமிழ்" கூகுள் குழுமம் - https://groups.google.com/forum/#!msg/MinTamil/M37WqdJ2pYs/Hfxu9tNsAQAJ

செவ்வாய், 26 ஜூலை, 2016

சாதனையாளர் விருது பெற்றார் எம்.எஸ். முஹம்மது யூனுஸ்!

சிறந்த மக்கள் சேவைக்காக பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் வழங்கினார்.
 
பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ். இவரின் சிறந்த மக்கள் சேவைக்காக அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை (21.07.2016) தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரெட்டி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ரோசய்யா, பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுசுக்கு, சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார். ஏற்கனவே, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது ஆகியவை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பரங்கிப்பேட்டையின் தற்போதைய பேரூராட்சி மன்றத்திற்கு 2-வது முறையாக தலைவராக இருக்கும் இவர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தில் 4 முறைகளாக தொடர்ந்து 12 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார். அது மட்டுமின்றி கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவராகவும், பரங்கிப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருக்கிறார். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கடலூர் மாவட்ட பெண்கள் நலச் சங்கத்தின் கௌரவ தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 ஜூன், 2016

வீரப்போர்!

பரங்கிப்பேட்டை வெள்ளாற்ற கரையிலும் ஊரை ஒட்டியும் வீர மகன் ஹைதரின் 18,000 வீரர்கள் சுற்றிலும் மணற்குன்றுகளை அமைத்து இரண்டு புறமும் துப்பாக்கி படையுடனும், நடுவில் குதிரை படையுடனும் முகாமிட்டு இருந்தனர்.
 
அன்று கிழக்கே உதித்த சூரியனும் கடலும் நடக்க போவதையெண்ணி சிவந்தும் அலையில்லாமலும் இருந்தன. பரங்கிப்பேட்டையின் ஆறும் கடலும் சேர்ந்த முகதுவாரத்தில் ஆங்கிலேயரின் 8,000 வீரர்கள் மற்றும் துருப்புக்களுடன் முகாமிட்டு இருந்தனர். கடலில் அவர்களுக்கு துனையாக போர்க்கப்பல் ஒன்றும் நின்று இருந்தது.
 
1 ஐூலை 1781 அன்று அதிகாலை 9 மணிக்கு ஹைதரின் துப்பாக்கி படையினர் முதல் துப்பாக்கி பிரயோகம் தொடங்கினர் உக்கிரமாக போர் தொடங்கியது.
 
ஹைதரின் படை கிர்ரம் சாயப் தலைமையில் போரிட்டது. கரையிலிருந்தும் கப்பலில்லிருந்தும் ஆங்கிலேயரின் பீரங்கி தாக்குதல் தொடங்கினர். நயவஞ்சக ஆங்கிலேயரின் பதுங்கு குழிகளில் இருந்து கொடுத்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹைதரின் குதிரை படை சிதறியது. ஒரே சமயத்தில் துப்பாக்கி படையும் பிரங்கி தாக்குதலில் கிர்ரம் சாயப் கொல்லப்பட்டார். குதிரை படை சிதறியதும் கலாட்படை மிக மோசமாக அடிவாங்கி பின் வாங்கி ஹைதரின் படை கர்நாடகம் சென்றது.
 
இந்த போரை Cuddalore Dc Bussy page no 155, The battle of Portonovo was one of the most critical that was ever bought in India என்று விவரிக்கிறது.
 
ஹைதர் படை பரங்கிப்பேட்டையில் வெற்றி பெற்று இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஹைதர் அலி தன் அண்ணனுடன் சதாரண சிப்பாயாக மைசூர் படையில் சேர்ந்து படிப்படியாக தன் வீரத்தால் குதிரை படை தளபதியாக பதவி உயர்வுப்பெற்று தேவனஹல்லி போரில் சிறப்பாக போரிட்டதுக்கு பரிசாக திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொருப்பை பெற்றார்.
 
இயல்பிலேயே பெரும் வீரனான ஹைதர் பிரெஞ்சு ஆங்கிலேயர்களை போல் பிரங்கிக்கு தனிப்படை நிறுவி பயிற்ச்சி அளித்தார். வெடிமருந்தை இரும்பு குழாயில் தினித்து அதை ஏவும் நுட்பத்தை அறிமுகப்படு்த்தினார். (missile இதை ஹைதரின் மகன் திப்புசுல்தான் மேலும் மேம்படுத்தி ஆங்கிலேயரை நடுங்க செய்தார் அதில் வெடிக்காததை கைப்பற்றி முயற்சித்ததுதான் தான் இன்றைய நவீன ராக்கெட்).
 
மைசூர் அரசு பலம்குன்றி தன் ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாத தருணத்தில் தலையிட்டு தன் பணத்தை வழங்கி மைசுர் அரசை அகற்றி தான் பொருப்பேற்று கொண்டார். அரசு பொருப்பேற்ற பிறகு ஏற்பட்ட முதலாம் மைசுர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்தார். பிரன்ச் அதிகாரிகளை கொண்டு பயிற்சி கொடுத்து ஆங்கிலேயருக்கு இனையாக ராணுவம் வைத்து இருந்தார். அப்போது அவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆங்கிலேயர்கள் அதை கடைபிடிக்காத காரணத்தால் இரண்டாவது மைசுர் தொடங்கி நான்கு வருடம் நடந்தது.
 
வெற்றி செய்திகள் கிடைத்து கொண்டு இருந்தபோதே நோயுற்று இருந்த ஹைதர் தனது 60 வது வயதில் டிசம்பர் 6ந்தேதி 1782 மைய்யத் ஆனார். அவர் இறந்தாலும் என்றும் மறவாத அவர் புகழ் பரங்கிப்பேட்டையர் நெஞ்சில் வாழும்நோம்பு மாதமாம் ரமலான் மாதத்தில் அவரது புகழை நினைவு கூறுவோம்.

கட்டுரை: தி.வேல்முருகன்
ஆதாரம்: விக்கி & Cuddalore Dc Bussy 
படம்:  போர்நி னைவு சின்னம் பின்னால் தெரிவது கொடி மரம் மற்றும் போர் நடந்த இடம்
 
ஊரின் சிறப்புகள் உங்கள் ஆதரவு இருந்தால் தொடரும்.....

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் புதிய கல்விக்கூட அடிக்கல் நாட்டு விழா

பரங்கிப்பேட்டை தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சார்பில், தில்லி ஸாஹிப் தர்கா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள முஸ்லிம் குழந்தைகள் மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி கற்பதற்கான மதரஸா மற்றும் பள்ளி கட்டிடம் ரூ 5.00 இலட்சம் செலவில் கட்டி தருவது என அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் அப்துர் ரஹ்மான் முடிவு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் கடந்து செவ்வாய்க்கிழமை (05.04.16) காலை 08.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், அறக்கட்டளை தலைவருமான டாக்டர் முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க, பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் சையத் ஆரிஃப், பொருளாளர் அஷ்ரஃப் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தில்லி ஸாஹிப் தர்கா குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.






அமீரக வாழ் பரங்கிப்பேட்டையர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் MYPNO ஆசிரியர் சிறப்புரை

கடந்த வெள்ளிக்கிழமை (01/04/2016) அன்று PMA UAE சார்பாக துபை முஷ்ரிஃப் பூங்காவில் நடைப்பெற்ற ஒன்றுகூடல்-Gathering நிகழ்ச்சியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெரும் திரளாக அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும்  குடும்பத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

சுமார் 120 நபர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு உணவு உபசரிப்பு நடைப்பெற்றது, பின்னர் ஆண்கள்,பெண்கள், குழந்தைகளுக்கென தனித்தனியாக போட்டிகள் நடந்தேறியது. பெண்களுக்கு மார்க்க வினா விடை மற்றும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக இரு போட்டிகள் நடைப்பெற்றது, குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக மூன்று விதமான போட்டிகள் நடைப்பெற்றது அதே போன்று ஆண்களுக்கும் மூன்று விதமான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது.

அஸர் தொழுகைக்கு பிறகு அமைப்பின் தலைவர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்களின் இளைய மகன் ஜனாப் ஃபஹீம் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார், பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, முதல் பரிசு பெற்ற ஆண்கள் மற்றும் சிறார்களுக்கு ஜனாப். நகுதா மரைக்காயர் அவர்களும் இரண்டாம் பரிசு பெற்ற ஆண்கள் மற்றும் சிறார்களுக்கு ஜனாப். ஹுசைனுல் ஆபிதீன் அவர்களும் பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற பெண் போட்டியாளர்களுக்கு பரிசுகளை பெண் பொறுப்பாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.
 
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MYPNO ஆசிரியர் ஜனாப். ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் (PIA Riyadh தலைவர்) கலந்துக்கொண்டு நாம் வந்திருக்கும் நோக்கம் என்ன? என்ற தலைப்பில் வெளிநாடு மற்றும் இவ்வுலக வாழ்க்கை குறித்து சிறப்புரை ஆற்றினார், அதனை தொடர்ந்து PMA – UAE சார்பாக அமீரக அளவில் நடைப்பெற்ற இறகு பந்து போட்டியில் கலந்துக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கும் பள்ளி அளவில் நடைப்பெற்ற போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசளித்து ஊக்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து அமீரக அமைப்பின் தலைவர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜனாப். ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவித்தார்.



பின்னர் நடைப்பெற்ற அமைப்பின் கூட்டத்தை தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் முஹம்மத் உவைஸ் அவர்கள் அமைப்பின் LOGOவை அறிமுகப்படுத்தி முன்னுரை வழங்கினார். அமைப்பின் LOGOவை வடிவமைத்த ஜனாப். அப்துல் பாசித் அவர்களுக்கு நிர்வாகிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நன்றி: PMA - UAE, ஐக்கிய அரபு அமீரகம்

வெள்ளி, 11 மார்ச், 2016

பரங்கிப்பேட்டேரியன் 2016

தனது ஊரின் ஹிஸ்டரியோட first line கூட தெரியாமல் '' நோவியண்டா''  என்று கெத்து காட்டும் சராசரி பரங்கிப்பேட்டைகாரர் பற்றிய casual update இது.

லேசா ஏத்திகட்டின பாயேடு கைலி.. SEIKO (JAPAN)  வாட்ச்,.. எகத்தாளமா ஒரு பார்வைன்னு ரவுஸா திரிஞ்ச நம்ம பழைய பரங்கியன், அதிரிபுதிரியாக மாறி வரும் கார்பொரேட் சூழலுக்கேற்ப இப்ப '' Technology Bro..!'' வாகி வரலாறு படைக்கிறான்.

என்னதான் உலகம் மாறினாலும், நம்மாளுகிட்ட மாறாத பண்புகள் ஏராளம் தாராளம்! Hash Tag போட்டு ஒன்னு ஒன்னா பார்ப்போமா ...

# சீனி சோறு, சானாக்கு சோறு வாங்கி, சீனி முடிச்சை நைஞ்சி போற அளவுக்கு சப்பி உறுஞ்சி தின்ற காலத்திலும் சரி, ''ரவாஹுல்  புஹாரி 1432ஆவது ஹதீஸை பாருங்க '' என்று எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்கும் இந்த காலத்திலும் சரி .. மார்க்க விஷயத்துல sprite தெளிவு நம்ம ஆளு! எத்தனை கும்பலா வந்து குழப்பியடிச்சாலும் லைக் / டிஸ்லைக் போடாமல் தனக்கான ஸ்டேடஸ் ஐ அப்டேட் பண்ணி தானொரு individual மார்க்க மேதை ன்னு காட்டுறதுல நம்மாளை அடிச்சிக்க தமிழகத்துல ஏன், உலகத்துலேயே ஆள் இல்லை. குறிப்பாக, நாங்கதான் சமுதாயத்துக்கு விடிவு, விமோசனம் என்று கொடிபிடித்து வருபவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வொண்டர்புல்லாக வைக்கும் இவனை பார்த்து மத்த ஊர்கள் தெறி-யா பாக்கறது இவனுக்கே தெரியாது.

16 வயசிலேயே அடர் தாடி, கெண்டைக்கால் தெரிய கைலி, முகம் நிறைய புன்னகை, வாய் நிறைய சலாம், மொபைலில் லேட்டஸ்ட் இஸ்லாமிய Appகள்  என்று ஒரு செம மார்க்கமாக போகிறது இன்றைய இளம் நோவியங்களின் டிரெண்ட்! அவர்களிடம் போய், இன்னும் விரலை ஆட்டுவது, தொப்பி போடுவது பற்றியெல்லாம் பற்றி பேசினீர்கள் என்றால்..... சாரி பாஸ் நீங்க ரொம்ப ஓல்ட்!! அவ்யிங்க அதுக்கும் மேல!!

# தாவதுக்கு நேரில் சொல்லாகட்டி அடுத்த ஜும்ஆ வரைக்கும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஆங்ரி பேர்டாக உலவும் நம்ம ஆள், யாராவது கஷ்டப்படுராயிங்கன்னு தெரிஞ்சா வேலை வெட்டிய விட்டுட்டு எப்டியாவது உதவி செஞ்சாத்தான் தூக்கம் வரும்ங்கற அளவுக்கு ரொம்ப ''இரக்கமுள்ள மனசுக்காரன்''. சுனாமியின் போது சுனாமியைவிட பாஸ்டாக செயல்பட்டு உதவி செய்து விட்டு ''சுனாமிக்கே சூப் கொடுத்தோமுல்ல... '' என்று ரணகளத்திலும் ரைமிங் போட்டுத்தாக்கியது முதல், தானே புயல், தற்போதைய மழை வெள்ளம் வரை - அரசாங்கமே சபாஷ் சொல்லும் அளவுக்கு - வஞ்சமில்லாமல் உழைப்பையும் பொருளையும் கொட்டுவது இவனது ஸ்பெசாலிட்டி. இதை இவன் இயல்புன்னே சொல்லலாம்..எல்லாத்தையும் செஞ்சிட்டு '' அல்லாஹ்வுக்காக..." என்று முனகிவிட்டு போட்டோவுக்கு கூட போஸ் கொடுக்காமல் அடுத்த வேலையை பார்க்க போயிடுவான் நம்ம ஆள்!!

# எத்தனை கலர் கலரா உணவு வகைகள் வந்தாலும், தால்ச்சா, பிரியாணி, பரோட்டா என்ற மூண்டு புள்ளிகளுக்கு நடுவில் பொசபொசவென்று பொறுமையா அமர்ந்து முறையாக கட்டுவதில் கிடைக்கும் ஆனந்தம் இவனுக்கு வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் எக்ஸ்ரா கொட்றா, / கோழி  என்று நண்பனிடம் கேட்டு வாங்கி, ஒன்றுக்கு மேல் ஒன்றாக குறைந்தது மூன்று சஹன்களை அடுக்கி தாவத்தில் சாப்பிட்டு எழுந்தால்தான் ஒரு '' மீ ஹாப்பி இஹலே !'' உணர்வு வரும் இவனுக்கு!! ஆனால் இதல்லாம் இவன் பக்க்கதுல பிரண்ட்ஸ் இருக்கும் போது மட்டும்தான் ... தனியா தாவதுக்கு வந்தால் வச்ச சோறுக்கு மறுசோறு வாங்கிடாது நாம் புள்ளை ! அப்பப்ப, சவுதி/ துபாய் ரூமில் சாப்பிடும் '' சுய சமையல் சாப்பாட்டை'' இதனுடன் கம்பேர் பண்ணி பெருமூச்சு விட்டு செண்டிமெண்டாகியும் விடுவார்.              

# கைலி  மாதிரி Comfort எதிலேயும் வராது என்பது நம்மாளின் தீர்மானமான..மான.. நம்பிக்கை. மலையாளி மாதிரி தொடை தெரிய மடிச்சி கட்டும் பழக்கம் ரீஜண்டாக ( தற்போது ) மாறியுள்ளது. மெல்லிசான மார்டின் சட்டை போய், பீட்டர் இங்க்லாந்து, நேவிகேட்டர், பேசிக்ஸ் என்று வரிசையாக இவனது டேஸ்ட் மாறிக்கொண்டே இருக்கும். அப்ரசண்டிகள் போடும் அன்ப்ராண்டட் கூட போட்டு திரிய நம்மால் ரெடி ..அதுவும் அழகா அம்சமா பொருந்தும்ங்கிறது ஒரு Manufacturing Miracle.

# பரங்கிபேட்டையை நீட்டு வாக்காக க்ராஸ் பண்ண (கலிமாநகர் - பெரியகடை) பேசிகிட்டே நடந்தா மொத்தமா 13 நிமிஷம் 25 செகண்ட் கூட ஆவாது. TVS - 50 ல போனாக்கா ஒன்னேகால் நிமிஷம் அதிகம். ''பாத்ரூம் போக எதுக்குடா SUV  காரு...? '' ன்னு வடிவேல் வாய்ஸ்ல கேட்கற மாதிரி நமாளுகிட்ட Splendor, முதலிய  Low End பைக்கே இருக்கிறது இல்லை. Apache, Pulsar, FZ, BEAST  என்று அதிவேக தேர்களை பைக்குன்ற பேருல அதிரி புதிரி வேகத்துல ஓட்டுவது நம்மாளின் அலாதி பொழுது போக்கு.. அதிலும், யமஹா வில் சைலன்சர் மப்ளரை கட்பண்ணிட்டு வேகமா ரைஸ் கொடுத்து அனைவரையும் அலறி எழ வைப்பதில் நம்மாளுகுக்கு ஒரு மீம்ஸ் போட்ட சுகம். " அதெல்லாம் தெரியாது அவன் கேக்குறதை வாங்கித்தாங்க ..தொல்லை தாங்க முடியல ..." என்று போனில்  உத்திரவிடும் உம்மாமார்கள் அவர்களை கொஞ்சம் வாட்ச் பண்றது பின் விளைவுகளை தவிர்க்கும்ன்னு '' நம்ம ஆளே அப்புறம் அட்வைஸ் பன்னுவாப்ள! 

# லேசா, மெண்ட்டல் சாடையில் இருக்கும் ஒருவனை முழுசா கிறுக்காக்கி அலைய விட்டு பார்ப்பதில் நம்மாளு ஒரு சோஷியல் க்ரூப்பாகவே செயல்பட்டார் முற்காலங்களில்..  70, 80 களில் '' அப்புச்சி'' '' இன்னைக்கி செவ்வாகிழமை'' என்று கூவி கூவி கதறடிச்ச கொடுமை இன்று இல்லை என்பது ஒரு ஆறுதல்.          
# ''ச்மிஷா'' ''அஷ்யிஸ்'' ''வஸ்ஷா'' என்று google ஐயே குழப்பி தேடிஎடுத்து தன பிள்ளைக்கு பெயர் சூட்டுவதில் வர வர நம்மால் கில்லாடியாகி வருகிறார். சுருக்கமாகவும் இருக்க வேண்டும் "ஸ், ஹ, ஷா, fa'' போன்ற எழுத்துக்களை கொண்டதாக இருக்கவேண்டும் என்று ரொம்ப பிரயத்தனப்பட்டு ஒரு பெயர் வைத்து விட்டு அர்த்தம் கேட்டால் சொல்ல ரெடியாக் இருக்கும் smaart  city  இவன்.!

# நம்மாளின் மிக சமீபத்திய பொழுதுபோக்கு வாட்ஸ் அப், டெலெக்ராம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 சுய கருத்துக்கள், 235 பார்வேர்ட் மெசேஜ்கள் என்று சகட்டு மேனிக்கு அடித்து விடாகட்டி அன்றைய பொழுது பொழுதாக இருக்காது. தான் பார்வேர்ட் பண்ணுவது, தானே பல க்ரூப்களில் 1148 முறை படித்த '' யுசுபுள்''  மெசேஜ் தானே என்றெல்லாம் அலட்டிகொள்ளாதாது நம்மாள் ஸ்பெஷாலிடி. கண்டிப்பா ஷேர் பண்ணுங்க என்பதை மெசேஜின் முன்னாலும் பின்னாலும் போட்டுவிடுவது அட்ராசிட்டி டச்.

அதே போல் ஊரில் ஒரு பிரச்சனை என்றால் பரபரப்பு ''to the power of ''n'' ஆகிவிடுவார். யார் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து '' - தால்ச்சாவையும்  இறைச்சி ஆனத்தையும்  mixingaa கலந்து அடிக்கும்'' ஒரு நாசூக்கான blend - மாதிரி ஒரு சாடையில் - அதோடு தனது கருத்தையும் சாமர்த்தியமாக இணைத்து பதிவிட்டுவிட்டு எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்று 25 மைக்ரோ நொடிகளுக்கு ஒருமுறை செக் செய்து கொள்ளும் சுவாரசியன் நம்ம ஆள்.  

# ஆசையா '' வாழைபழம் போட்டு பால்' குடிக்கலாம்னு கனவுல இருக்குற மாப்பிள்ளையை ''வாடா மச்சான் டீ குடிக்க..'' ன்னு முட்லூர் வரை கூட்டி செல்வான். போற வழியில சந்து பொந்துல்லாம் சுத்தி, கத்தி, ஹாரன் அடிச்சி, ஊளையிட்டு பயங்கர  அலப்பறை பண்ணுவாப்ல .. '' ஏன்..ஏன் இப்டி? ன்னு கொலைவெறியில பொதுஜனம் முறைச்சு பாக்குறதை 'நாட்டமை படத்துல சாரட்டு வண்டியில வர்ற சரத்குமார்-விஜயகுமாரை 'கும்புடறேங்க எசமான்' சொல்லி மக்கள் பாக்குற மாதிரியே ஒரு எப்பெக்ட் பீலிங் இவயிங்களே self ஆ கொடுத்துப்பாயிங்க...
இவங்க மைண்ட் வாயிஸ் "தெறிக்க விட்றோமுள்ள..."ன்னு சத்தமா ஓடும்.  பொதுஜனம் மைண்ட் வாயிஸ் .. '' செஞ்சுருவோமா?'' ன்னு பல்ல கடிச்சிகிட்டு ஓடும். கொஞ்சம் பதமா பாத்து செய்ங்க ட்யூட்ஸ்!!     

# நாலரை மணி கனகராஜ் பஸ்ஸை பிடித்து 10.30 க்குள் மண்ணடியை அடைந்து அங்கு வேலைகளை முடித்துக்கொண்டு மாலை நான்கு மணிக்கு கோயம்பேட்டில் எக்ஸ்பிரஸ் (எனும் பெரும்பொய்) எழுதப்பட்ட பேருந்தை பிடித்து பாண்டியில் 7.30 மணிக்குள் NT யை பிடித்து ஊரு வந்து சேர்வது இவனது பெரும் சாதனைகளில் ஒன்றாக இதுவரை தொடர்கிறது. காலேஜ் செல்லும் பசங்களுக்கு இப்பவும் அப்பாவும் 10 மணி துர்கா தான். ஞாயிறு இரவு.
  
# google  க்ரூப்ஸ் yahoo  க்ரூப்ஸ்க்குலாம்  முன்னமே க்ரூப் கான்சப்ட் க்கு start-up கொடுத்தது நம்மாள்தான். குறைந்தபட்சம் ஒரு விஷயம் ஒத்துபோனாலே க்ரூப்ல வாலண்டியரா sink ஆகிடுவான். அதே போல, குறைந்தபட்சம் ஒரு விஷயம் பிடிக்கலன்னா விளக்கமா லெட்டர் எழுதிவச்சிட்டு எஸ்கேப் ஆகறதுல பெஸ்ட் நம்மாளு.
அதே மாதிரி, நீங்க எந்த க்ரூப் / சார்பு என்று உங்க கிட்ட பேச்சு கொடுத்து கண்டுபிடிப்பதிலும் நம்மாளு டபுள் கில்லி. நீங்க அவன்கிட்ட பேச ஆரம்பிச்ச 15ஆவது செகண்டுலையே கரீட்டா சொல்லிடுவான் நீங்க எந்த கொள்கை கொத்தமல்லின்னு..!!நீங்க அவனை விட smartஆ  பேசி tough கொடுத்திங்கன்னா மெர்ஸலாகி போயி, ''இவன் நடுநிலையாளண்டா டோய் '' என்று எல்லாத்தையும் விட படு டேஞ்சரான க்ரூப் ஸ்லேட்டை உங்க கழுத்துல மாட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பான்.ஆக மொத்ததுல கருப்பு வெள்ளைன்னு ஆளுக்கு ஏதாவது ஒரு கலர் பெயிண்ட் அடிச்சி வகைபடுத்தி identity  crisis  நோய் தனக்கு வந்துடாமல் பத்திரமா பார்த்துப்பான் நம்ம ஆளு!! . 

# முன்னாடில்லாம் கல்யாணம் காட்சி போன்ற விசேஷங்களில் மட்டுமே ' அந்த புள்ள' கிட்ட, 'கண்கள் இரண்டால் ...' நடந்த பேச்சுவார்த்தை, 80 களில் துவங்கிய இருபாலர் பள்ளிகளின் அதிரிபுதிரி வெ(ற்)றிக்கு பிறகு ' அஹளுக்கு இஹ' என்று இனிஷியல்லாம் போட்டு கீ-செயின், TDK-90 கேசட் என்று கொடுப்பதில் தொடர்ந்து, செல்போன் வரவுக்கு பின் டெக்னாலஜி டச்சில் காலநேரமின்றி கடலையோ கடலை போடும் தொழில் ஓஹ்ஹோ என்று வளர்ந்து வருகிறது. நம்மாள் ஒருத்தனுக்கு Basic Ringtone கால் வந்து ''சொல்லுடா மச்சான்'' என்று அழுத்தி சொல்லி நம்மை விட்டு விலகி போய்  பேசினால் 82.5% அது ''டா'' இல்லை ''டீ'' தான்  என்பது கன்பர்ம் ஆகிவிடும். முடுக்குகள், காடு, குளக்கரை என்று பலமணிநேரம் தொடரும் இந்த ஜில்பான்ஸ் அட்ராசிட்டி இளம் நோவியன்களுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்ப்பதாக இல்லை பரோஸ். "என்னப்பா இதல்லாம்? '' என்று கேட்டு பாருங்கள். உடனே தெய்வதிருமகன் விக்ரம் மோடுக்கு போயிடுவாயிங்க. வெவரமானவயிங்க .... !

என்ன நடந்தாலும் தான் உண்டு தன செல்பீ உண்டுன்னு க்ளிக்கி அதை ''போட்டோஷாப்பி'' முகநூலையே மெர்சல் பண்ணுவது தனி கதை. இந்த விஷயத்துல ஒரு க்ரூப்பாவே செயல்படுராயிங்க !!! 

# இன்னும்  நிறைய விஷயம் இருக்கு. ஆனா சத்தியமா தெரியும் இத படிக்கறதுக்குள்ள நம்மாளுக்கு பாதி நாக்கு தள்ளி போயிடும்...~!~!

ஆக மொத்தம் நன்மையும் தீமையும் கலந்து செய்த கலவையா நம்மாளு. அடுத்து வர வருஷங்கள்ல பவர் பிளான்ட், சைமா சாயப்பட்டறை என்று பல வித சவால்களை எப்படி சமாளிக்க போறாங்கிறதுதான் அவனுக்கே பதில் தெரியாத கேள்வி.!!!

-அபூ பிரின்சஸ்

புகைப்படங்கள்: அனைவரும் பரங்கிப்பேட்டை மண்ணின் மைந்தர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கபட்டவை. அனைவருக்கும் MYPNOன் நன்றிகள்.

வியாழன், 14 ஜனவரி, 2016

கலிமா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சத்தமில்லாமல் ஒரு அறிவு புரட்சி நிகழ்ந்து வருகிறது நமதூர் கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில். மதிப்பெண்கள்தான் உண்மையான மதிப்பு எண்கள் என்ற மாயையில் சமுதாயம் சிக்கித் தவிக்க, கல்வி என்பது மதிப்பெண் வேட்டை மட்டுமல்ல; அறிவு தேடலே அதன் சாரம் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர் அதன் மாணவர்கள். 

விஷயம் ஒன்றுமில்லை... சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் கலிமா பள்ளிக்கூட மாணவர்கள் H. நூர்தீன் அஹமத், மற்றும் A. ஷாஹுல் ஹமீது ஆகிய இரண்டு அறிவு சுட்டிகள் முதலிடம் பிடித்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பும் வித்தியாசமானது. அந்த நிகழ்வு தந்த தாக்கத்தில் தனது மாணவர்களின் அறிவியல் தாகத்தினையும், ஆர்வத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் முகமாக பள்ளி நிர்வாகம் ஒரு அறிவியல் கண்காட்சி நடத்திக்காட்டிட முடிவெடுத்தது. சமீபத்தில் மறைந்த கலிமா பள்ளியின் நிறுவனர் பெரியவர் கலிமா K. ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்களின் நினைவாக அன்னாரது பெயரிலேயே பள்ளியின் ஒரு பகுதியில் "அறிவியல் கண்காட்சி அரங்கத்தினை" நிறுவியது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த அறிவியல் கண்காட்சியினை திட்டமிட்டு அறிவிப்பு செய்தது. ஆனால் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் அந்த நிகழ்வு கடந்த 09.01.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. 

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கலிமா பள்ளி மாணவர்களின் படைப்பு அங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் தங்களின் விருப்பம் போல படைப்புக்களையும், கண்டுபிடிப்புக்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். தங்களது படைப்புக்களை விளக்க வேண்டியபோது தெளிவாகவும், அழகாகவும் விளக்கினர். வழக்கம்போல் மாணவிகள் தங்களது அறிவியல் திறனை வெளிப்படுத்துவதில் மாணவர்களுக்கு சவாலாக விளங்கினர்.  

அங்கு நிலவிய சூழலே ஒரு அறிவுசூழலாக விளங்கியது. சூரிய ஒழி மூலம் மின்சாரம் பெறுவது, தொழிற்சாலைகளால் ஏற்படும் கெடுதி, நோய்கள் அதன் காரணங்கள், விளைவுகள் பற்றி .., சில சுவையான கணித விளையாட்டுக்கள், உலக அதிசயங்கள் பற்றி ஒரு மாணவன்... உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபா பற்றி.. என்று சுவையான அம்சங்களுடன் களை கட்டி இருந்தது கலிமா பள்ளியின் இந்த அறிவியல் கண்காட்சி. அதைவிட சிறப்பு மாணாக்கர்களிடம் தெறித்த ஆர்வம்... இதை நான் எக்ஸ்ப்ளைன் பண்ணவா? என்று முன்வந்து விளக்கியதை காணும்போது நமக்கும் அந்த படைப்பை பற்றி ஆர்வம் தொற்றுகிறது.

மாநில அளவில், மாவட்ட அளவில் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது கொஞ்சம் எளிமையான விஷயம்தான். பரங்கிபேட்டை போன்ற சிறிய ஊரில் அதுவும் இதுபோன்ற அறிவுசார் தளங்களில் பொதுபுத்திக்கு அத்தனை இல்லாத ஒரு ஊரில் இத்தனை சிறப்பாக ஒரு அறிவியல் கண்காட்சியை அதன் இயல்பான அழகுடன் நடத்தி காண்பித்தது புதிது மட்டுமல்ல கலிமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு சாதனைதான். இதுபோன்ற அறிவு தளங்களில் ஆர்வமாக இயங்கும் போக்கு இனிவரும் காலங்களில் அதிகப்பட இந்த அறிவியல் கண்காட்சி ஒரு துவக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்கிறது. 

MYPNOன் வாழ்த்துக்கள்!

செய்தி: அபூ பிரின்சஸ் / படம்: ஹம்துன் அஷ்ரஃப்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...