வியாழன், 14 ஜனவரி, 2016

கலிமா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சத்தமில்லாமல் ஒரு அறிவு புரட்சி நிகழ்ந்து வருகிறது நமதூர் கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில். மதிப்பெண்கள்தான் உண்மையான மதிப்பு எண்கள் என்ற மாயையில் சமுதாயம் சிக்கித் தவிக்க, கல்வி என்பது மதிப்பெண் வேட்டை மட்டுமல்ல; அறிவு தேடலே அதன் சாரம் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர் அதன் மாணவர்கள். 

விஷயம் ஒன்றுமில்லை... சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் கலிமா பள்ளிக்கூட மாணவர்கள் H. நூர்தீன் அஹமத், மற்றும் A. ஷாஹுல் ஹமீது ஆகிய இரண்டு அறிவு சுட்டிகள் முதலிடம் பிடித்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பும் வித்தியாசமானது. அந்த நிகழ்வு தந்த தாக்கத்தில் தனது மாணவர்களின் அறிவியல் தாகத்தினையும், ஆர்வத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் முகமாக பள்ளி நிர்வாகம் ஒரு அறிவியல் கண்காட்சி நடத்திக்காட்டிட முடிவெடுத்தது. சமீபத்தில் மறைந்த கலிமா பள்ளியின் நிறுவனர் பெரியவர் கலிமா K. ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்களின் நினைவாக அன்னாரது பெயரிலேயே பள்ளியின் ஒரு பகுதியில் "அறிவியல் கண்காட்சி அரங்கத்தினை" நிறுவியது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த அறிவியல் கண்காட்சியினை திட்டமிட்டு அறிவிப்பு செய்தது. ஆனால் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் அந்த நிகழ்வு கடந்த 09.01.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. 

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கலிமா பள்ளி மாணவர்களின் படைப்பு அங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் தங்களின் விருப்பம் போல படைப்புக்களையும், கண்டுபிடிப்புக்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். தங்களது படைப்புக்களை விளக்க வேண்டியபோது தெளிவாகவும், அழகாகவும் விளக்கினர். வழக்கம்போல் மாணவிகள் தங்களது அறிவியல் திறனை வெளிப்படுத்துவதில் மாணவர்களுக்கு சவாலாக விளங்கினர்.  

அங்கு நிலவிய சூழலே ஒரு அறிவுசூழலாக விளங்கியது. சூரிய ஒழி மூலம் மின்சாரம் பெறுவது, தொழிற்சாலைகளால் ஏற்படும் கெடுதி, நோய்கள் அதன் காரணங்கள், விளைவுகள் பற்றி .., சில சுவையான கணித விளையாட்டுக்கள், உலக அதிசயங்கள் பற்றி ஒரு மாணவன்... உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபா பற்றி.. என்று சுவையான அம்சங்களுடன் களை கட்டி இருந்தது கலிமா பள்ளியின் இந்த அறிவியல் கண்காட்சி. அதைவிட சிறப்பு மாணாக்கர்களிடம் தெறித்த ஆர்வம்... இதை நான் எக்ஸ்ப்ளைன் பண்ணவா? என்று முன்வந்து விளக்கியதை காணும்போது நமக்கும் அந்த படைப்பை பற்றி ஆர்வம் தொற்றுகிறது.

மாநில அளவில், மாவட்ட அளவில் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது கொஞ்சம் எளிமையான விஷயம்தான். பரங்கிபேட்டை போன்ற சிறிய ஊரில் அதுவும் இதுபோன்ற அறிவுசார் தளங்களில் பொதுபுத்திக்கு அத்தனை இல்லாத ஒரு ஊரில் இத்தனை சிறப்பாக ஒரு அறிவியல் கண்காட்சியை அதன் இயல்பான அழகுடன் நடத்தி காண்பித்தது புதிது மட்டுமல்ல கலிமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு சாதனைதான். இதுபோன்ற அறிவு தளங்களில் ஆர்வமாக இயங்கும் போக்கு இனிவரும் காலங்களில் அதிகப்பட இந்த அறிவியல் கண்காட்சி ஒரு துவக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்கிறது. 

MYPNOன் வாழ்த்துக்கள்!

செய்தி: அபூ பிரின்சஸ் / படம்: ஹம்துன் அஷ்ரஃப்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...