புதன், 21 பிப்ரவரி, 2024

இறை அழைப்பை ஏற்ற ஆளுமைகள்!

 


பரங்கிப்பேட்டையில் அண்மையில் மூன்று நபர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று இருக்கிறார்கள். அந்த மூவருமே இந்த சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

N.முஹம்மது ஷஃபி : 17-02-2024
கல்வியின் மேன்மை அறிந்த, கல்வித்துறையில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக, பேராசிரியராக, தலைமையாசிரியராக , ஆசிரியராக, ஆசிரியையாக தங்களின் பங்களிப்பினை நல்கிய குடும்பத்தில் இருந்து ஆசிரியராக பணியாற்றியவர் NMS சார் என்றழைக்கப்பட்ட வேதியியல் ஆசிரியர் N.முஹம்மது ஷஃபி அவர்கள். ஊர் பொதுமக்களால் ஷஃபி வாத்தியார் என்றழைக்கப்பட்டார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் பரங்கிப்பேட்டையில் தொடங்கப்படாத அக்காலத்தில், பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை கண்டிப்புடன் நல்வழிப்படுத்தினார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலர் இன்று வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல பொறுப்பான பதவியில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு வேதியியல் துறை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி, பின்னர் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

G.M.நெய்னா மரைக்காயர் : 20-02-2024
தலைமுறை இடைவெளி என்பது எப்போதும் இருக்கும் என்றாலும் இப்போதைய சமூக வலைத்தள காலகட்டத்தில் அது மிகவும் அதிகரித்து பெரியவர்களுக்கும் - இளைஞர்கள் / வாலிபர்கள் இடையே நீண்ட தூரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் அதை களையும் விதமாகவும், இளைய சக்திகள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்ற நன்நோக்கிலும் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (SSA) கால்பந்தாட்ட கழகத்தினை உருவாக்கி மாநிலம் தழுவிய பல்வேறு அணிகளை கொண்டு அவ்வப்போது போட்டிகளை நடத்தி பரங்கிப்பேட்டையின் அடையாளங்களாக கருதப்பட்டு வரும் வரிசையில் பூப்பந்தாட்டத்தை தொடர்ந்து, கால்பந்து விளையாட்டையும் இணைத்தது G.M.நெய்னா மரைக்காயர் அவர்கள்.
மீராப்பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான நெய்னா மரைக்காயர், நோன்பு காலங்களில் குறிப்பாக கியாமுல் லைல் எனப்படும் நள்ளிரவு தொழுகையில் மீராப்பள்ளி நுழைவாயிலில் நின்று தொழுகைக்கு வருவோரை அத்தர் மணம் பூசி வரவேற்பார்.
இவர் தனது இளமைக்காலத்தில் சாபுர் தைக்கால் என்று அழைக்கப்படும் காட்டாணை தர்காவில் உடற்பயிற்சிக்கு உரிய சாதனங்களை நிறுவி தனது சக வயது நண்பர்களை ஒருங்கிணைத்து உடற்பயிற்சி, குத்துச்சண்டை, கராத்தே போன்றவற்றை கற்றறிவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்பதை இன்று அவர் வயது பெரியவர்கள் உடன் பேசிக் கொண்டிருந்தபோது அப்போதைய நினைவலைகளை பகிர்ந்தனர்.

A.R.ஷேக் இப்ராஹிம் : 20-02-2024
பரங்கிப்பேட்டையில் தப்லீக் ஜமாஅத்தின் அமீராக அறியப்பட்ட A.R.ஷேக் இப்ராஹிம் அவர்கள் நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இளைஞர்களை - பெரியோர்களை தொழுகையின் பக்கம் அழைப்பவராகவே இருந்தார்.
மீராப்பள்ளி மதரஸா வளர்ச்சி, மீராப்பள்ளி நிர்வாகத்திற்குரிய ஆலோசனைகள் தொடர்பான பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியவர்
எப்போதும் பள்ளிவாசல் உடன் தொடர்பிலிருந்து வந்த இவர் மிக அண்மைக்காலம் வரை தனக்கு கடமையான ஒவ்வொரு நேரத்தொழுகையினையும் பள்ளிவாசலில் நிறைவேற்றுவதையே வழக்கமாக கொண்டு தொழுகையின் முக்கியத்துவத்தை வயது முதிர்ந்த இக்காலத்தில் தன் செயலால் சமகாலத்தில் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.
இறை அழைப்பினை ஏற்ற இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை தந்தருளட்டும்.
குடும்பத்தினருக்கு MYPNO தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

அண்ணா, காயிதே மில்லத், கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய பெயர்களை நீக்கி வெளியிடப்பட்ட பரங்கிப்பேட்டை வாக்காளர் பட்டியல்!

தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!! அரசியல், சமூக, சமுதாய, இயக்க நிர்வாகிகளே...!!!

கடந்த 2024, ஜனவரி மாதம், 22ந் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான கடலூர் மாவட்டத்தின் 9 சட்டசபை தொகுதிகளின் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்கி முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

சிதம்பரம் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது பரங்கிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி. இப்பேரூராட்சியில் 18 வார்டுகளில் 145 தெருக்கள் உள்ளதாக தமிழ்நாடு அரசின் பேரூராட்சிகளின் இயக்குநரகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது (https://www.townpanchayat.in/parangipettai). பரங்கிப்பேட்டை பேரூராட்சி தந்துள்ள தெருக்களின் பட்டியலில் 135 தெருக்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன.


இது ஒருபுறமிருக்க, இந்திய ஒன்றிய அரசின் தேர்தல் துறை வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பேரூராட்சி மன்ற பட்டியலில்  இல்லாத வார்டு 7ல் செய்யது முகம்மது சாயபு சந்து மற்றும் இரட்டை கிணற்று தெரு, வார்டு 9ல் மிஷின் தெரு மற்றும் துப்புரவு பணியாளர் தெரு, வார்டு 15ல் திரௌபதியம்மன் கோவில் தெரு மற்றும் இருளர் தெரு ஆகிய ஆறு புதிய தெருக்களின் பெயர்களையும் இணைத்து மொத்தம் 105 தெருக்களின் பெயர்கள் உள்ளன  (https://www.elections.tn.gov.in/SSR2024_MR_22012024/ac158.html). அதாவது 37 தெருக்களின் பெயர்கள் இல்லை. இந்தத் தெருக்களின் வாக்காளர்களை பிரித்து, சிதைத்து, வேறுபடுத்தி பல்வேறு தெருக்களிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

பரங்கிப்பேட்டை பேரூராட்சி பட்டியலில் இடம்பெற்ற வார்டு 1ல் இப்ராஹீம் நகர் மற்றும் கிரசன்ட் நகர், வார்டு 2ல் மேட்டுப் பட்டாணித் தெரு, காயிதே மில்லத் நகர்  மற்றும் பாத்திமா நகர், வார்டு 3ல் அன்னங்கோவில் கடைகள், அனுசுயா நகர் மற்றும் ஏபிஎஸ் கார்டன், வார்டு 4ல் கருணாநிதி சாலை, வார்டு 5ல்  டில்லி சாஹிப் தர்கா தெரு மற்றும் ஆத்தங்கரை கீழ தெரு, வார்டு 6ல் அரகாட்சி நாச்சியார் தெரு, வார்டு 8ல் அண்ணா நகர் மற்றும் இத்ரீஸ் நகர், வார்டு 9ல் ஸ்டாலின் நகர், வண்ணாரப்பாளையம் அப்பாசாமி படையாச்சி தெரு மற்றும் வண்ணாரப் பாளையம் அரிசன காலனி, வார்டு 10ல் மதீனா நகர், காமாட்சி அம்மன் கோயில் தெரு - ஆசிரியர் நகர் மற்றும் உக்காஷ் நகர், 

வார்டு 11ல் பெரியக்கடைத் தெரு, லோகையா நாயுடு தெரு, மிட்டாய்க் கடைத் தெரு, வீரப்பா ஆசாரி சந்து மற்றும் ஆத்தங்கரை தெரு, வார்டு 12ல் ஏகாம்பர ஆசாரி தெரு மற்றும் சஞ்சீவிராயர் கோவில் தெரு, வார்டு 13ல் கொத்தர் சந்து, வார்டு 14ல் வாணுவர் சந்து, வார்டு 15ல் சுண்ணாம்புக்காரத் தெரு மற்றும் பணியாளர் குடியிருப்பு, வார்டு 16ல் அகரம் கடைத் தெரு, அகரம் தேரோடும் தெற்குத் தெரு, சக்தி நகர், அகரம் பு.மாணம்பாடி கடைத் தெரு மற்றும் அகரம் மெயின் ரோடு, வார்டு 18ல் சிவமுத்து நகர் ஆகிய 37 தெருக்கள் தற்போதைய வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.

தற்போதைய திராவிட அரசின் முன்னோடிகளான அண்ணா, காயிதே மில்லத், கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய பெயர்கள் உள்ள தெருக்களும், நகர்களும், பாரம்பரிய மிக்க பரங்கிப்பேட்டை வரலாற்றை எடுத்துச் சொல்லும் ஆத்தங்கரை, அன்னங்கோவில், பெரியக்கடை, மிட்டாய்க் கடை, பட்டாணி, சஞ்சீவிராயர், காமாட்சி அம்மன், டில்லி சாஹிப், அரகாட்சி நாச்சியார், உக்காஷ், படையாச்சி, நாயுடு, ஆசாரி, கொத்தர், வாணுவர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் பெயர்களும் இவற்றில் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பலமுறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி, சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுக்கா அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியரகம் முதல் சென்னை மற்றும் புதுடில்லி தேர்தல் ஆணையம் வரை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைபேசி வாயிலாக விசாரிப்பார்கள், அவ்வளவுதான் அதற்குப் பிறகு அது குறித்த எந்த தகவலும் இருக்காது.

இந்தக் குறைபாடுகளை போக்கி, நீக்கப்பட்டுள்ள தெருக்களை இணைக்க நடவடிக்கை எடுப்பது யார்? பேரூராட்சி மன்றமா? வார்டு உறுப்பினர்களா? வட்டாட்சியர் அலுவலகமா? மாவட்ட ஆட்சியரகமா? தேர்தல் ஆணையமா? அல்லது....

தொகுப்பு : கலீல் பாகவீ

திங்கள், 12 பிப்ரவரி, 2024

பரங்கிப்பேட்டையை தனி தாலுக்காவாக அமைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்படும் - சிதம்பரம் சார் ஆட்சியர் & மாவட்ட வருவாய் அதிகாரி தகவல் - MYPNOன் தொடர் முயற்சிக்கு வெற்றி!


கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

கடலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதி. ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்வளவு வசதிகள் இருந்தும் தாலுக்காவாக இல்லாததால் எல்லாவற்றுக்கும் 13 கிமீ தொலைவில் உள்ள புவனகிரியை நாடி இருக்க வேண்டியுள்ளது. தாலுக்கா அமைந்தால் இங்கு தொழில் வளர்ச்சியும் பெருகும்.

இங்குள்ள விவசாய, மீனவ மக்களின் நலன் கருதி பரங்கிப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய்த்துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே கிளிக்கில் மின்னஞ்சல் அனுப்பும் வசதியை MYPNO சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் அதன் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பினர்.

அத்துடன் MYPNO ஆசிரியரும், பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளருமான கலீல் பாகவீ, பொது மக்களின் குறைபாடுகளை களைவதற்காக ஒன்றிய அரசு அமைத்துள்ள 'மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு (Centralized Public Grievance Redressal and Monitoring System - CPGRAMS) அமைப்புக்கும் கோரிக்கையை அனுப்பி வைத்தார். 

அதற்கு, "புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் பரப்பளவு, மக்கள் தொகை அடிப்படையில் அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களும், மாவட்ட வருவாய் அதிகாரி அவர்களும் அறிவித்து உள்ளனர்.

இதற்காக பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், பரங்கிப்பேட்டையை தனி தாலுக்காவாக அமைப்பதற்கு MYPNO தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...