கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை
சார்பில் பரங்கிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா, மாவட்ட சிறுபான்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை கடந்த 12.03.2024 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சார் ஆட்சியர் ராஷ்மி ராணி, தாசில்தார் தனபதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ், கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து.பெருமாள், கடலூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சங்கர், செயல் அலுவலர் திருமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செழியன், ஆனந்தன், ஜாபர் ஷரீப், மாரியப்பன், உட்பட பலர் பங்கேற்றனர். சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர் ராமசாமி நன்றி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (13.01.2023) சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, "பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு பதிவு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். எனவே, இந்த கட்டிடத்தையும் புதிதாக கட்டித் தரப்படுமா?" என்று சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துணைக் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, "புதிய கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இந்நிலையில் இந்த அரசு நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ச.வ