ஞாயிறு, 9 மார்ச், 2025

அஹமதுவின் நோன்பு பெருநாள்-3.0

எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான்.

நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் செஞ்சிட்டு, கொஞ்சம் தூங்கிட்டு கெளம்புனோம் வூட்லே யாரும் வரல. வண்டி ஓட்டுறது நம்ப மாமா தான் இரண்டு பேரு தான் போறோம் நீ வரியா அஹமது என்று முஹம்மது கேட்டான்.

வூட்லே கேட்டு சொறேன் அவ்ளோ தூரம் அனுப்புவாஹளன்னு தெர்ல.

அதான் 12வது பரிட்சை முடிஞ்சிடுச்சே,  இப்பதான் உஸ்கூலும் இல்லையே சொல்லிட்டு வாயேன்.

முஹம்மது அவனின் நண்பன் அஹமது வீட்டில் உத்தரவு கேட்டு ஒருவழியாக முஹம்மதுவுடன் அனுப்ப  அஹமதுவுக்கு சம்மதம் கிடைத்தது.

ரமலானின் இறுதியில் பெருநாள் லீவுக்காக வரும் முஹம்மதின் வாப்பாவை எறக்க (வரவேற்க) இருவரும் முஹம்மதுவின் மாமாவுடன் சென்னை நோக்கி புறப்பட்டனர். இன்று பிறை தெரிந்தால் நாளை பெருநாளாகி போகும் என்கிற நிலையில் அவர்களின் பயணம் சென்னை விமான நிலையத்தை நோக்கி இருந்தது.

மாமா இன்னைக்கு பொறை தெரியுமா? நாளேக்கி பெருநாள் வருமா? என முஹம்மது தனது மாமாவிடம் கேட்டான்.

பொறை 29 தானே ஆவிக்கிது சிலப்ப 30 நோன்பு கூட வரலாம் என்ற மாமா, நாமெல்லாம் 30 நோன்பு வந்தாலும் ஜாலியா புடிப்போம் என்றார்.

இப்படியே பேசிக்கொண்டே பயணிக்கும்  போது முஹம்மது,அஹமது இருவரும் தூங்கியே விட்டனர். நோன்பு என்பதால் திண்டிவனம் டீ குடிக்க என எங்கேயும் வண்டியை நிறுத்தாமல் இயற்கை தேவைகளை நிறைவேற்ற மட்டும் நிறுத்தி விட்டு சரியான நேரத்தில் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

முஹம்மதுவின் வாப்பா வரும் விமானம் குறித்த நேரத்தில் தரை இறங்கி , அவர் வெளியே வந்ததும், பரஸ்பர ஸலாம் முகமன் கொடுத்து முடிந்த பிறகு பெட்டிகள் ஏற வண்டி புறப்பட தயாரனது. 

என்ன அஹமது நல்லா இருக்கீங்களா ?

சின்ன வயசுலே பா(ர்)த்தது அதுக்குள்ள வள(ர்)ந்துட்டீங்க.

முஹம்மதுல்லாம் ஒலுங்க படிக்கிறானா?.

 நல்லாக்கீறேன் மாமா, அவன் நல்லா தான் படிக்கிறான்.

என்னாச்சி முஹம்மது? முந்தா நாள் நடு ராத்திரிலே ஒனக்கு காச்சே(காய்ச்சல்) வந்துட்டதா  உங்க உம்மா சொன்னா, 

ஆமாம் வாப்பா சரியாயிடிச்சி நல்லவேளை போர்டோனோவோ ஹெல்த் கேர் செண்டர் அந்த நடு ராத்திரிலே இருந்ததாலே ரொம்ப ஒதவியா இருந்திச்சி..

அப்படியா? அல்ஹம்துலில்லாஹ்.

ஊருக்குள் இக்கிற  அனைத்து மக்களும் அதை பயன்படுத்திக் கொள்ளனும்.

இன்னும் நோம்பு தொறக்க எவ்ளோ நேரம் இக்கீது? நா நோம்பில்ல. அல்லாஹ் அளித்த பயண சலுகையை பெற்றுக்கொண்டு நோம்பு புடிக்கல.

மணி நாலே முக்கா ஆவது இன்னும் ஒன்னரை மணி நேரம் இக்கீது திண்டிவனத்தில் நோம்பு தொறக்க நேரம் சரியா இக்கும் என நெனைக்கிறேன் என்றார் வண்டி ஓட்டும் முஹம்மதுவின் மாமா, நீங்க டீ, க்கீ குடிக்கிறீங்கிறளா மச்சான்?

இல்லை வேணாம் நோம்பு தொறக்கும் போது குடிப்போம் என்றதும் வண்டியின் வேகம் சிறிது கூடியது.

துபாய்லே இக்கும் என் கூட்டாளிஹோ ரெண்டு பேர் அதிராம்பட்டினம், காயல்பட்டினம்  ஊர்க்காரவங்க இருக்காங்க, அவங்க ஊர் வந்திருக்காங்க அவங்க ஊருக்கு போயிட்டு வரனும், வர சொல்லி இருக்காங்க எப்படி போறது?

இப்பல்லாம் கவலையே இல்ல மச்சான், நம் ஊரின் ‘பயணியர் நலச்சங்கம்- PNO-PNS’ நம் ஊர் மக்கள் பயனடைய பத்துக்கு மேற்பட்ட ஆம்னி பஸ்களை ஊருக்குள் வர வச்சிருக்கு அதில் தூத்துக்குடி போனால் நீங்க சொன்ன ஊருக்கு ஈஸியா போகலாம்.

அப்படியா நல்லதா போச்சு,பாராட்ட வேண்டிய விசயம்!

பயணத்தினிடையே நேரத்தை எதிர்பார்த்து நோம்பு திறப்பதும் ஒரு அழகான அனுபவம் கலந்த ஆனந்தம் தான் அதனிடையே நமக்கு பிடித்தவர்களுடன் ஏற்படும் உரையாடல்களும் பேரானந்தம்.

அந்த உரையாடல்கள்  இன்னும் பழைய காலத்து நினைவுகளையும் ஏற்படுத்தினால் சொல்லவா வேண்டும்?

உங்க காலத்து நோம்பு எப்படி இந்துச்சி? என்று அஹமது கேட்டான் முஹம்மதுவின் மாமாவிடம்.

எனக்கு நினைவு தெரிஞ்சி எங்க காலத்து நோம்பு செப்டம்பர்,அக்டோபர் என்றும், சிலசமயம் ஜுன், ஜுலை ஆகஸ்ட் என்று வந்திச்சி, அந்த நேரத்தில் சில நேரம் மழை, சில நேரம் குளுரு, வேர்வை என்று மாறி, மாறி இருக்கும் இது எல்லோருக்கு தெரிந்ததுதானே? நமக்கெல்லாம் தெரியாத அந்த கால நோம்பை மச்சான் நீங்க சொல்லுங்க என்றதும், 90கிட்ஸ்சும் 2k கிட்ஸ்களும் ஆர்வத்துடன் காது கொடுத்து கேட்காலாயினர்.

33 வருசத்துக்கு  பொறவு ரமலான் நோம்பு இதே  மார்ச் மாசத்துலே தான் வந்துச்சி அப்ப நான் ஊர்லே தான் இ(ரு)ந்தேன் இன்'ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வருடங்களில் குளிரில் தான் ரமலானை  அடைவோம். 

முப்பது வருசங்களுக்கு முன்னாடி இப்ப இக்கீர கடிகாரம் ஸ்மார்ட் வாட்ச் போன்று எதுவுமே இருந்ததில்லை.

நடுத்தர வர்க்கத்து வூட்லே பெண்டுலம் வைச்ச கடிகாரம் சுவத்துலே தொங்கிக் கொண்டிருக்கும் இன்னும் கொஞ்சம் வசதி இக்கிரஹ  வூட்லே அதே மாதிரி (தொழில்நுட்பத்தில் அமைந்த) நிக்கிற (ஸ்டாண்ட்-அப்) கடிகாரம் நேரத்தை காமிச்சிட்டு இக்கும். பொறவு தான் குவார்ட்ஸ் வாட்சுகள் வந்திச்சி. 


பெண்டுலம் கடிகாரத்தை 2 நாளைக்கு அல்லது மூனு நாளைக்கு ஒருதரம் சாவி கொடுப்பார்கள். இல்லைன்னா அதில் ஆடிக்கொண்டிருக்கும் ஊசலின் உயிர் ஊசலாட ஆரம்பிச்சிரும்.

ஒவ்வொரு மணிக்கும் அந்த மணியை குறிக்கும் மாதிரி எண்ணிக்கையில் அடிக்கும் (Chimes) மணி கேட்கவே அவ்வளவு அலஹாஹவும், ஆனந்தமாவும் இக்கும்.

அன்றைய அந்திகளில் விளக்கு வெளிச்சங்களின் எந்த ஆராவரமும் இல்லாமல்,எழுப்பி விட எந்த இயந்திர உதவியும் (கடிகார அலாரம், மொபைல் அலாரம் என எதுவும்) இல்லாமல் அன்றைய ரமலான் நோன்பை எப்படி வைத்தார்கள் என்பது ஆச்சிரியம் தான் என்று முஹம்மதின் வாப்பா கூற டைம் டிராவலில் அந்த காலத்திற்கு சென்று வந்ததுப்போல் சிறுவர்கள் இருவரும் சிறிது நேரம் கற்பனையில் திளைத்துக் கொண்டு பின்பு வெளியே வந்தனர்.

நோம்பு பிடிக்கும் மக்களை எழுப்பி விட ‘சஹர் பாவா' வும், சஹர் நேர ஒலிப்பரப்புகளும் இந்துச்சி அப்ப.. 


மக்தூம் அப்பா பள்ளியிலும்,

ஹக்கா சாஹிப் தர்கா(ஊரின் முதல் சஹர் நேர ஒலிப்பரப்பு) தெருவிலும், வாத்தியாப்பள்ளி தெருவிலும்,காஜியார் தெருவிலும், ஹவுஸ் பள்ளியிலும்,

என்று ரொம்ப குறைஞ்ச அளவு சஹர் நேர ஒலிப்பரப்புகள் தான் இந்துச்சி,. பின்பு தான் தெருவுக்கு தெரு என்பது போல் ஆங்காங்கு அப்புறமா முளைச்சிடுச்சி..


நள்ளிரவு 1-2 மணியிலுருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரம் சொல்லுவார்கள். சஹர் முடியும் அரைமணி நேரத்துக்கு முன்பு மட்டும் அஞ்சி நிமிசத்துக்கு ஒருமுறை சொல்லுவார்கள். சஹர் நேர ஒலிபரப்பு என்றால் என்ன? என்று கற்பனையிலும்  எண்ணிப் பார்க்காத அளவுக்கு ஆச்சிரியமாக கேட்டனர்.

அன்றைய  சஹர் நேர ஒலிப்பரப்பு மக்களை எழுப்பி விட நன்மைகள் செய்தாலும், அதை எண்ணிப் பார்க்கும் போது எவ்வளவு பெரிய ஒலி (Noisense) மாசுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இப்பொழுது தான் உணர்கிறோம்.

சஹர் நேர ஒலிப்பரப்பு செய்வது அவங்களின் சொந்த காசிலா செய்வார்கள்? என அஹமது கேட்டான்.

இல்ல. நோம்பு நாள் வருவதற்கு முன்பு ரேடியோ செட் கடையில், ஒலிப்பரப்புக்கு தேவையான குழாய், மைக், டேப் ரிகார்டர் என்று சொல்லி வச்சிடுவார்கள். அப்பொழுது கல்யாண சீசன் இல்லை என்பதால் ஈசியாக கிடைக்கும்.

அதன் வாடகைப் பணத்தை ஒலிப்பரப்பு செய்யும் இடத்தை சுற்றியுள்ள தெருவாசிகளிடம் வசூல் செய்துக் கொள்வார்கள்.

பின்னிரவில் சஹர் ஒலிபரப்பும், பிற்பகலில் விளம்பர ஒலிப்பரப்பும் (சிலர் மட்டும்) செய்வார்கள்.

நம்மூர்-சிதம்பரம், புவனகிரி ஊர்களின் கடை விளம்பரம் அதில் வரும்.

நோம்பு ஏப்ரல் மே என்று வெயில் நாளில் வரும் போது லாரி(ராலி) தோட்டத்தில் உள்ள மா'மரத் தோட்டத்தில் மாழ்பழம் வாங்கி வந்து சஹருக்கு தேங்காய் பாலுடன் சாப்புடுவோம். கூடவே பலாச்சுழையும். ஆனாலும் நோம்பு என்றால் சஹருக்கு ரெண்டாம் ஆனமும், தேங்காப்பால், தயிரு கண்டிப்பாக இருக்கும்

நோம்பு தொறக்க உம்மா செஞ்சிக் கொடுக்கும் நொங்கு- பால் சர்பத் தான் எங்களுக்கு அன்றைய பாலுதா.

நன்னாரி சர்பத்தில் சப்ஜா விதை,பாதம் பிசினி மட்டுமில்லாமல் சிங்கப்பூரில் இருந்து வரும் 'உம்மசலமா' கொட்டையையும் ஊற வைச்சி போட்டு தருவார்கள் அதுவும் வித்தியாசமாக இக்கும். 


வெளிநாடு வந்த பொறவு அங்கத்தி நோம்பு வேறு மாதிரி இக்கும், ஊர் செய்திகளை தெரிஞ்சிக்க  ரெண்டு நாள் கழிச்சி வரும் பேப்பரில் தெரிஞ்சுக்குவோம். அதன் பொறவு நடந்த காலமாற்றத்தில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு MYPNO வலைத்தளங்களையும், MYPNO Blog’யைம் பார்த்து ஊர் தகவல்களை தெரிஞ்சிக்குவோம்.

இப்படியே உரையாடல்கள் நடந்துக்கொண்டிருக்க நோன்பு திறக்கும் நேரமும், திண்டிவனமும் ஒருசேர வர, ஒரு பள்ளியில் நிறுத்தி நோன்பு திறந்து,தொழுது விட்டு தேநீர் அருந்தி விட்டு பயணத்துடன் உரையாடலும் தொடர்ந்தது.

முஹம்மதுவின் வாப்பா தொடர்ந்தார் 'என்ன அஹமது அடுத்து எங்க படிக்க போறீங்க'?

பக்கத்துலே இருக்குற காலேஜ்லே தான் சேரப்போறேன் மாமா, படிச்சிக்கிட்டே ஊர்லே சாயங்காலத்துக்கு மேலே (பார்ட் டைம்) வேல செய்யலாம்னு இக்கிறேன் மாமா?

இப்படியே ஒரு டிகிரியை முடிச்சிட்டா ஊர்லேயே அரசாங்க வேலையில் டிரை பண்ணலாம் அதுக்கு தான் ஊர்லே புதுசா LEAP அகாடமி ன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க.

நம்மை போல வசதியும், வாய்ப்பும் இல்லாதவங்க அதை பயன்படுத்திக்கனும் என்று நிறைய பேர் சொல்றாங்க மாமா.

முஹம்மதுவை சென்னையில் உள்ள  ஒரு தனியார் கல்லூரியில் சேர்க்க திட்டமிட்ட அவனின் வாப்பாவுக்கு அடுத்த வருடம் வெளிநாட்டு வேலையை கட்டாயம் முடித்து விட்டு, ஊருக்கு வர வேண்டும்  என்ற இக்கட்டான சூழ்நிலையில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணம் பற்றிய பொருளாதர நெருக்கடி பற்றிய சிந்தனையும் இருந்தவருக்கு  பொடியனான அஹமதுவின் யோசனை அவருக்கு தெளிவை ஏற்படுத்தியது.

'ஊர்லே பொறை தெரிஞ்சிடுச்சாம் மச்சான், நாளைக்கு பெருநாளாம் MYPNO Voice வாட்ஸ் அப் குரூப்லே செய்தி வந்துடுச்சி.. என்று முஹம்மதுவின் மாமா கூறவும்,

ஆம் பிறை தெரிந்தது! ஷவ்வாலின் புதிய பிறை அன்று முஹம்மதுவின் படிப்பு சம்பந்தமான அவர் மனதில் இருந்த பாரம் தீர்ந்தது, குழப்பமும் தெளிந்தது. 

-

ஊர் நேசன்

திங்கள், 24 பிப்ரவரி, 2025

என்னதான் வேணும்?எண்ணெ(ய்) தான் வேணும்!

இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ் பண்றிங்களா?

அதுலே கொழுப்பு இருக்கு அதனாலே இதய நோய் பிரச்சினையெல்லாம் வருதாம் சன் பிளவர் எண்ணெய் யூஸ் பண்ணுங்க அதுலே தான் கொழுப்பு இல்லை' என்று 90-களின் ஆரம்பத்தில் இப்படி ஒரு கற்பிதம் விதைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

1960 -ம் காலகட்டத்தில் தான் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ..

1991-ல் தொடங்கிய தாராளமயமாக்கலுக்கு  பின்னரே நாட்டில் உணவு, உடை மற்றும் கலாச்சார, பாவனைகள் என்று பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன. 

சூரியகாந்தி எண்ணையை ரஷ்யா, உக்ரைன், துருக்கியில் இருந்தும், சோயா எண்ணெயை அர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், மேலும் பாமாயிலைஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

அசர் மல்லி - நறுமணங்களின் முகவரி

 நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை அல்லது இரவுக்குள் மடிந்து விடும், வதங்கி விடும். 

ஆனால் பொழுது சாயும் நேரத்தில் பூக்கும் பூ ஒன்று உள்ளது தெரியுமா?

ஊரே உறங்கும் நேரத்தில் இரவு வாட்ச் மேனாக,ஆந்தை விழித்திருப்பது போல், அந்தி சாய்ந்து அனைத்தும் மலர் வகைகளும் உறங்கும் நேரத்தில் அடர்த்தியான ரோஸ் ,வெள்ளை மற்றும் மஞ்சள் என்று அழகிய மூன்று வித வண்ணங்களிலும், அந்த மூன்று வித வண்ணங்களும் கலந்து ஒட்டுச் சாதி போன்று ஒன்றும் என நான்கு விதங்களில் பூக்கும்.

இரவெல்லாம் கொட்ட, கொட்ட விழித்திருந்து காலையில் உறங்கி போகும்.

தமிழில் அந்திமல்லி அல்லது அந்திமந்தாரை என்று அழைப்பார்கள். மலையாளத்தில் 'அசர் முல்ல' (முல்லை தான் அது அந்த மொழியில் 'லை' என்ற பதத்தை அழுத்தி  சொல்ல மாட்டார்கள்) நம்ம ஊரில் அசருக்கு பிறகு பூப்பதால் அசர் மல்லி என்று அழைக்கிறார்கள்?! என்று நினைக்கிறேன்.


சிறு வயது முதல் அப்படி அழைத்தே பழகி விட்டது அதனால் வேறு காரணங்கள் தெரியவில்லை. அதன் தாவரவியல் பெயர் Mirabilis Jalapa Linn என்கிற வகையை சார்ந்தது.