பள்ளி இறுதி நாள் அன்று ஏற்படும் அலாதி இன்பம் மற்ற நாட்களில் கிடைக்கும் இன்பங்களை விட மேலானதாக தெரியும்.
கோடை விடுமுறையில் எந்தந்த வகையில் நேரத்தை விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் மனம் கற்பனைக் கணக்கீட்டுக் கொண்டே இருக்கும்.
நூறு மில்லி மல்லாட்டை எண்ணெய், ஒரு கீதா சோப் வாங்கிட்டு வா என்று வீட்டில் கூறிய போது சூட்டில் போகாத கால்கள், கொதிக்கும் பொதி மண்ணில் காலணியை தாண்டி, தீமிதியாக சைக்கிள் டயர் வண்டி ஓட்டுவதற்கும் நுங்கு வண்டி விடுவதற்கும் என சாதாரணமான நிகழ்வாக கால்கள் ஓடி செல்லும்.
வெளியூரில் சொந்தம் இருப்பவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை வேற லெவலாக இருக்கும்,
வெளியூர் சொந்தம் இல்லாதவர்களுக்கு 'பாச்சே தைக்கால், தல்பாஸ் தைக்கால்' மணல் மேடுகளே எல்லையின் லெவலாக இருக்கும்.
நாவப்பழம் குண்டு, தண்ணீக்குண்டு, மாவு குண்டு, இரும்பு குண்டு, நெத்தைக் குண்டு என கை ரவைகளை தேர்ந்தெடுத்து கோலிக்குண்டில் பச்சா,மாடம் விளையாடுவதும்,
கோலிக்குண்டை அடித்து ஜான் போடுவதும், விரலில் வைத்து விளையாடும் விளையாட்டு கை என்றும், கையில் வைத்து விளையாடும் விளையாட்டு கால் என்றும் நாமே கற்பனையில் பெயர் வைத்துக் கொள்வோம்
கோட்டிப்புல்லில் தரைக்கோட்டி,மண் கோட்டி விளையாடியும், அதில் கில்லி அடித்து, பாயும் புலி கைலியில் சுளைப் பிடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பம்பரம் விளையாட்டில் புது பம்பரம் என்றால்?அபீட் எடுத்து வட்டம் விளையாட்டு (அது கோட்டில் பம்பரம் சுத்துது மூனாம் என்கிற ஒற்றை ஒரு 'உக்கு' வாங்கி அந்த லெவலில் முடிந்துவிடும்) பழைய பம்பரம் என்றால் ரிஸ்க் எடுத்து சிங்கப்பூர் ஆட்டம். கடைசி அபீட் எடுக்கும் ஒரு ஆளை குறி வைத்து பம்பரத்தை 'உக்கு' வைத்து, அம்மி கொத்துவது போல் கொத்தி பம்பரத்தை உடைக்காமல் விட மாட்டார்கள்.
அந்த பம்பரத்திலும் பல வகைகள் உண்டு (இது வைகோ அண்ணனுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை) கூஜா,கொண்டை வைத்த மாதுளை பம்பரம், சட்டி பம்பரம். அதில் அனைவரின் சாய்ஸ்-சும் சட்டி பம்பரமாக இருக்கும்.
சாட்டை வாங்கி வந்து அதில் சோடா மூடியை நசுக்கி இறுதியில் முடிச்சுப் போட்டு கைக்கு அடக்கமாக, இரண்டு சுற்று கூடுதலாக சாட்டையை சுற்றினாலும் பம்பரத்தை குத்தி விடும்போது கூவும் சத்தத்தை கேட்க அலாதியாக இருக்கும். கூவுவதற்கென்ற பம்பரத்தில் வரும் ஆணியை எடுத்து விட்டு ஸ்குரூ ஆணி போட வேண்டும்.
அந்த ஆணியைப் போட்டு விட தனி எக்ஸ்பர்ட்டும் உண்டு.
இல்லையென்றால் வீட்டு கதவுகள் தான் மல்டி பர்போஸ் & நமக்கு நாமே எல்லாமே!.
வீட்டுக் கதவை தூக்கி கீலில் (கீழ் அல்ல- Door Hinge) வைத்து ஆணியை புடுங்க வேண்டும்.
(உபரியாக கோடைக்காலத்தில் வரும் மாம்பழம் சீசனில் மாம்பழக் கொட்டையை சுட்டு கதவின் இடுக்கில் சத்தம் போடாமல் உடைத்து (சத்தம் போட்டால் சொத்தையாக ஆகிவிடுமாம்) தின்பதற்கும் கதவு உதவும்.)
பிறகு அதில் ஸ்குரூ ஆணியை ஏற்றி தலையை தரையில் தேய்த்து விட வேண்டும் அப்பொழுது தான் பம்பரம் கையில் ஏத்தினாலும் பூப்போல தக்கையாக, மிருதுவாக மாறும்.
மேலும் இந்த லீவுவிலாவது வாப்பா,நானாவிடம் சொல்லி, கைலியில் *'ஊத்தா'* க்கட்டி எப்படியாவது நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என மனம் கற்பனையில் நீச்சல் அடிக்கும்.
நடுவில் அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்கள் ஒன்று கூடி அரிசி,பருப்பு, மிளகா மல்லி, காய்கறி என ஒவ்வொருவரும் ஒன்று எடுத்து வந்து பகிர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கி வாழை இலையில் போட்டு கொல்லையில் உணவருந்தும் போது உணர்வில் காஸ்ட்லீ உணவகமே தோத்து போகும்.
இவையெல்லாம் இந்த கோடைக்கால தொடர் விடுமுறையில் செய்யலாம் என எத்தனிக்கும் போது, *'குறுக்க இந்த கௌசிக் வ்ந்தால்..?'* என்பது போல வீட்டுக்கு வந்து முடி வெட்டுபவரிடம் 'சம்மர் கட்டிங்' என்கிற பெயரில் உம்மா-வாப்பாவின் நிர்பந்தத்தில் தலையை அவரிடம் கொடுப்போம்.
அவரும் தனது அலுமினிய பெட்டியிலிருந்து மிஷினை எடுத்து தலையை குனிய வைத்து பின்புறத்திலிருந்து மேனுவல் மிஷினை ஓட்டுவார். அதனால் வரும் கூச்சத்தில் நைட்ரஸ் ஆக்சைடு N2O (சிரிப்பு வாயு) கொடுக்காமலேயே சிரிப்பு பொத்துக்கிட்டு வரும்.
தலைக்கு மேலே வேலை முடிந்ததும் அக்கம் பக்கத்து மூத்த நானாக்களின் அக்கப்போர் தாங்க முடியாதது.
என்னாங்கனீ.. சதுர வெட்டா சம்மர் வெட்டா? என்ன உம்ம தலையில் தொப்பி போட்டு வெட்டுனாரா? குதிரைக்கு போடுற மிஷினா? எனக் கேலி, கேள்விகளுக்கு ஆளாவோம்.
என்ன செய்வது?! என நொந்து வெயிலில் வெந்து, குளித்து விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தால், முடி வெட்டுன உனக்கு கீர(ச்)சாறு இல்ல,சளி புடிக்கும் வெறும் ஆனத்தை ஊத்தி, படையானை தின்னுட்டு போ என்பார்கள் *'அந்த தொயரம் இருக்கே தொயரம்!'*
ஆனாலும் கோடை விடுமுறை என்பது மாணவர்கள் அனைவருக்கும் அருமையான வசந்த காலம் தான்.
-
ஊர் நேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக