ஞாயிறு, 14 ஜூன், 2009

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

இலவச சீருடை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பில் 9-வது ஆண்டாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் தங்க, வெள்ளிப் பதக்கங்கள் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை மீரா பள்ளி தெருவில் உள்ள ஷாதி மகாலில் நேற்று நடந்தது.

விழாவுக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் சித்திக் அலி பாகவி முன்னிலை வகித்தார்.

முகமது இசாக் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்க, வெள்ளி பதக்கங்களையும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.7 லட்சம்

இஸ்லாமிய சமுதாய மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகளுக்காக ஒட்டு மொத்தமாக வாக்களித்து நமது சிதம்பரம் தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர்.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அனைத்து சமுதாய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் செலவில் இலவச சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கியது பாராட்டுக்குரியது.

இதற்காக மனமார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மாதம் இதே நாளில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

இந்த மாதம் 13-ந் தேதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

முஸ்லிம் சமுதாய மக்கள் அதிக அளவில் படிப்பில் நாட்டம் செலுத்துவதில்லை.

அனைவரும் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்தால் போதும் என்று இருந்து விடுகின்றனர்.

ஆகவே நீங்கள் அனைவரும் கட்டாயம் படித்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி.

இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மகளிர் கல்லூரி

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ், கடலூர் முதுநகரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர் மற்றும் காலி பணியிடத்தை நிரப்பவேண்டும்.

மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.

பரங்கிப்பேட்டையில் இருந்து பிச்சாவரம் காடு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தடுப்பணை கட்டி மணல் கொட்டி குடில் அமைத்து கொடுத்தால் சுற்றுலா தலமாக சிறப்புற்று விளங்கும் போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளார்.

அவர் கூறியபடி கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் கல்லூரி கட்டுவதற்கு 10 ஏக்கர் நிலமும், ரூ.1 கோடியும் அரசிடம் ஒப்படைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைக்கு போதிய நோயாளிகள் வருவதில்லை.

இருந்தும் கூடுதல் டாக்டர் நியமிக்க பரிசீலனை செய்யப்படும்.

தடுப்பணை கட்டவும் உரிய முயற்சி எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

விருது

முன்னதாக பரங்கிப்பேட்டை டாக்டர் சேஷாத்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மாநில அளவில் நடந்த குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் பெற்ற அமீது கவுசை பாராட்டியும் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் பரங்கிப்பேட்டை யூனியன் தலைவர் முத்துப் பெருமாள், பேராசிரியர் கதிரேசன், ஊராட்சி மன்ற தலைவி கஸ்தூரி, பெண்கள் அரபுக் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி, தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் காண்டீபன், முனவர் உசேன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், பொறியாளர் அருள் வாசகம், மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெகநாதன், கவுன்சிலர்கள் காஜா கமால், வினோபா, கிள்ளை நகர செயலாளர் சாமி மலை, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் எகையா சாகிப், அலாவுதீன், முகமது இலியாஸ், முகமது இஸ்மாயில், அபிபுல்லா, மீரா உசேன், சையது அபுபக்கர், அஸ்கர் அலி ஜித்தா, சையது சாகுல் அமீது உள்பட ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம், பைத்துல் மால் கமிட்டி, கல்விக் குழு, கல்வி வளர்ச்சிப் பணி, கிரசண்ட் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகளும், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் 2 பேருக்கு தங்க பதக்கமும், 109 பேருக்கு வெள்ளி பதக்கமும், இலவச சீருடை 1000 பேருக்கும், 1200 பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

முடிவில் ஜமாத் கல்விக் குழு தலைவர் அமீது மரைக்காயர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக