வெள்ளி, 13 டிசம்பர், 2024

நானா-க்கள் சொன்ன பிஸ்மில்லா!

கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும்.

இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம் இருந்தாலும், அன்று ரங்கநாதன் தெரு போல கூட்டம் வழிந்து போகும்.

1990-களின் முற்பகுதியில் ஒரு கடல் சனத்தையும் சன்னமாக அடைத்தது அந்த பழைய காலத்து வீடுகள் தான். அது போக மீதியிருந்தால் சனங்கள் அமர அடுத்த வீட்டு மனங்களும் இருந்தது கொடுத்து உதவ.

அக்கம்பக்கத்து வீடுகளில் கல்யாணம் என்றாலும் நம் வீட்டு கல்யாணம் என்பது போல் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை போட்டு ஆனந்தம் அடைந்தோம். மூன்று நாட்கள் அவர்கள் வீட்டில் தான் உணவு உண்டோம். 

அன்று ஒரு திருமணம் என்றாலே திருமணம் நடக்கும் வீடு விடுத்து, அக்கம்பக்கத்து

மூன்று வீடுகளை கலரிக்காக எடுத்து விடுவோம் அவர்களும் சுத்தமாக தயார் செய்து கொடுத்து விடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலிருந்து வாடகை எடுத்த மூனு,நாலு சுருள் பாய்களையும், ஐம்பதுக்கு மேற்பட்ட அலுமினியம் மடா செம்புகளையும் கூடவே ஒரு கொட்றா உப்பையும் எடுத்து வைத்து விடுவோம்.

அன்று இரத்த கொதிப்பு அதிகமில்லா காலம். இன்று அந்த உப்பு வைப்பது வழக்கொழிந்து போனது(க்கு) ஒருவேளை இது தான் காரணமோ?!🤔

இதற்கு முன்பு நடுநிசியில் புறப்பட்ட மாப்பிள்ளை பஜ்ரு நேரத்தில் பொண்ணு வீடு வந்து சேர, பேனியான், கைவீச்சு, சீனி வாடா, நானாஹத்தா, உல்சம்சாதூள் உள்ளிட்ட அனைத்து பனியாரங்களும், அதனுடன் ஹார்லிக்ஸ் பூஸ்டுக்களும் பரிமாறப்படும். 

அன்றைய பெஸ்ட்மேன்கள் என்பவர்கள் ஒருநாள் முதல்வர் மாதிரி (கிட்டத்தட்ட விட்டில் பூச்சி மாதிரியும் என்று கூட மாறு உதாரணம் சொல்லலாம்) வேறு விதத்தில் சொன்னால் மாப்பிள்ளையின் பவுன்சர்கள் மாதிரி

அவர்கள் எது சொன்னாலும் நாம் இனிமையாக தான் பேச வேண்டும் இல்லையெனில் மாப்பிள்ளையை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

திருமண நிக்காஹ் விருந்து என்றாலும், பனி எடுப்பு களரி என்றாலும் அக்கம்பக்க எய்த்த வீடுகளை கொடுக்க தயாராகவே இருப்பார்கள். இது போக கிளை தாவத்தும் அதுக்கு இன்னொரு கிளை தாவத்தும் உண்டு அதற்கு ஒரு வீடே போதுமானது.

இரண்டு மெயின் தாவத்துகளிலும்,

நாட்டை காக்க முப்படைகளும் தயார் என்பது போல், வீட்டை காக்க (தாவத்களில் பரிமாற மூன்று வீடுகளிலும்) ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு தயாராக அட்டென்சனிலும், தெரிந்தவர்கள் கூடுதலாக ஒரு கொட்றா  இறைச்சி கேட்டால் வரும் அந்த டென்சனிலும் இருப்போம்.

திருமணத்தில் எத்தனை பேர்கள் வருவார்கள் என்பதை *'அன்றே கணித்தார் கமல்'* என்பது போல் பத்திரிக்கை கொடுப்பவர் லிஸ்ட் வைத்தே கூறி விடுவார்கள் எத்தனை பேர் வருவார்கள் என்று 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போல் அவ்வளவு துல்லியம் (ஒரு ஃப்ளோவ்'லே வருது மன்னிக்க!)😀

இன்று போல் சோறு, இறைச்சி, தால்ச்சா தட்டிக்கிச்சி என்பதை அன்று பார்த்தது மிகவும் அரிது.

பரிமாற பைடு நபர்கள் *'கேட்டரிங்கை'*  அன்று அப்படி ஒரு வார்த்தையை காதால் 'கேட்டு அறிந்தது' கூட  இல்லை.

அன்று பக்கத்து வூட்டில் பெரிய மாமாவும், எய்(திர்)த்த வூட்டில் சின்னாப்பாவும், பக்கத்து வூட்லே மச்சானும் இருந்து கலரியை கவனித்து கொண்டார்கள். 

திருமணம் நடக்கும் வீட்டிலிருந்து  *"பிஸ்மில்லா"* கூற சிக்னல் வந்ததும், 

மற்ற மூன்று வீடுகளிலும் மாமா,சின்னாப்பா, மச்சான்களும் அதை உள்வாங்கி மற்ற வீடுகளில் *"பிஸ்மில்லா"* என்று கூறி எதிரொலித்தார்கள். இதைதான் பல வீட்டு திருமணங்களில் பல்வேறுபட்ட நானா-க்கள் *பிஸ்மில்லாஹ்* என்று உதிர்த்தார்கள்.

அன்று அனைவரும் ஒருசேர அன்போடு ஒரே நேரத்தில் உண்டு மகிழ்ந்தோம். 

வயிறோடு மனமும் நிறைந்தது.

இன்று கேட்டரிங் சேவை வழியாக பரிமாறப்படுவது உணவு மட்டுமே. பிஸ்மில்லாவும்  இல்லை. அன்பும்,அரவணைப்பும், மகிழ்வும் சுத்தமாக இல்லை.

உணவு உண்ணும் போது பிஸ்மில்லாவை மறந்தால் வயிறு நிறையாது என்பது போல், மனம் நிறையாமல் வீடு விரைகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...