திங்கள், 24 பிப்ரவரி, 2025

என்னதான் வேணும்?எண்ணெ(ய்) தான் வேணும்!

இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ் பண்றிங்களா?

அதுலே கொழுப்பு இருக்கு அதனாலே இதய நோய் பிரச்சினையெல்லாம் வருதாம் சன் பிளவர் எண்ணெய் யூஸ் பண்ணுங்க அதுலே தான் கொழுப்பு இல்லை' என்று 90-களின் ஆரம்பத்தில் இப்படி ஒரு கற்பிதம் விதைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

1960 -ம் காலகட்டத்தில் தான் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ..

1991-ல் தொடங்கிய தாராளமயமாக்கலுக்கு  பின்னரே நாட்டில் உணவு, உடை மற்றும் கலாச்சார, பாவனைகள் என்று பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன. 

சூரியகாந்தி எண்ணையை ரஷ்யா, உக்ரைன், துருக்கியில் இருந்தும், சோயா எண்ணெயை அர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், மேலும் பாமாயிலைஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

ஆனால் தமிழகத்தில் நம் முன்னோர்கள் காலத்தில் பசு நெய், வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் மல்லாக்கொட்டை(கடலை) எண்ணெய்  போன்ற எண்ணெய் வகைகளை பயன்படுத்தியுள்ளனர். முதலில் நெய்யின் பயன்பாடு இருந்ததால் தான் எல்லா எண்ணெய்களின் முடிவில் 'நெய்' என்று முடிகிறது(?) 

நெய்-க்கு பிறகு நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யின் பயன்பாடே கணிசமாக இருந்துள்ளது.

அந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய் வாங்க கடைக்கு கல்லுக் கண்ணாடி பாட்டில் எடுத்து செல்வோம் என்பதை 2K கிட்ஸ்-களின் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாதது. 

உண்மையில் சொன்னால் 90-களுக்குப் பிறகு பிறந்த தலைமுறையினருக்கு 30- ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவைப் பற்றி ஊகிப்பது கடினமாக தான் இருக்கும். 

நியூஸ் பேப்பரில் பொட்டணம் மடித்துக் கொடுக்கும்

'லாலா கடை' இனிப்பு பூந்தி, மிக்ஸர்,காரா பூந்தி,பக்கோடா & ஓலை பக்கோடா என அன்று எண்ணெய்யில் செய்த ஒவ்வொன்றும் சுவையில் வேற லெவலாக இருக்கும்.

அன்றைய நியூஸ் பேப்பரில் பயன்படுத்தப்பட்ட நச்சுக்குறைவான மையினால் உடல் உபாதைகள் ஏற்படவில்லை.

தட்டு வண்டியில் அலங்காரமாக கண்ணாடி சுவர் எழுப்பிய லாலா கடைகளின் இனிப்பு, காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களால் இருதய சுவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

இந்தியாவின் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய்யும், தென்னகத்தில் (கேரளாவை தவிர்த்து) கடலை எண்ணெய், நல்லெண்ணெய்யும், கேரளாவில் தேங்காய் எண்ணெய்யும் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

'கச்சா எண்ணெய்' போல் மிகப்பெரிய வர்த்தகமான  சமையல் 'பக்கா எண்ணெய்' யின் வர்த்தகத்தை குறும்பு செய்யும் மேலைநாட்டு ~இலுமினாட்டி~ Come-Naughty-களிடம் 'Come Here You Naughty' என்றுக்கூறி கையளித்து விட்டார்கள் அன்றைய ஆளும் வர்க்கத்தினர்.

இன்று சன் பிளவர் தொடங்கி ரைஸ் பிரான் ஆயில், கனோலா ஆயில்  என்று அனைத்தும் ரீஃபைண்ட் செய்யப்பட்டு விற்பனை ஆகிறது. ஆனால் சந்தையில் கிடைப்பது அனைத்தும் உண்மையில் எண்ணெய்கள் தானா?  

ரீஃபைண்ட் எண்ணெய் என்பது அனைத்து சத்துக்களையும் எடுத்துப் பிழிந்த பிறகு கிடைக்கும் ஒரு கழிவுப் பொருள். அதேபோல் மினரல் ஆயில் என்பதும் எண்ணெய்யில் உள்ள அனைத்தும் நீக்கிய பிறகு கிடைக்கும் ஒரு சக்கை கழிவு பொருள் தான்.

தலைக்கு தேய்க்கும் பிரபல பிராண்டு எண்ணெய்களில் கூட மினரல் ஆயில் என்று குறிப்பிட்டு விற்கிறார்கள்.

மினரல் வாட்டர் என்பது, உண்மையில் மினரல்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தண்ணீர் எப்படியோ அது போல் தான் அந்த எண்ணெய் வகைகளும். 

புரியுற மாதிரி சொன்னால் மீன் வலையின் உள்ளே மீன் இருக்கும், கொசு வலையின் உள்ள கொசு இருக்குமா?

அந்த மினரல் ஆயிலை தயாரித்து விற்கும் நிறுவனத்திற்கு எப்படி மனிதம் என்கிற மனம் இல்லையோ, அதுபோல் தான் அந்த மினரல் ஆயிலுக்கு எந்த மணமும் இல்லை.

எந்த எஸ்சென்ஸ் சேர்க்கிறமோ அந்த எண்ணெய்யாகவே மாறிவிடும். 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறிவிடுகிறாய்' என்கிற விவேகானந்தர் கூற்றையெல்லாம் எந்த கெடுதலுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டாம்.

இந்த எண்ணெய் அரசியலால் இருதய நோய்கள்,சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்கள் பெருகி விட்டன என்று பரவலாக நம்பப்படுவதால், "மரசெக்கு- கருப்பட்டிக்கு நீ திரும்பி வா" என்பதுபோலும்..

கர்(வீடு) வாபஸி(திரும்ப வருவது)  வீட்டு சமையல் அறையில் மீண்டும் பழைய எண்ணெய்யை திரும்பக் கொண்டு வர ஆர்கானிக் மாற்றங்களை நோக்கி வாருங்கள், கலப்பிடமில்லாத செக்கில் ஆட்டிய எண்ணெய் எங்களிடம் கிடைக்கும் என்று "செக்கில் ஆட்டிய அசல் உருட்டு" என்பது போல் போட்டிப் போட்டுக்கொண்டு ஒரு சில ஆர்கானிக் கும்பல் கடலை எண்ணெய்,நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்யில் மினரல் ஆயிலை கலந்தும் கூடவே சில கொழுப்புகளை கலந்தும் விற்பனை செய்வதாக தெரிகிறது. 

சில மருத்துவர்களும் கடலை எண்ணெய் சாப்பிடுங்க, அதில் தான் நல்ல கொழுப்பு இருக்கிறது என்று தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள் 'இவங்களே வைப்பாங்களாம், இவங்களே எடுப்பாங்களாம்' கடலை எண்ணெய் சரியில்லை, சூரியகாந்திக்கு வாங்கன்னு என்று, அன்று சொன்னது அதே அவிங்க வாய்தான்..

கொழுப்பும்,மினரல் ஆயிலும் கலந்து விற்பவர்களிடமிருந்து எண்ணெய்யும், தண்ணீரும் போல நாம் ஒட்டாமல் இருந்து, நேரடியாக கடலை போன்ற மூலப்பொருட்களை சொந்தமாக வாங்கி செக்/மில் ஆலைகளுக்கு சென்று ஆட்டி எடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

வைத்தியருக்கு கொடுப்பதை விட வாணியருக்கு கொடுக்கலாம்.


-

ஊர் நேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக