செவ்வாய், 5 ஜனவரி, 2010

மாறி வரும் பரங்கிப்பேட்டை அடையாளங்கள் - II

மாறி வரும் பரங்கிப்பேட்டை அடையாளங்கள் - II
நாம் வசிக்கும் இல்லங்கள் நமது மனத்தின் விசாலத்தன்மையினையும், அழகியலையும் வெளிப்படுத்துவதாக எனக்கு பல சமயம் தோன்றியுள்ளது. நமதூரில் முன்பெல்லாம் இரண்டு கட்டு, மூன்று கட்டு வீடுகள் நிறைய இருந்தன. நெடிய பருத்த தூண்களுடனும், வேலைப்பாடுகள் அமைந்த முன்புற கலாதிகள், உயர்ந்த வாசற்படிகள், குறிப்பாக விசாலமான திண்னைகள் கொண்ட வீடுகள் பரங்கிப்பேட்டையின் ஒரு அடையாளமாகவே விளங்கின. இப்போது அவையெல்லாம் 40 வயது தாண்டியவர்களின் மனஅடுக்குகளிடையே தான் தேடிப்பார்க்க வேண்டியிருக்கும் போலுள்ளது.


வீடுகளில் வெயிலை பாய்ச்சும் விசாலமான, கம்பிகள் வேய்ந்த முற்றங்கள் வெயிலை மட்டுமல்ல, மழைநாட்களில் மழைத்தண்ணீரை தேக்கி (வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரங்களில்) மினி நீச்சல் குளங்களாகவே ஆகிவிடும். இரவுகளில் முற்றங்கள் வழியே விடியவிடிய வழிந்தோடும் நிலவொளியை பிடித்துவைத்து என்ன செய்யலாம் என்றெல்லாம் கிறங்க வைத்த முற்றவெளிகள் இன்று "கல்யாணகூட"ங்களாய் சுருங்கி இருக்கிறது. அகண்ட தாழ்வாரங்கள் கல்லா மண்னா விளையாட்டுக்கும், வீட்டு விசேஷங்களின் போது இரவு நேர வெட்டிப்பேச்சுகளுக்கும் ஒரு அற்புத களம்.
உப்பிய தேக்குமரத்தூண்களையும், மரப்பலகை மச்சிகளையும் கொண்ட கூடம் பனிக்காலத்தில் கதகதப்பும், வெயில் காலத்தில் காற்றோட்டமுமாக உறங்கும் இடம்.


அறைகள்.. எத்தனை பெரிய குடும்பத்தையும் இதமாக அரவணைத்துக்கொள்ளும் அன்பு கொண்டவை. திருமணம் மற்றும் விசே­ காலங்களில் இந்த இல்லங்கள் ஒரு மினி ஷாதி மஹாலேதான். அக்காலங்களில், பவுமானமும் (தமிழ் வார்த்தைதான்) பவுசும் பெருக வளைய வரும் உறவுகளால் ஏற்படும் மகிழ்வுகள் என்றும் மறக்க இயலாதவை. இரவுகளும் பகல்களாக தோன்றவைக்கும் இல்லங்கள் அவை.. பாட்டனின் அதிகாரம் தரும் மரியாதை கலந்த பயம், பாட்டியின் நிபந்தனைகளற்ற பரிவு, சிற்றப்பா/பெரியப்பாமார்களின் கண்டிப்பு, சிறிய/பெரிய அன்னைகளின் பிரியம், சகலைகளின் பனிப்போர், Centralisation of Finance, Decentralisation of Affection, பஸ்டாண்ட் பக்கம் உன்னை அதிகமா பார்க்குறேனே.. என்ற மாமாவின் கவனிப்பு ஏற்படுத்தும் நல்மாற்றங்கள், சாதாரண அறிவுகளைகூட தங்கைகளுக்கு விளக்கும் மைனிகள்..... என்று கூட்டுக்குடும்பத்தின் சகல விழுமியங்களும் கொண்ட அகராதிகள் இந்த இல்லங்களிலிருந்துதான் கட்டியயழுப்பப்பட்டன. " உலகத்தில் எனக்கு சொந்தம் மூன்றே பேர்தான் " என்ற தனிக்குடித்தன தனிமை அவலம் இந்த இல்லங்களில் இல்லாதிருந்தது. இரண்டு நாள் காய்ச்சலில் படுத்தால், கதை பேசியே கவலை போக்க ஒரு உறவுக்கூட்டத்தையே வைத்திருந்த இல்லங்கள் அவை. தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்ப சொல்லும் மனவிசாலத்தனத்தை இந்த விசாலமான இல்லங்கள் கற்றுத்தந்தன.

கொல்லைகளை பற்றி யோசித்துப்பார்த்தால் சுயபச்சாதாபம்தான் மேலிடுகிறது. எத்தனை பெரிய கொல்லைகள்? எத்தனை பசுமையான தாவரங்கள்..மரங்கள்...செடிகொடிகள்? மண்தக்காளி என்றால் எப்படி இருக்குமென்றோ, தாழம்பூ என்றால் என்னவென்றோ இப்போதைய பையன் ஒருவனிடம் கேட்டால் அவனுக்கு தெரியாது என்றுதான் தோன்றுகிறது. இன்றைய கிலோ 45 ரூபாய் கத்திரிக்காயும், 3 ரூபாய் எலுமிச்சை பழமும் அன்று அண்டை வீடுகளுக்கு மீதமாய் கொடுத்துவிடப்படும் காய்கறிகள். மாம்பழங்களும், கொய்யாக்களும் பொழுதுபோக்கு கனிகள். மகிழம்பூக்களும், டிசம்பர்பூக்களும் விரயமாகும் பூவினங்கள்.
நமது தோட்டங்கள் அடுப்பெரிக்கும் எண்ணெயை தவிர மற்ற அனைத்தையும் தந்தவை. இன்றைக்கு கட்டப்படும் இல்லங்களில் கொல்லை என்று ஒன்று 14க்கு 25 சென்டிமீட்டரில் பேருக்கு இருக்கும். அல்லது அதுவும் இருக்காது. (இன்றைய பல இல்லங்கள் எழுப்பப்பட்டதே அந்த கொல்லைகளின் மேல்தான் என்பது தனிக்கதை.)
பெருகிவரும் மக்கள் தொகையிலும், எக்குத்தப்பாக எகிறிபோய்க்கொண்டிருக்கும் நிலமதிப்பையும் கவனத்தில் கொள்ளும்போது யாரையும் எதற்காகவும் குறைசொல்லமுடியாது என்பதுதான் உண்மை. (உலக அளவில் ரியல் எஸ்டேட் ஆழமான சரிவை கண்டாலும், பரங்கிப்பேட்டையில் மட்டும் நிலமதிப்பும் சரி, வீட்டு வாடகையும் சரி எந்த மாற்றமும் இல்லாமல் உயர்ந்தே வருவது எப்படி என்பது புரியாத புதிர். குறிப்பாக, வீட்டு அட்வான்ஸ்... 50 ஆயிரம், 1 லட்சம் என்று மலைக்க வைக்கும் தொகைகள் நமதூரில் மட்டும் தான் என்று தோன்றுகிறது.) ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு திரட்டிய செல்வத்தை கொண்டு கட்டும் இல்லங்களில் வெளிச்சத்தையும், காற்றோட்டமான அமைப்பினையும், குறிப்பாக இயற்க்கை சார்ந்த வகையில் கட்டப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
இன்றைய இல்லங்கள் எத்தனை மனிதர்கள் வசிக்கப்போகிறார்கள் என்று அல்ல, எத்தனை மனிதர்கள் இதில் வசிக்க வேண்டும் என்ற முன்தீர்மானங்களுடனே பெரும்பாலும் கட்டப்படுகின்றன என்பது தான் உறுத்தும் விஷயம். அபார்ட்மெண்ட்கள் வரலாம் அபார்ட்மெண்ட் மனோபாவம்தான் வந்துவிடக்கூடாது. இன்றைய இல்லங்களின் மிக்பபெரும் குறையாக நாம் காண்பது முக்கிய பொருளாதார முதலீட்டுப்புள்ளியாக அவை தவறாக கொள்ளப்படுவதுதான். தற்போதைய இல்லங்களின் உள்ளேயும் புறமும் பார்த்தால் மிகவும் சிரமப்பட்டு சேகரிக்கப்பட்ட பொருளாதாரத்தினை சரியான இனங்களில் செலவழிக்கும் விகிதாச்சாரம் தெரியாமல் செய்யப்பட்ட தவறான ஒரு காரியம் போல் மனதிற்கு படுகிறது.
யாரிடமும் கேட்கமுடியாமல் வட்டிக்கு வாங்கி பிற்பாடு அதன் காரண்த்தினால் மானத்தை இழக்ககூடிய சூழ்நிலையில் உள்ள சகோதரிகள் நிறைந்த இந்த சமுதாயத்தில் ஒரு சமூக கூட்டு பொறுப்புணர்ச்சி என்பது கட்டாயம் தேவை. அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்குமான வித்தியாச இழையை கண்டுபிடிப்பதில் இந்த பொறுப்புணர்ச்சி அர்த்தம் பெறுகிறது.
தற்போதைய சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் பார்க்கும்போது நமது வருங்கால சந்ததியினரின் நிலை குறித்த ஆழ்ந்த கவலை தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது. இந்த வரிசையில் இருப்பிட சிக்கல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தன்னிறைவற்ற மனமும், சரியான விதத்தில் கையாளப்படாத பொருளாதாரமும், மார்க்கம் கற்றுத்தரும் இயல்பான வாழ்க்கை முறையை நாம் கையாளாததும் தான் இந்நிலைக்கான காரணம் என்று மட்டும் உறுதியாக தோன்றுகிறது.

3 கருத்துகள்:

  1. This is a very good article. It took back several decades and rekindles all old memories. Will be turn to such age and era. Nay, unable to reverse the time clock.

    Jawad H

    பதிலளிநீக்கு
  2. ஸலாம்...

    அடையாளங்களை இழந்து அழிவின் விளிம்பில் இருக்கும் பரங்கிப்பேட்டையின் உண்மைகளை கண்முன் நிறுத்தும் ஆழமான கட்டுரை....

    தனக்கே உரிய பாணியில் சகோதரர் ஹமீது மரைக்காயர் இதை வடித்துள்ளார்.

    நம் நகர நானாக்களும் இது போன்ற அழிந்து வரும் அடையாளங்கள் குறித்தும், அவற்றை மீட்பதற்குண்டான வமிமுறைகள் குறித்தும் பதிவிடலாம்...

    அவை எதிர்கால நம் சந்ததிகளுக்கு ஒரு பாடமாக அமையும் இன்ஷா அல்லாஹ்...

    சகோ. ஹமீது மரைக்காயர் அவர்களுக்கு..

    தங்களை பாராட்டினால் தங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும்.

    இருப்பினும் உள்ளத்தில் தோன்றிய வார்த்தைகளில் சிலவற்றைத்தான் இங்கு பதிய வைத்திருக்கின்றேன்.

    தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    இந்த ஒரு சில கட்டுரைகளுடன் தங்களின் பணிகள் முடிந்து விட்டதாக நினைத்து ஓய்வெடுத்து விட வேண்டாம்.

    தொடருங்கள்...

    அழிந்து போகும் நம் நகரின் வரலாற்றை மீட்டெடுக்கும் அறப்போரில் வெற்றி பெற வாழ்த்துவதுடன் இணைந்து செயல்படுவதற்கும் காத்திருக்கின்றேன்.

    நன்றி

    --
    என்றும் மாறா அன்புடன்...

    குவைத்திலிருந்து...

    பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

    பதிலளிநீக்கு
  3. நமக்கு கோடைகாலங்களில் கிணற்று நீருக்காகவும், குளிர்ந்த காற்றுக்குக்காகவும், இன்னும் மரங்கள் அடர்ந்து இருந்ததால் தூய்மையான மூச்சுகாற்று (பிராணவாயு) கொடுத்துக்கொண்டிருந்த கோட்டாறு இன்று மண் நிரப்பி மூடப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் தேங்காமல் கடலுக்கு சென்றுவிட்டது. இதைப்போல் அழிந்த குளங்கள், ஆறுகள் பல பல இனி யாரும் தண்ணீர் பஞ்சம் என்று அழுவாதீர்கள் குடிக்க,குளிக்க தெருவில் தண்ணீர் விற்றப்படலாம் எதிர்காலத்தில் காற்றும் பைகளில் விற்கப்படலாம் அதற்கு பணத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அருமையான பதிவு ஹமீது மரைக்காயர்

    இனி நம் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் படத்தில் மட்டுமே காட்ட முடியும்
    எதற்கும் அனைவரும் படம் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

    மன கவலையுடன் இதை பதிக்க வேண்டியுள்ளது. 2000த்தில் நான் எழுதிய கவிதையின் கடைசிவரிகள்

    ....நாம் வல்லுனர்கள்
    திறமையாக
    வயல்களை அழிக்கக்
    கற்றுக்கொண்டோம்...

    இனி.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...