எதிர்வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் தயாராகி வரும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இதன்பொருட்டு ஹேஷ்யங்களும் ஹாஸ்யங்களுமாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
முதற்கட்டமாக, அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரக்கூடும் என்று யூகங்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தமது பொதுக்குழுவில் "கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். சொல்லிவைத்தாற்போல அதே வார்த்தைகளையே சேலத்தில் நடைபெற்ற தம்கட்சியின் "உரிமை மீட்பு மாநாட்டில்" உச்சரித்திருந்தார் விஜயகாந்த். "கூட்டணி பற்றி என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்".
கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஜெயலலிதா கூறினாரே தவிர, ஏற்கெனவே கூட்டணியில் உள்ளதாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவது பற்றி எதுவும் கூறவில்லை.
நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் உடனடியாக பேசுவதை அ.தி.மு.க. தவிர்ப்பதாகவும் அப்போது பேச்சு எழுந்தது.
இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்து விட்டுச் சென்றார். தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிய எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை இரு கட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்டன.
இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளையும் கூட்டணி பற்றி பேச வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சென்னையில் திங்கள்கிழமை உறுதி செய்தார்.
தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக ஒரு உறுதியான அணியை நாமெல்லாம் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று தன்னிடம் தொலைபேசி மூலம் ஜெயலலிதா கூறியதாக பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி பற்றி முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் நடைபெறுகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டங்களில் மாநிலக் குழு உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகளோடு, அகில இந்திய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அடுத்த சில நாள்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்கள் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை நிருபர் தெரிவிக்கிறார்.
;நன்றி;இந்நேரம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக