செவ்வாய், 6 டிசம்பர், 2022

பரங்கிப்பேட்டை டவுன் காஜி M.K.எஹ்யா சாஹிப் காலமானார்.

“மஹ்மூதுபந்தர் தாருல் கஜா ஷரா ஷரீப் மஹ்கமா நிக்காஹ் பதிவு தப்தர் நமூனா, போர்ட்நோவா தற்காலம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை……” என்று பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் திருமண நிக்காஹ்-வின் போது,
ஓங்கி ஒலித்த  கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பரங்கிப்பேட்டை டவுன் காஜி M.K.  எஹ்யா சாஹிப். இன்று (06-12-2022) உடல்நலக்குறைவால் காலமானார்.


 மலரும் நினைவுகளாக, அவரவர் தங்களது திருமணக்கால நிகழ்வலைகளில் மூழ்கிடும் போது  இவரிடம் பரிகாசத்துடன் பால் பழம் ஊட்டிக்கொண்டதும், கம்பீரமான இவரின் குரலும் நிச்சயம் நினைவுக்கு வரும் 

எஹ்யா சாஹிப், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரும் அப்போதைய டவுன் காஜியாருமான Z. கபீர் கான் சாஹிப் காதிரி உடன் (நாயீப் காஜி) – துணை காஜியாக தனது பொது வாழ்க்கையை துவங்கினார். 

2004 ஆம் ஆண்டு காஜியாக பொறுப்பேற்று நீண்ட காலம் பணியாற்றிய எஹ்யா சாஹிப், தனது வாழ்நாளில் பல ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்தவர். 

இஸ்லாமியர்களின் திருமணங்களை நடத்தி வைக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட காஜிகள் சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஊர்களில் மட்டுமே உண்டு என்ற கூற்றும் உண்டு.




சில வருடங்கள் மக்தும் அப்பா பள்ளி (பக்கீம்ஜாத்)யில் இமாம் ஆக பணிபுரிந்த எஹ்யா சாஹிப், பரங்கிப்பேட்டையில் அன்றைய காலத்தில் வழக்கத்தில் இருந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் இருந்து, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் இறப்பு - நல்லடக்க  நேரங்களில் செய்த உதவிகள் -  சேவைகள், நல்லடக்க  ஏற்பாடுகளின் போது  இளைஞர்களுக்கு வழிக்காட்டியது  என பரங்கிப்பேட்டை சமுதாயத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்புகள் ஏராளம். 

பல வருடங்களுக்கு முன் ரெயிலடியில் சில முஸ்லீம் குடும்பங்கள் வசித்து வந்தனர், அம்மக்களின் சுக சோகங்களின் போது உடனிருந்த மனிதர்.
அங்கு நிகழ்ந்த இறப்புக்கு மைய்யத்தை அங்கிருந்து மீராப்பள்ளிவரை அப்போது சுமந்து வந்தவர்களில் இளைஞர் எஹ்யா சாபும் ஒருவர். இளம்வயது முதல் இதுபோன்ற நற்காரியங்களில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டவர்.

மீரா பள்ளியில் ஜும்ஆ குத்பாவுக்கு முன்னால் பல ஆண்டுகளாக மஹ்ஷர் ஓதியது,

பெரு நாட்களில் கம்பீர குரலில்  பக்கிம்ஜாத் பள்ளிவாசலிலிருந்து மக்களை ஜமாஅத்தாக அழைத்துச் சென்றது,

1997-ல் பழனிபாபா கொலை செய்யப்பட்டபோது கவுஸ் பள்ளியிலிருந்து சென்ற இரங்கல் ஊர்வலத்தில்  முதல் வரிசையில் கலந்து கொண்டது

என்று அவர் பொது வாழ்வு குறித்த நினைவுகளும் ஏராளம் உள்ளன. 

அண்மைக்காலங்களில் , மணமகனின் நண்பர்களால் சில திருமணங்கள் சற்று தாமதமாக நடைபெறுவது குறித்து முன்பு ஒரு முறை கவலையுடன் கருத்து தெரிவித்த  எஹ்யா சாஹிப், திருமண வைபவங்களுக்கு பலர் தங்களது தனிப்பட்ட வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகின்றனர்,  மேலும் உடல் நலனில் சற்று நலிவடைந்தவர்களும், திருமண அழைப்பினை மதித்து தங்கள் நலனை பொருட்படுத்தாது வருகை தருகின்றனர், அத்தகையோர்களை, அதீத தாமதங்களால் சிரமத்திற்குள்ளாக்கி விடாமல்,  திருமணங்கள் உரிய நேரத்தில் தாமதமின்றி நடைபெற்றிட வேண்டும், இப்போதைய வாலிபர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

பரங்கிப்பேட்டையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான காஜி M.K.எஹ்யா சாஹிப் அவர்களுக்கு  எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை தந்தருள வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

காஜி M.K.எஹ்யா சாஹிப் அவர்களின் குடும்பத்தினருக்கு MYPNO சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அன்னாருடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் சிறந்த பதவியை அல்லாஹ் தந்தருள துஆ செயகின்றேன்.

    அனைவருடனும், அன்போடும், உரிமையோடும் பழக கூடியவர்கள்.

    ஒரு முறை ஓர் திருமண நிக்காஹ் நிகழ்வின்போது, அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், அவர்கள் எழுதிய நிக்காஹ் வாசகத்தை என்னை படிக்கவைத்தார்கள்.

    “ நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேன்மை பொருந்திய ஹஜ்ரத்......."

    என்கிற வாசகத்தை பலமுறை கேட்டுள்ள ரசனையில் அவர்கள் படிக்கும் ராகத்திலேயே படித்தபோது, சந்தோஷப்பட்டார்கள்.

    வஜ்ஹுதீன்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...