முஹம்மது நானா இருக்காங்களா? என அஹமது அவர் வீட்டின் கதவின் கொலுக்கை தட்டி பதட்டமாக கேட்டான்..
அரண்மனை சுவர் போல பர்மா தேக்கில் செய்த கதவில் ஐந்து கிலோ எடையுள்ள கொலுக்கு தொங்கியது. கதவை தட்டும் போது தவறி கொலுக்கின் நடுவில் கையின் விரல் சிக்கினால் சின்னாபின்னாமாகி விடும் போன்று பிரமாண்டமாக தொங்கிக் கொண்டிருந்தது முஹம்மது நானாவின் வீட்டு அழைப்பு மணி.
இரண்டு கட்டுக்களுடன் அமைந்துள்ள வீடு வேறு, நம் குரல் உள்ளே வரைக்கும் எட்டியிருக்குமா? என அவன் எண்ணும் போது...
யாரு..? கொஞ்சம் இரிங்க..! நானா கொல்லையிலே இருக்காங்க, வருவாங்க சொல்லிருக்கேன் என்று உள் கட்டிலிருந்து பதில் வந்ததும்.. அவன் கொஞ்சம் திருப்தி அடைந்து அவர் வரும் வரை முஹம்மது நானா வீட்டு திண்ணையில் அமர்ந்தான் அஹமது.
ஆனால் அவனின் மனம் மட்டும் ஒருவித பதட்டதுடன் காணப்பட்டது.
காரணம் அடுத்த வாரம் அஹமதுக்கு சுன்னத்(கத்னா) என்று வீட்டில் கூறியதும் அவனுடைய நட்பு வட்டங்களில் உள்ள சுன்னத் செய்யாத நண்பர்கள் அவன் மனதில் சுன்னத் பற்றிய பலவித குழப்பங்களை ஏற்படுத்தி விட்டார்கள் அதையே நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தோளில் தட்டி சொல்லுங்கனி.. என்ன விஷயமா தேடி வந்திருக்கியும்.? என்று முஹமது நானா அவன் நினைவை கலைக்கவும்...
உங்கள்'ட்டே ஒன்னு கேக்கலாம் வந்தேன் நானா, நீங்க தான் சொல்லனும் என தயங்கவும்..
சொல்லுங்கனி.. பிரோட்டு (டியூசன்) ஏதாவது எடுக்கனுமா?
இல்ல நானா எனக்கு அரை பரீட்சை லீவுலே அடுத்த வாரம் சுன்னத் செய்ய போறதா சொன்னாஹோ அதுதான் உங்கள்ட்டே டவுட்டு கேட்டு போலாம்னு வந்தேன் என அஹமது சொன்னதும்...
முஹம்மது நானாவின் முகம் லேசான சுருக்கம் அடைந்தது. அது ஆச்சிரிய சுருக்கமா, கோப சுருக்கமா? அஹமதுக்கு விளங்காத போது, வெடிச் சிரிப்பாக சிரித்து, இதுலே என்ன டவுட்டுங்கனி ? என்றார் முஹம்மது நானா.
அஹமது உனக்கு சுன்னத்தா செய்றாஹ? அப்ப உனக்கு இருக்கு என்று கூட்டாளிவோல்லாம் பயமுறுத்திட்டானுவோ நானா. அதுதான் சுன்னத் செஞ்சா உசுரு போகுற மாதிரி வலிக்குமா நானா?
முஹம்மது நானா ஒரு கலைஞர் அபிமானி. கலைஞர் போல பேசி காட்டுவார் கலைஞரை பற்றி சிலாகித்தும் பேசுவார் ஆனால் அஹமதின் வாப்பா அதற்கு நேர் எதிர் எம்.ஜி.ஆர். ரசிகர் அவர் எம்.ஜி.ஆர் பற்றிய சிலாகிப்பும், அவரின் அரசியல் செயல்பாடுகள் என அஹமது வீட்டு திண்ணையில் பேசி தினம் வட்ட மேசை விவாதம் போல் அங்கு பேச்சு நடக்கும் ஆனாலும் பேச்சுக்கள் சில வரம்புக்குள் இருந்து நாகரிகமாக நடக்கும்.
அந்த திண்ணையில் அமர்ந்து அவர்கள் பேசும் அரசியல் பேச்சுக்களை அஹமது உற்று நோக்குவான். ஆனாலும் அந்த அரசியல் பேச்சுக்கள் அவனுக்கு விளங்காது. எதனால் முஹம்மது நானாவுக்கு கலைஞரை பிடித்தது? என்று அவனுக்கு தெரியாது. அதே போல் அஹமதின் வாப்பாவுக்கு எம்ஜிஆரை பிடித்ததும் ஏன்? என்றும் அவனுக்கு தெரியாது.
முஹம்மது நானா எல்லாம் விஷயத்திலும் கருத்தாக பேசுவார் அவனுக்கு வரும் சந்தேகங்களுக்கும், பொது அறிவு வினாக்களுக்கும் பதில் அளிப்பார் என்கிற நம்பிக்கையில் முஹம்மது நானாவிடம் தன் சந்தேகத்தை போக்க கேட்டிருப்பான் என்று நினைத்து முஹம்மது நானா பதில் அளித்தார்.
சுன்னத் பன்றதுக்கு மின்னாடி உங்களுக்கு நல்லா தீனி கொடுப்பாஹங்கனி, நல்லா சாப்ட்டு ஒடம்பு ஏத்தும், சின்னத் பண்ணி முடிஞ்சதும் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, மால்டோவா'ல்லாம் போட்டு கொடுப்பாஹ.. பால் முட்டை, தெம்புக்கு களி இதெல்லாம் கிடைக்குங்கனி.
ஆனாலும் சுன்னத் பன்ற வலியை மட்டும் சொல்லுங்களேன் என்று அஹமது அவரிடம் மீண்டும் வேண்டினான்.
சின்னத் என்பது ஆர்னிகா நாசர், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் நாவல், கதை போன்று திகில் மர்மம் நிறைந்த காரியம் என்று எண்ணி விட்டான் போலும், ஏன் எனில்
அவனின் நண்பர்கள் காட்டிய அச்சம் மட்டுமல்ல.. சுன்னத் செய்பவர் அவனை பார்த்து 'உங்களுக்கு அடுத்து நான் தாங்கனி அறுப்பேன்' என்று அப்பப்ப அவனை காணும் போதெல்லாம் நக்கலாக கூறுவதை வைத்து அவனுக்கு ஏற்பட்ட அச்சமும் திகிலுட்டும் நினைவுகளுமே அவனை முஹம்மது நானாவிடம் கேட்க வைத்தது.
மீண்டும் தொடர்ந்தான் அஹமது 'முஹம்மது நானா ஒரு சிலருக்கு மூனு தடவை எல்லாம் சுன்னத் செய்வாஹளா? என் கூட்டாளியின் கூட்டாளிக்கு அப்படி பன்னதாக என் கூட்டாளி சொன்னான் நானா'
அப்படில்லாம் பண்ண மாட்டாஹங்கனி ஒரு தடவை தான் அதெல்லாம் வலிக்காது நீம்போ சாப்புடுற சாப்பாடுலேயே வலி எல்லாம் போய்டுங்கனி.. கவலை படாதியும் உங்களுக்கு பண்ணும் போது நான் வலிக்காம பண்ண சொல்றேன் மரப்புக் கட்டி மறைக்கிற எடத்துலே நா இப்பேன் சரியா? இப்ப போய்ட்டு வாரும் என்றுக் கூறி அஹமதை அனுப்பி வைத்தார் முஹம்மது நானா.
எளிமையாக செய்யவேண்டிய கத்னா என்பதை அன்றைய நாட்களில் ஒரு சிறிய திருமணம் போன்றும் அதனை ஒத்த சடங்குகள் இதிலும் செய்யப்பட்டு வந்தது.
சேராக் கட்டி குதிரை ஊர்வலம்,
பணி எடுப்பு போன்று தலைமுடி எடுத்தல் இன்னும் சில இத்யாதி.
இன்னும் சில ஊரில் கத்னாவை 'சுன்னத் கல்யாணம்' என்றே அழைப்பார்கள்.
அன்றைய கத்னா தலைமுடி கட்டிங் என்பது இன்றைய ஆப்பிரிக்கன் டேபர் ஃபேட் (African Taper Fade) போன்று முக்கோண கட்டிங்
😀 ஆங்கில எழுத்தான எம்(M) யை இழுத்து போட்டு எழுதியது போல் இருக்கும்.
சிறு பையன்கள் அந்த கட்டிங் போட்டிருந்தால் கத்னா செய்தவர்கள் என்று கருதி மேலும் அவர்கள் மேல் இடிபடாமல் பார்த்து மற்றவர்கள் நகர்ந்து போய்விடுவார்கள்.
'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை' என்கிற ரகமாக இருக்கும்
😀
அன்று அஹமதுக்கு கத்னா செய்யும் நாளும் வந்தது.
அன்றைய தினம் காலை 6:30 மணி. அஹமதுவின் நண்பர்கள் புடை சூழ அவனை சுற்றி நின்றிருந்தனர்.
அஹமதுக்கு சிகப்பு துணி போர்த்தி காலில் பவுன் காப்பு அணிவித்து நெஞ்சை மோர்ந்து அவனின் தாயாரும் பாட்டியாரும் கண்ணீர் மல்க அவனை கொல்லைப்புறத்துக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக் கொல்லையில் ஒரு நெல் உரலை திருப்பி போட்டு அதில் உட்கார வைத்து செய்ய வசதியாக அமைக்கப்பட்டு இருந்தது.
கத்னா செய்பவர் தனது கத்னா செய்யும் உபகரணங்களை சரி செய்துக் கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு அஹமதுவின் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
'அஹமது நான் நல்லா விசாரிச்சுட்டேன் சுன்னத் செய்யும் போது அவ்வளவா வலிக்காதுன்னு சொன்னானுவோடா அதனாலே பயப்படாதே' என்றான் அந்த பயம் காட்டிய நண்பன்
சுன்னத் பன்ற நேரத்துலே பச்ச எலையை பார்த்துக்க என்றான் வேறொருவன்
ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை கூற..
இல்லை .. 'தீன் தீன்' என்று வேகமா சொல்ல சொன்னாரு முஹம்மது நானா அதை தான் சொல்ல போறேன் என்றான் அஹமது.
கத்னா செய்பவர் தயார் ஆனதும் அஹமதுவை நடு செண்டர்லே உட்காருங்கனி என்று கூறி உரலில் உட்கார வைத்து, அவனது இரண்டு கையையும் பிடித்து காலோடு இணைத்து கழுத்தை திருப்பி கத்னா என்னும் காரியம் செய்து முடிக்கப்பட்டது.
'தீன் தீன்' என்கிற பெரிய அழுகை சப்த குரலோசையோடு அஹமதுவின் கத்னா காரியம் முடிந்தது.
தரையில் விரித்து கிடத்திய சிகப்பு துணியில் படுத்தும், எரவானத்தில் கட்டிய கயிறில் தொங்கிய சிகப்பு துணியில் போர்த்தியும் வைக்கப்பட்டான் அஹமது.
காயம் விரைவில் ஆற வெற்றிலையில் நிஃபா ஸல்ஃபான் (NebaSulf) பவுடர் மருந்து போட்டு ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார் கத்னா செய்தவர்.
அஹமதுக்கு சிறிது வலி குறைந்து பேச ஆரம்பித்தான்..
உங்க பையனை பாருங்கனி முழு கம்யூனிஸ்டு மாறி இருக்கான் என முஹம்மது நாநா கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார். நல்லவேளை இது உங்க கட்சி கலர் இல்லை என அஹமதின் வாப்பாவும் மாறி, மாறி கிண்டலடித்தனர்.
முஹம்மது நானா நீங்க சொன்ன மாதிரி 'தீன் தீன்' சொன்னேன் அதனால் கொஞ்சம் வலி தெரில என்றான் அஹமது.
அப்படில்லாம் இல்லங்கனி நீங்க திண்ட தீனு தான் உங்க ஒடம்புல வலிமையை கொடுத்து வலியை குறைச்சிருக்கு
தீன் தீன் சொன்னதே நீம்ப திண்ட தீனியால் வலிக்காமல் இருக்கவும்,கத்னா செய்து தீன் என்ற வழியில் வந்ததற்காவும் தாங்கனி என்று சிலேடையாக கூறினார் முஹம்மது நானா.
அப்ப தீனும் தீனியுமா? நல்லா இருக்கே..! இதையே உங்க முத்தமிழ் அறிஞர் இந்த இரண்டு தீனை பத்தி தமிழில் என்ன சொல்லிருப்பார் என அஹமதுவின் வாப்பா நக்கலாக கேட்க
"இறை(தீன்) வழியில் நின்று இரை(தீன்) யை தின்று.." என்று முஹம்மது நானா ஆரம்பிக்க ஓய்.. போதுங்கனி.. என்று அஹமது வாப்பா சிரித்துக்கொண்டே அதை இடை நிறுத்தி விட்டார்.
இன்று கத்னா(அரபு) என்கிற விருத்த சேதனம் (circumcision) எவ்வளவு இலகுவாக செய்யக்கூடியதாக மாறிவிட்டது. ஒரே நாளில் கத்னா செய்த பிள்ளைகள் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அன்று ஒரு மாதத்திற்கு கத்னா செய்த சிறுவர்கள் கைலி மட்டும் அணிந்து அதை தூக்கி பிடித்தவாறு நடப்பார்கள்(அதற்கு குதிரை ஓட்டுகிறாயா? என பெயர் வேறு)
மேலும் அன்று இதற்கு தான் எத்தனை பெரிய பயம், இதற்காக எத்தனை பொருளாதார வீணடிப்புகள்.
-
ஊர் நேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக