வெள்ளி, 2 ஜனவரி, 2009

ஏன்? எதற்கு? எப்படி?

ஊரில் எப்போதும் பரபரப்பான போக்குவரத்து நிறைந்த கச்சேரி தெரு - சஞ்சிவீராயர் கோயில் தெரு சந்திப்பில் வசதியாக நாற்காலி போட்டு அமர்வது என்பது சாத்தியம் என்றால், அது பெரும்பாலும் கம்யூனிஸ (CPI) தோழர்களாலேயே முடிகிறது. அந்த அளவிற்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையேனும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று மக்கள் பிரச்சினைகளை பட்டியலிடுகிறது.

அந்த வகையில் இன்று (02-01-2009) கச்சேரி தெரு முனையில், வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு, நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியப்போக்கு என்று நீண்ட பட்டியலுடன், அவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் போரட்டத்தை நடத்தியது.

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்வுண்ணாவிரதத்தில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

என்னதான் இவர்கள் மக்கள் பிரச்சினைகள் என்று பட்டியலிட்டாலும், இவர்களின் போராட்டங்களைப் பார்த்து மிஸ்டர் பொதுஜனமோ ஏன்? எதற்கு? எப்படி? என்று தலை சொறிந்துதான் செல்கிறார்.

3G - புதிய தொழில்நுட்பம்



கடந்த வாரம் தான் இந்தியாவில் 3ஜி வசதியை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி இருக்கிறது நமது மத்திய அரசு. கிட்டத்தட்ட உலகத் திறவுகோல் விழா அது!

3ஜி என்றால் 3rd Generation - 3-வது தலைமுறை தொழில்நுட்பம் என்று அர்த்தம். கம்ப்யூட்டர்களின் அதிவேக இன்டர்நெட் வசதிக்கு பிராட்பாண்ட் இணைப்பைப் பயன்படுத்துவார்கள். அதற்குக் கொஞ்சமும் குறையாத ஹைஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை செல் போனில் சாத்தியப்படுத்தும் டெக்னாலஜிதான் 3ஜி. 2001-ல் ஜப்பானில் அறிமுகமான இந்த டெக்னாலஜி, உலகம் முழுக்கப் பரவி இப்போதுதான் இந்தியா வந்து சேர்ந்து இருக்கிறது.

3ஜி-யில் வீடியோ கால் வசதி மெகா ப்ளஸ். அதாவது, எதிர்முனையில் பேசுபவர் ஸ்க்ரீனில் தெரிவார். நமது முகமும் அவருடைய ஸ்க்ரீனில் தெரியும். டி.வி. நிகழ்ச்சிகளை மொபைலிலேயே லைவ்வாகப் பார்க்கலாம். வீட்டிலோ, அலுவலகத்திலோ சின்ன கேமராவைப் பொருத்திவிட்டு, அதை மொபைலுடன் இணைத்துவிட்டால், உட்கார்ந்த இடத்திலிருந்தே அங்கு நடப்பவற்றைக் கண்காணிக்கலாம். விரல் நுனியில் பங்கு மற்றும் வானிலை நிலவரங்கள், வேர்ட், பிடிஎஃப் கோப்புக்களை படிக்க முடியும். பிளாக் எழுதுவது ஆர்குட், பேஸ்புக், நண்பர்களுடன் சாட் செய்வது என எல்லாமே சிம்பிள், ஆடியோ, வீடியோ, யூ-டியூப் டவுன்லோடுகள் எக்ஸ்பிரஸ் வேகம். 3ஜி வசதியுடன் வரும் லேப்டாப்களில் 3ஜி சிம்கார்டைப் பொருத்தி, இன்டர்நெட் இணைப்பைப் பெற முடியும். வை-ஃபை வசதி தேடி அலைய வேண்டியது இல்லை.

கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் மொபைல் கணக்கான சங்கதிதான் இது. ஆரம்பத்தில் சேவைகள் காஸ்ட்லியாக இருந்தாலும், சந்தாதாரர்கள் அதிகரித்தால் சாமானியர்களின் மொபைலுக்கும் எட்டும் வசதியாக 3ஜி இருக்கும்!

3ஜி வசதிகொண்ட செல்போன்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. ஆனால், நெட்வொர்க் ஆபரேட்டர்களிடம் இச் சேவை வழங்கும் வசதியில்லை. இப்போதுதான் அதற்கான வாசல் திறந்திருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே ஆப்பிள் ஐ போனில் ஆரம்பித்து மற்ற 3ஜி வசதிகள் கொண்ட செல்போன்களை வாங்கிக் குவித்துவிட்டனர் இந்திய மக்கள்.

3ஜி போன்களின் மைனஸ் என்று பார்த்தால் .... விலை குறைவான செல்போன்களில் இத்தகைய வசதி சாத்தியமில்லை. காரணம், சின்ன ஸ்க்ரீன்களில் இந்த 3ஜி வேகம் சாத்தியமாகாது. டைப் செய்ய வேண்டிய கீ-பேடும் இதில் வசதியாக இருக்காது. டச் ஸ்க்ரீன் அல்லது மெகா சைஸ் ஸ்க்ரீன் கொண்ட போன்களில்தான் இந்த வசதியை அசத்தலாக அனுபவிக்க முடியும். 3ஜி வசதிக்கான கட்டணங்களும் இதுவரை துல்லியமாக நிர்ணயிக்கப்படவில்லை.

3ஜி வசதியை அனுமதிக்கும் சில மொபைல்களின் பட்டியல்...
ஆப்பிள் ஐபோன் 3 ஜி - ரூ. 30000,
நோக்கியா என்96 - ரூ. 33,300,
நோக்கியா ஈ63 - ரூ 22,100 ,
நோக்கியா 7900 - ரூ. 17400,
நோக்கியா என்85 - ரூ. 23,600,
சாம்சங் ஓம்னியா - ரூ. 31,250,
ஸோனி எரிக்ஸன் சி905 - ரூ. 31,250,
ஸோனி எரிக்ஸன் ஜி705 - ரூ. 28,000....
நன்றி ஆ.வி.

வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டும் பரங்கிப்பேட்டையும்

ஜனவரி 1 - ஆங்கில புதிய ஆண்டு பிறப்பு என்றிருந்தாலும், இதை ஏதோ ஒரு வழியில் கொண்டாட்டமாகவே வெகுஜன மக்கள் எண்ணுகிற வேளையில், சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இது கொண்டாட்டமாக ஆர்கெஸ்ட்ரா, வீதி உலாக்கள் என்று நீண்டிருந்தது. புத்தாண்டு முதல் நாளே, அதாவது அன்று இரவே (NewYear Eve) இதன் அடையாளங்கள் தெரிந்துவிடும்.

ஆனால் இந்த புதிய ஆண்டிற்கு, எவ்வித அடையாளமும் காணப்படாமல் இருந்தது. சஞ்சீவிராயர் முனையில் மட்டும் (முன்னால்) மியான் கடையில் லேசான அலங்கார விளக்கோடு Happy New Year என்கிற வாழ்த்து வாசகத்தோடு கூட்டமே இன்றி, இரவு 12 மணி வரை வெறிச்சோடியே காணப்பட்டது.

01-01-2009; 00:00 சரியாக துவங்கியவுடன் ஊரின் பக்கவாட்டுகளிலிருந்து பக்காவாக ஒலித்தது வெடியும் வேட்டு சத்தங்களும். பல்ஸரும், அப்பாச்சிகளும் சரக்-புரக் என்று சிமெண்ட் சாலைகளில் இனம்புரியாத ஓசைகளை எழுப்பியவாறு சோழாவரம் ரேஸ் ஒன்றை நடத்திவிட்டு சென்றது.

அதன் பிறகு மியான் கடையில் டீ விற்பனையும் சூடு பிடித்துக்கொண்டது.
இதனிடையே நள்ளிரவு 2 மணி வரை ஊரின் பல முக்கிய வீதிகளில் இளைஞர் பட்டாளம் ஒன்று கார் ஒன்றில் அதன் உள்ளேயும் மேற்கூரையிலும் உட்கார்ந்தவாறு அதிரடி இசை முழங்க, கைத்தட்டல்கள் மற்றும் வெடிகளை வெடித்தவாறு தூக்கத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியூட்டிவிட்டு சென்றது.

இவர்களை புகைபடமெடுக்க முயன்ற தருணத்தில் சுதாகரித்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டது.