வெள்ளி, 3 ஏப்ரல், 2009

10 வயது மாணவி தற்கொலை? விளையாட்டு விணையானது.

பரங்கிப்பேட்டை வானுவர் தெருவில் வசிக்கும் பூபதி என்பவரின் மகள் ஸ்வேதா (வயது 10). சாக்ரடீஸ் நர்ஸரி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த இம்மாணவி நேற்று இரவு தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினாள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தினால் இம்மாணவியின் பெற்றோர் உட்பட அப்பகுதி மக்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.


படிப்பில் முதல் மதிப்பெண் பெற்று அறிவாற்றல் நிறைந்த மாணவியாக திகழ்ந்த ஸ்வேதாவின் தற்கொலை எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக தூக்கு போட்டு கொண்டாள் என்று விசாரித்ததில் தன் சகோதரனுடன் விளையாட்டாக செய்து காண்பித்திருக்கிறாள். 'பார்! நான் தூக்குப் போட்டுவிட்டு 5 நிமிடம் கழித்து உன்னுடன் மறுபடியும் பேசுவேன்' என்று. கட்டில் மீது சிறிய நாற்காலி போட்டு துப்பட்டாவால் (ஷால்) ஃபேனில் தூக்கு போட்டு விளையாட்டாக செய்ததின் விளைவாக கடைசியில் இறந்தே போய்விட்டாள்.

எல்லையற்ற துன்பத்தில் ஆழ்திருக்கும் இவளது பெற்றோர் அளவிலாத துக்கத்தில் இருக்கின்றனர். இது குறித்து சாக்ரடீஸ் பள்ளியின் தாளாளர் அர்ஜூனனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தொடர்ந்து எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து வந்தாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த குளோபல் வார்மிங் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் (13 பள்ளிகள் பங்குபெற்ற) முதல் பரிசு பெற்றவள். இவளுடைய இழப்பு எங்களை மிகவும் பாதித்துள்ளது" என்று கூறினார்.

இது குறித்து சமூக ஆர்வளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'இதற்கெல்லாம் காரணம் சீரியல் - சினிமா போன்றவைதான். பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சீரியலில் காட்டப்படும் விபரீதங்களை பார்த்து இன்றைய பிள்ளைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்டுகின்றார்கள் என்றார்.

புதன், 1 ஏப்ரல், 2009

தேர்தல் நடைமுறை விளக்கங்கள்

தேர்தல் நடைமுறை விளக்கங்கள்

யார் தேர்தலில் போட்டியிட முடியும்?

1. நாடாளுமன்ற மக்களவை (லோக்சபா) அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் போட்டியிட குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்?

வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளன்று ஒருவருக்கு வயது குறைந்தது 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

2. நான் எந்த ஒரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவாக செய்து கொள்ளவில்லை. நான் தேர்தலில் போட்டியிட முடியுமா?

முடியாது. தேர்தலில் போட்டியிட நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் நீங்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.

3. நான் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ளேன். நான் நாடாளுமன்றத் தேர்தலில் வேறொரு மாநிலத்தில் இருந்து போட்டியிட முடியுமா?

முடியும். நீங்கள் நாட்டின் எந்தத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியும். ஆனால், அஸ்ஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்கள், லட்சத் தீவுகள், சிக்கிம் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிட முடியாது.

4. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், மற்றொரு மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?

முடியும். அவர் எந்த மாநிலத்தில் இருந்தும் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருநது போட்டியிட முடியும்.

5. ஒருவர் ஒரு மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் மற்றொரு மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?

முடியும். அவர் லட்சத்தீவுகள், அஸ்ஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் உஷீமீள தொகுதிகள் மற்றும் அஸ்ஸாமின் பழங்குடியினர் பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாம்.

6. ஒருவர் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், அவர் மற்றொரு மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாமா?

முடியாது.

7. ஒருவர் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர். ஆனால் மற்றொரு மாநில பழங்குடியின உறுப்பினர். அவர் வாக்காளராக உள்ள மாநில சட்டப்பேரவைக்கு பழங்குடியினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?

முடியாது.

8. ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடியினர் சமூகத்தையோ சேர்ந்தவராக இருந்தால், பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட முடியுமா?

முடியும்.

9. ஒருவர் ஏதே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனைபெற்றவர். அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

முடியாது.

10. ஒருவேளை அந்த நபரின் மேல்முறையீடு பைசல் செய்யப்படாத நிலையில் அவர் ஜாமீனில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா?

முடியாது. ஒருவர் தண்டனை பெற்ற பிறகு ஜாமீனில் இருந்தாலும், அவரது மேல் முறையீடு பைசல் செய்யப்படாது இருந்தாலும் உச்சநீதி மன்றத்தின் முடிவுப்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் ஆவார். ஆனால், அவர் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் அவர் போட்டியிட முடியும்.

11. ஒருவர் சிறையில் இருந்தால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

முடியாது. இத்தகையவர்கள் சிறையில் இருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது. சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் பொழுதும் காவல்துறையின் சட்டப்பூர்வ காவலில் இருந்தாலும் அவர் வாக்களிக்க முடியாது.

12. ஒருவர் ஏதோவது ஒரு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

முடியும். அவர் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க முடியும்.

பிணையத் தொகை

13. ஒவ்வொரு வேட்பாளரும் பிணையத் தொகையை செலுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட வேண்டும்?

ரூ. 10 ஆயிரம்.

14. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது பழங்குடியினருக்கு இந்தப் பிணையத் தொகையில் ஏதேனும் சலுகை அளிக்கப்படுமா?

ஆமாம், இந்தத் தொகை ரூ. 5 ஆயிரம் ஆகும்.

15. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?

ரூ. 5 ஆயிரம்.

16. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பு அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு பிணையத் தொகையில் சலுகை ஏதேனும் உண்டா?

ஆம், இது ரூ. 2500 ஆக இருக்கும்

17. ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடி இனத்தவராகவோ இருந்து பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?

நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தத் தொகை ரூ. 5000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.2500.

18. எந்த வேட்பாளர் இந்தப் பிணையத் தொகையை இழக்கிறார்?

ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கை பெறத் தவறும் தோல்வியுற்ற வேட்பாளர் இந்த பிணையத் தொகை இழப்பார்.

வேட்பு மனு

19. நான் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருந்தால் எனது வேட்பு மனுவை எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்?

ஒருவர் போதும்.

20. நான் சுயேச்சை வேட்பாளராகவோ, அல்லது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் எனது வேட்பு மனுவை எத்தனை பேர் முன் மொழிய வேண்டும்?

பத்து பேர்.

21. ஒருவர் நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ அவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எத்தனைத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியுமா?

முடியாது. பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ 2க்கு மேற்பட்ட தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியாது.

22. அதேசமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?

ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத் தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத் தேர்தல்களில் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடியாது.

23. ஒரே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட எத்தனை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்?

நான்கு.

24. தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் ஊர்வலமாகச் செல்லலாமா?

முடியாது. தேர்தல் அதிகாரியின் அலுவலத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வர அதிகபட்சமாக மூன்று வாகனங்கள் தான் அனுமதிக்கப்படும். அதைப் போன்றே வேட்பாளரையும் சேர்த்து அதிகாரியின் அலுவலகத்திற்குள் அதிகபட்சமாக 5 பேர் தான் அனுமதிக்கப்படுவார்கள்.

25. தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது எத்தனைபேர் அனுமதிக்கப்படுவார்கள்?

வேட்பாளர், அவருடைய தேர்தல் பிரதிநிதி, மனுவை முன்மொழிபவர், மற்றும் ஒருவர் (அவர் வழக்குரைஞராக இருக்கலாம்) வேட்பாளரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் வேட்பு மனு பரிசீலனையின் போது இருக்கலாம்.

26. ஒரு வேட்பாளரின் வேட்பு மனு மீது ஆட்சேபம் எடுத்துரைக்கப்பட்டால், இந்த ஆட்சேபத்திற்குப் பதில் அளிக்க வேட்பாளர் கால அவகாசம் கோரினால், தேர்தல் அதிகாரி அவகாசம் தர முடியுமா?

முடியும். தேர்தல் அதிகாரி ஆட்சேபனை மீதான விசாரணையை அடுத்த நாள் வரைக்கோ, அல்லது அதற்கு அடுத்த நாள் வரைக்குமோ ஒத்தி வைக்கலாம். ஆனால் அந்த கால அவகாசம், அன்று முற்பகல் 11 மணி வரைதான் அளிக்கப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ளுவதற்கான நாள் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன், தேர்தல் அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.

உறுதிமொழி அல்லது வாக்குறுதி

27. வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ அவசியமா?

ஆமாம்.

28. வேட்பாளர் ஒருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோ அல்லது வாக்குறுதி அளிப்பதற்கோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் யார்?

எந்த ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்கும் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் அந்தத் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி மற்றும் துணைத் தேர்தல் அதிகாரியாவார். சிறையில் அடைக்கப்பட்ட அல்லது முன்னெச்சரிக்கைக் காவலில் வைக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை சிறை கண்காணிப்பு அலுவலரோ அல்லது காவல் முகாமின் தலைமை அலுவலரோ உறுதிமொழி செய்துவிக்க அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் ஆவார்கள். உடல் நலக்குறைவாலோ அல்லது மற்ற காரணங்களுக்காகவே மருத்துவமனையிலோ அல்லது வேறெங்கிலும் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்களைப் பொறுத்தவன. அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அல்லது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் வெளிநாட்டில் இருந்தால், இந்திய தூதுவர் அல்லது ஹைகமிஷனர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ராஜீய பிரதிநிதி ஆகியோருக்கும் உறுதி மொழியை செய்து வைக்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

29. வேட்பாளர் எப்பொழுது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்?

வேட்பாளர் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த உடனேயே நேரில் வந்து உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவேண்டும். எவ்வாறாகினும் வேட்பு மனுத்தாக்கல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளுக்கு முந்தைய நாளே உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு:

30. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யார் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறார்?

தேர்தல் அதிகாரி.

31. ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?

ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்கு வேட்பாளர் தமது வேட்பு மனுவில், சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகியிடமிருந்து தாம்தான் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் என்பதைத் தெரிவிக்கும் 'B' படிவத்தைச் சமர்பிக்க வேண்டும். 'B' படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை ஒப்புக்கொண்டு கட்சி அலுவலர் ஒப்பமிட்டுத் தர வேண்டும். இந்த அலுவலரின் மாதிரி கையப்பம். 'A' படிவத்தின் மூலம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்கப் படவேண்டும். இந்த இரண்டு படிவங்களும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தினத்தில் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

32. அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் நகல் கையப்பம், ரப்பர் முத்திரை போன்றவற்றுடன் A மற்றும் B படிவங்களை ஒரு வேட்பாளர் தாக்கல் செய்ய முடியுமா?

A மற்றும் B படிவங்களில் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல நிர்வாகி மையால் கையப்பமிட்டு இருக்க வேண்டும்.

33. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேச்சை வேட்பாளர், ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னங்களில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள முடியுமா?

முடியும். இதற்காக இந்த வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சின்னங்களில் 3-ஐ தெரிவு செய்து அவற்றின் முன்னுரிமையைத் தெரிவித்து தமது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.

34. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் A மற்றும் B படிவங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா?

ஆமாம்.

தேர்தல் பிரச்சாரம்:

35. தேர்தல் பணிக்காக வாகனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?

கிடையாது. எத்துனை வாகனங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (இயந்திரத்தால் அல்லது மோட்டாரால் இயங்கும் ஊர்தி மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்) ஆனால், இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கு தேர்தல் அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்று அந்த அனுமதிக் கடிதம் (அசல் கடிதம், நகல் அல்ல) வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் தெளிவாகத் தெரியும்படி ஒட்டப்பட வேண்டும். இந்த ஒப்புதல் கடிதத்தில் ஊர்தியின் எண், எந்த வேட்பாளருக்காக பயன்படுத்தப்படுகிறதோ அவர் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காகும் செலவு அந்த வேட்பாளரின் கணக்கில் கொள்ளப்படும்.

36. மாவட்டத் தேர்தல் அதிகாரி / தேர்தல் அதிகாரியிடமிருந்து அனுமதி பெறாமல் ஊர்தியை தேர்தல் பணிக்காக பயன்படுத்த முடியுமா?

முடியாது. இந்த மாதிரி ஊர்திகள் அங்கீகரிக்கப் படாதவைகளாகவே கொள்ளப்பட்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவின் IX - A பிரிவின் கீழ் தண்டனைப் பெறத்தக்கதாகிவிடும். பிரச்சார பணியிலிருந்து விலக்கப்படும்.

37. சம்பந்தப்பட்ட கட்சி அல்லது வேட்பாளரின் சுவரொட்டி விளம்பர அட்டை, பதாகை, வேட்பாளரின் கொடி போன்றவற்றை ஊர்வலத்தின் போதும், வேட்பாளரின் ஊர்திகளில் கட்டிச்செல்லும் போதும் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?

விளம்பர சுவரொட்டி அட்டை, பதாகை போன்றவற்றை ஊர்வலத்தின் போது வேட்பாளரின் ஊர்திகளில் வைத்துக் கொண்டு செல்லலாம்.

38. பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் ஊர்திகளின் வெளிப்புறங்களில் புதியவற்றை இணைப்பதற்கும், மாற்றி அமைப்பதற்கும் அனுமதிக்கப்படுமா?

ஒலிபெருக்கி போன்ற வெளிப்புற இணைப்புகளைப் பொருத்துவதற்கும், மாற்று அமைப்பை ஏற்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டம் விதிமுறைக்கு ஏற்பவும், உள்ளூர் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும் அனுமதிக்கப்படும். வீடியோ ரதம் போன்ற சிறப்பு பிரச்சார வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்ட ஊர்திகள் போன்றவற்றிற்கு உரிய அதிகாரியிடமிருந்து தேவையான முன் அனுமதியைப் பெற்ற பிறகு பயன்படுத்தலாம்.

39. கட்சியோ வேட்பாளரோ தாற்காலிக அலுவலகங்களை அமைத்து செயல்படுவதற்கு நிபந்தனைகள் அல்லது வழிகாட்டு நெறிமுறைகள் ஏதேனும் உண்டா?

உண்டு. இந்த மாதிரி அலுவலகங்கள் தனியார் அல்லது பொது இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படக் கூடாது. மத சம்பந்தப்பட்ட இடங்களிலேயோ அல்லது அதன் தொடர்பாக வளாகங்கள், கல்வி நிலையங்கள் அல்லது மருத்துவ மனைகளை ஒட்டிய இடங்கள், தற்போது இருக்கும் வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு உட்பட்ட இடங்கள் ஆகியவற்றில் இவை அமைக்கப்படக் கூடாது. மேலும் இந்த அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சிக் கொடி, கட்சியின் சின்னம், புகைப்படங்களுடன் கூடிய பதாகை போன்றவற்றைத் தான் காட்சிக்காக வைக்கலாம். இந்த அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பதாகையின் அளவு 40x80 மிகாமல் இருக்க வேண்டும். எனினும் இந்த அளவு உள்ளூர் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். உள்ளூர் விதிமுறைகளின்படி பதாகை அல்லது விளம்பரத் தட்டி போன்றவற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டுமென்றால், இந்த விதிமுறைகளே நடைமுறைப் படுத்தப்படும்.

40. பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை எதுவரை நடத்தலாம்?

வாக்குப்பதிவு முடிவடைய நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் நேரத்துடன் முடிவடையும் 48 மணிநேரம் முன்பு வரை கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தலாம்.

41. பிரச்சார நேரம் முடிவடைந்த பின், அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தத் தொகுதியில் இருப்பது குறித்து ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?

உண்டு. அந்தத் தொகுதியில் வாக்காளராக இல்லாது வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றவர்கள் பிரச்சார நேரம் முடிவடைந்த பின் அந்தத் தொகுதியில் தொடர்ந்து இருக்கக் கூடாது. இத்தகையவர்கள், பிரச்சாரம் முடிவடைந்த உடனேயே அந்தத் தொகுதியிலிருந்து வெளியே சென்று விட வேண்டும்.

42. ஒரு மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிக்கும் இந்த மாதிரி நிபந்தனைகள் பொருந்துமா?

ஆமாம். ஆனால், நாடாளுமன்ற மக்களவை / சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறும்பொழுது, ஒரு மாநிலத்தின் பொறுப்பாளராக இருக்கும் கட்சி நிர்வாகியைப் பொறுத்தவரை இந்த நிபந்தனை வலியுறுத்தப்படுவதில்லை. இத்தகைய நிர்வாகிகள், மாநிலத்தின் தலைமையகத்தில் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்தின் போது இவர்களது நடமாட்டம் அல்லது போக்குவரத்து அவர்களது கட்சி அலுவலகத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இடையிலானதாகவே இருக்கும். மேற்கூறிய இந்தக் கட்டுப்பாடு மற்ற எல்லா அலுவலர்களுக்கும் எல்லாத் தேர்தல்களிலும் பொருந்தும்.

43. தேர்தல் நடைமுறையின் போது முக்கியமான நிகழ்வுகளை வீடியோ படமெடுக்க ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா?

உண்டு, ஒரு தொகுதியில் நடைபெறும் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்கள், உரையாற்றும் நிகழ்வுகள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றை பதிவு செய்யவும் வீடியோ படமெடுக்கவும், வீடியோ குழுக்கள் அமைக்கப்படும்.

44. பிரச்சாரத்தின் போது தொப்பி, முகமூடி, துண்டு, வண்ணக் கைக்குட்டைகள் போன்றவற்றை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளதா?

ஆமாம், அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், சேலை, சட்டை போன்ற முக்கிய ஆடைகளை கட்சியோ வேட்பாளரோ வழங்குவதும் விநியோகிப்பதும் அனுமதிக்கப் படமாட்டாது. இத்தகைய செயல்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டாகக் கருதப்படும்.

1952 முதல் 2004 வரை கட்சிகளின் வெற்றி விவரம்

லோக்சபாவிற்கு முதல் தேர்தல் 1952ல் நடந்தது. அது முதல் 2004 வரை தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் கட்சிகள் வெற்றி விவரம்:

(புதுச்சேரி உட்பட மொத்த தொகுதிகள் அடைப்புக்குறிக்குள்)

  • 1952(25): காங்.,-20, உழவர் உழைப்பாளர் கட்சி-4, காமன்வீல்-1,கம்யூ-1, கிஷான்-1, த.தே. காங்.,-1, சுயே-5. (*இரட்டை முறை தேர்தல் 8 தொகுதிகள்)
  • 1957(32): காங்.,-30, சுயே-4, கம்யூ-1 (*இரட்டை முறை 3 தொகுதிகள்)
  • 1962(33): காங்.,-23, தி.மு.க,,-7, கம்யூ-2, சுயே.,1
  • 1967(36): தி.மு.க.,-21, சுதந்திரா கட்சி-6, காங்.,-4, மா.கம்யூ.,-4, சுயே.,-1
  • 1971(36): தி.மு.க.,-21, காங்.,-8, கம்யூ.,-4, ஸ்தாபன காங்.,-1, பா.பி.,-1, சுயே.,-1,
  • 1977(40): அ.தி,மு.க.,19, காங்.,-16, தி.மு.க.,1, ஸ்தாபன காங்-1, கம்யூ.,-3
  • 1980(40): காங்.,-21, தி.மு.க,-16, அ.தி.மு.க.,-2, சுயே.,-1
  • 1984(40): காங்.,-25, அ.தி.மு.க.,-12, தி.மு.க.,-3
  • 1989(40): காங்.,-28, அ.தி.மு.க.,-11, கம்யூ.,-1
  • 1991(40): காங்.,-29, அ.தி.மு.க.,-11
  • 1996(40): த.மா.க.,-20, தி.மு.க.,-17, காங்.,-1 கம்யூ.,-2
  • 1998(40): அ.தி.மு.க.,-18, தி.மு.க,-6, பா.ம.க.,-4, ம.தி.மு.க.,-3, பா.ஜ.,-3 த.மா.கா-3, கம்யூ.,-1 த.ரா.க.,-1, ஜனதா-1
  • 1999(40): தி.மு.க.,-11, அ.தி.மு.க.,-10, பா.ம.க,-5, ம.தி.மு.க.,-4, பா.ஜ.,-4, காங்.,-3, மா.கம்யூ.,-1, எம்.ஜி.ஆர்.கழகம்-1, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க,,-1
  • 2004(40): தி.மு.க.,-16, காங்.,-10, பா.ம.க.,-6, ம.தி.மு.க.,-4, கம்யூ.,-2, மார்க்சிஸ்ட்-2