ஞாயிறு, 24 மே, 2009

தாங்கள் படித்த பள்ளிகளிலேயே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவு செய்யலாம் - கடலூர் கலெக்டர் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை மாணவ-மாணவிகள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல்...

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றுதான் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மட்டும் தங்கள் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பள்ளி மாணவர்களும், தாங்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய...

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், அதே பள்ளியில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்கு செல்லும்போது, தங்கள் இடம் பெற்றுள்ள ரேசன் கார்டு (குடும்ப அட்டை) மற்றும் ஏற்கனவே 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்திருந்தால் அந்த வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் பிளஸ்-2 படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும்.

குடும்ப அட்டையில் பெயர் இருத்தல் அவசியம்

குடும்ப அட்டையில் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெயர் இல்லாவிட்டால், அவருக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இயலாது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பின் பதிவு அடையாள அட்டை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாகவே பள்ளியில் வழங்கப்படும்.

பதிவு செய்பவர்கள் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரத் தேவையில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண் சான்றுகளைபெற உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற கல்வி தகுதிகளை பதிவு செய்ய விரும்புவோர் வழக்கம்போல் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிற மாவட்டங்களில் குடும்ப அடையாள அட்டை உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை உட்பட ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி அடுத்த மாதம் நடக்கிறது

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு ஆள் சேர்க்கும் பணி அடுத்த மாதம் நடக்க உள்ளது.

இது குறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவண்ணாமலையில்

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஜுன் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சோல்ஜர் டெக்னிகல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட் மற்றும் சோல்ஜர் பொதுப் பணியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி, இன்டர்மீடியேட் படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்.

சோல்ஜர் பொதுப் பணி, சோல்ஜர் டெக்னிகல் பணியில் சேரும் நபர்களுக்கு ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வு நடைபெறும்.

ஸ்கிரீன் தேர்வு

சோல்ஜர் பொதுப் பணியில் சேர விரும்பும் வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜுன் 11-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடக்கும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜுன் 12-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடக்கும்.

சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர்களுக்கு ஜுன் 14-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடைபெறும்.

விமானப்படை

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஜுலை 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்களுக்கு, அதிகாரிக்கு கீழ் நிலைப் பதவிகளுக்கான ஆள் சேர்ப்பு நடக்கும்.

இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் 15-ந் தேதி கிடைக்கும்

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் ஜுன் மாதம் 15-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதிப்பெண் பட்டியல்

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜுன் மாதம் 15-ந் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜுன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வழங்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜுன் 5-ந் தேதி ஆகும்.

ஜுலையில் சிறப்புத்தேர்வு

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜுலை மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட அலுவலகங்களில் கிடைக்கும்.

சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜுன் 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் அல்லது பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு வசந்தி ஜீவானந்தம் கூறினார்.